Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் தாள்களை அளவுக்கு அதிகமாக அச்சிடும் பாகிஸ்தான் - என்ன நடக்கிறது?

Webdunia
சமீபத்திய ஆண்டுகளில், பாகிஸ்தானில் புழக்கத்தில் உள்ள ரூபாய் தாள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2020 ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த  நிதியாண்டில், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாய் தாள்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

ஒரு நிதியாண்டில் ரூபாய் தாள்களின் எண்ணிக்கை 1.1 டிரில்லியன் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும்.
 
பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியைக் கண்காணிப்பவர்களின் கூற்றுப்படி, இந்த வளர்ச்சி அசாதாரணமானது மற்றும் பொருளாதாரத்தில் எதிர்மறையான  தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
 
பணத் தாள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றால், பழைய தாள்களை அரசாங்கம் புதிய தாள்களுடன் மாற்றியுள்ளது என்று அர்த்தம். மாற்றப்பட்டவை  தவிரவும், ஏராளமான புதிய ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.
 
சந்தையில் தாள்களின் கொடுக்கல், வாங்கலின் தேவையை சமப்படுத்த, புதிய தாள்கள் பொதுவாக அச்சிடப்படுகின்றன. இது ஓரளவு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஆனால் புழக்கத்தில் உள்ள தாள்களின் எண்ணிக்கையில் அசாதாரண வளர்ச்சி என்றால் நிறைய தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன என்று அர்த்தம்.
 
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ரூபாய் தாள்களை அச்சிடும் ஆவணங்களை உருவாக்கிய 'செக்யூரிட்டி பேப்பர்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின், நிதி இருப்பும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் லாபம் கடந்த நிதியாண்டில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமாக  அதிகரித்துள்ளது.
 
பாகிஸ்தானில் புழக்கத்தில் இருக்கும் தாள்களின் எண்ணிக்கை எந்த நேரத்தில் அதிகரித்துள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
 
ஈ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போக்கு அதிகரித்துள்ள போது, குறிப்பாக ஆன்லைனில் வங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் அதிகரித்துள்ள போது இது நிகழ்ந்துள்ளது.
 
வருடாந்திர அடிப்படையில் புழக்கத்தில் உள்ள ரூபாய் தாள்கள் மற்றும் நாணயங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
 
பாகிஸ்தானில் உள்ள மத்திய வங்கியின் இணையதளத்தில், கடந்த எட்டு நிதி ஆண்டுகளில் புழக்கத்தில் இருந்த ரூபாய் தாள்கள் மற்றும் நாணயங்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் உள்ளன.
 
அதன்படி , 2012ஆம் நிதியாண்டின் இறுதியில் புழக்கத்தில் இருந்த ரூபாய் தாள்கள் மற்றும் நாணயங்களின் எண்ணிக்கை 1.73 ட்ரில்லியன் ஆகும். இது அடுத்த ஆண்டு 1.93 ட்ரில்லியனாக அதிகரித்தது.
 
2014ஆம் நிதியாண்டின் இறுதியில், இவற்றின் எண்ணிக்கை 2.17 ட்ரில்லியனாக அதிகரித்தது, அடுத்த ஆண்டு இது 2.55 ட்ரில்லியனை எட்டியது.
 
2016இல், புழக்கத்தில் உள்ள ரூபாய் தாள்கள் மற்றும் நாணயங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி 3.33 ட்ரில்லியனாக இருந்தது.
 
இது 2017ஆம் ஆண்டு 3.91 ட்ரில்லியனாக அதிகரித்தது. 2018ஆம் நிதியாண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 4.38 ட்ரில்லியனை எட்டியது, அடுத்த ஆண்டு மிகப்பெரிய அதிகரிப்பு கண்டது. இது அதிகபட்சமாக 4.95 ட்ரில்லியனாக முடிந்தது.
 
இது கடந்த 2020 நிதியாண்டில் 6.14 ட்ரில்லியன் என்ற அளவில் முடிவடைந்தபோது அதன் எண்ணிக்கையில் அசாதாரணமானதாக இருந்தது.
 
ஏ.கே.டி செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஃபரீத் ஆலமின் கூற்றுப்படி, கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை வளர்ச்சி மிக அதிகமாக இருந்தது.
 
முந்தைய அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்கிறார் ஃபரீத் ஆலம். அரசாங்கம் அதிக ரூபாய் தாள்களை அச்சிடுகிறது, இதன் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
புழக்கத்தில் உள்ள பணத்தின் அதிகரிப்பிற்கு காரணம்?
 
பாகிஸ்தான் , சர்வதேச செலாவணி நிதியத்துடன் செய்துகொண்ட ஓர் ஒப்பந்தத்தின் கீழ், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தானிடம் ( இது பாகிஸ்தானின் மத்திய  வங்கி) இருந்து அரசு கடன் வாங்காத நேரத்தில், பழைய தாள்களுக்கு எதிரான புதிய தாள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
பட்ஜெட் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, வணிக வங்கிகளிடமிருந்து, திறந்த சந்தை நடவடிக்கை மூலம் அரசாங்கம் பணம் சேகரிக்கும்.
 
முன்பே, அரசாங்கங்கள் ஸ்டேட் வங்கியிடமிருந்து கடன்களைப் பெற்றுக் கொண்டிருந்தது , இந்த தேவையை பூர்த்தி செய்ய ஸ்டேட் வங்கி புதிய ரூபாய் தாள்களை அச்சிட்டுக் கொண்டிருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். .ஆனால் இப்போது சர்வதேச செலாவணி நிதியத்தின் ஒப்பந்தம் காரணமாக,  ஸ்டேட் வங்கியில் இருந்து கடனாகப் பணம் வாங்கும் வழி தடைபட்டுள்ளது.
 
இதுதொடர்பாக, பிரபல பொருளாதார நிபுணர் டாக்டர் கைசர் பெங்காலி, புழக்கத்தில் உள்ள ரூபாய் தாள்கள் மற்றும் நாணயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, அதிக எண்ணிக்கையில் புதிய நாணயம் அச்சிடப்படுவதற்கான அறிகுறியாகும் என்கிறார்.
 
அவரைப் பொறுத்தவரை, ஸ்டேட் வங்கியில் இருந்து பணம் வாங்கப்படவில்லை, ஆனால் பாகிஸ்தானில் எதுவும் வெளிப்படையாக இல்லை என்கிறார்.
 
"பட்ஜெட்டின் போது, ஸ்டேட் வங்கியிடமிருந்து கடன் வாங்குவது நின்று விட்டபோது புதிய தாள்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்தது என்ற கேள்வியை நாங்கள் எழுப்பினோம்," என்று அவர் கூறினார்.
 
தெளிவற்ற பதிலைக் கொடுத்து அரசாங்கமும் இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வந்தது என்று அவர் கூறினார்.
 
கைசர் பெங்காலியின் கூற்றுப்படி, புழக்கத்தில் தாள்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, கரன்சி தாள்கள் மிக வேகமாக அச்சிடப்படுவதற்கான சான்றாகும்.
 
ஆரிஃப் ஹபீப் செக்யூரிட்டிஸின் பொருளாதார ஆய்வாளர் சனா தௌபிக் , கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில், பணப்புழக்கம் வளர்ச்சி அடைந்து வருகிறது  என்று கூறினார்.
 
ஐந்தாண்டுகளுக்கு முன்பு வங்கிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை மீதான வரியை, அரசாங்கம் அதிகரித்திருந்த நேரத்தில், இது அதிகரிப்பில் அசாதாரண போக்கு ஏற்பட்டது என்று அவர் கூறினார். மக்கள் வங்கிகளில் பணத்தை வைப்பதற்கு பதிலாக ரொக்கமாக வைத்திருக்கத் தொடங்கினர்.
 
சானாவின் கூற்றுப்படி, தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் சர்வதேச செலாவணி நிதியத்துடனான ஒப்பந்தத்தில், வரி மற்றும் வருவாயை அதிகரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அரசாங்கமும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
 
இருப்பினும், இதன் காரணமாக மக்கள் வங்கிகள் மூலம் பரிவர்த்தனைகளுக்குப் பதிலாக பணப் பதுக்கலை நாடுகின்றனர். இது தாள்களுகான தேவையையும் அதிகரித்தது. இதன் காரணமாக ரூபாய் தாள்கள் அச்சிடுவதும் அதிகரித்தது.
 
வணிக வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதும் ஓரளவிற்கு ரூபாய் தாள்கள் அச்சிடுவதற்கு காரணமாகிறது என்று ஃபரித் ஆலம் கூறுக்கிறார்.
 
நிபுணர்களின் கூற்றுப்படி, பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட, அரசு வங்கியில் கடன் வாங்குவதற்கு சர்வதேச செலாவணி நிதியம் தடை விதித்துள்ளது. ஆனால்  கொரோனா வைரஸ் தொற்று பரவலின்போது அரசாங்கம் அறிவித்த நிவாரணப் திட்டம் போன்ற பிற செலவுகளுக்காக புதிய தாள்களை அச்சிடுவதற்கான சாத்தியம் ஏற்ப்பட்டுள்ளதை நிராகரிக்க முடியாது.
 
ரூபாய் தாள்களை அச்சிடுவது பணவீக்கத்தை எவ்வாறு அதிகரிக்கும்?
 
அதிக எண்ணிக்கையிலான ரூபாய் தாள்களை அச்சிடுவதன் மூலம் பணவீக்கம் அதாவது விலைவாசி அதிகரிக்கிறது.
 
அதிக ரூபாய் தாள்களை அச்சிடுவதால் மக்களிடம் அதிக பணம் இருப்பதாக வல்லுனர் சனா தௌபிக் கூறுகிறார். இதன் மூலம், அவர்களின் வாங்கும் திறன் அதிகரித்து வருகிறது. மேலும் அவர்கள் அதிக பணம் செலவழித்தால், பொருட்களின் விலைகளுடன், இது பணவீக்க வீதத்தையும் அதிகரிக்கிறது.
 
இத்தகைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக அவர் கூறுகிறார்.
 
டாக்டர் கைசர் பெங்காலி, தற்போதைய அரசாங்கத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் விநியோக சிக்கல்களால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக கூறினார். இருப்பினும், புழக்கத்தில் உள்ள தாள்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, தட்டுப்பாட்டின் அடிப்படையிலும் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது  என்கிறார்.
 
கரன்சி தாள்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் எதிர்மறை விளைவுகள் என்ன?
 
கரன்சி தாள்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைப் பற்றிப் பேசிய ஆய்வாளர் சனா தௌபிக், இந்த அதிகரிப்பு கருப்பு  சந்தையை அதிகரிக்கிறது என்று கூறினார்.
 
"அதிக எண்ணிக்கையிலான தாள்கள் அச்சிடப்பட்டால், மக்கள் தங்கள் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு பதிலாக பணமாக சேமிக்கிறார்கள் என்று அர்த்தம். இது அதிகாரப்பூர்வமற்ற அல்லது கருப்பு பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது," என அவர் மேலும் தெரிவித்தார்.
 
கரன்சிகளை அதிக எண்ணிக்கையில் அச்சிடுவதால் கடத்தல் மற்றும் பணமோசடி போன்றவையும் அதிகரிக்கும் என்று சனா தௌபிக் கூறினார்.
 
"மக்கள் வங்கிகளுக்குப் பதிலாக பணத்தை அவர்களிடமே வைத்திருக்கிறார்கள், அதே பணம் சட்டவிரோதமாக மாற்றப்படுகிறது." என்கிறார்.
 
கரன்சி தாள்கள் பணப் பதுக்கலுக்கான வழிமுறையாக மாறும் என்றும் பணத்தை சிலரின் கைகளுக்குளேயே மட்டுப்பட்டு விடும் என்றும் சனா தௌபிக் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments