Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் பத்திரம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு - என்ன காரணம்?

Nirmala Sitharaman

Prasanth Karthick

, ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (11:46 IST)

தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமலாக்க இயக்குநரகம் மீது பெங்களூரு சிறப்புப் பிரதிநிதிகள் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

 

 

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கைப் பதிவு செய்ய பெங்களூருவில் உள்ள சிறப்பு பிரதிநிதிகளுக்காக நியமிக்கப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் (ஜேஎஸ்பி) அமைப்பின் இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் உள்ளூர் காவல் நிலையத்தில் ஆதர்ஷ் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர் நீதிமன்றத்தை நாடினார்.

 

ஜேஎஸ்பி என்பது கல்வி உரிமைச் சட்டம் மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பான பிரச்னைகளுக்குக் குரல் எழுப்பி வரும் ஓர் அமைப்பு.

 

இந்த வழக்கில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜேந்திரா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநில பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

 

ஜேஎஸ்பி வழக்கறிஞர் எஸ்.பாலன் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "நிர்மலா சீதாராமன், அமலாக்க இயக்குநரகம் ஆகியவை இந்த வழக்கில் வழிநடத்தியவர்கள் (facilitators), நட்டா மற்றும் விஜேந்திரா ஆகியோர் இதில் குற்றங்களை ஊக்குவித்தவர்கள் (abettors)."

 

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், “குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரின் (நிர்மலா சீதாராமன்) ரகசிய உதவியுடனும், குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரின் (அமலாக்க இயக்குநரகம்) ஆதரவுடனும் மூன்றாம் (நட்டா) மற்றும் நான்காம் நபரின் (விஜேந்திரா) நலனுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. மூன்றாம் நபர் (நட்டா) தேசியளவிலும், நான்காம் நபர் கர்நாடகா மாநில அளவிலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

 

புகாரில் கூறப்பட்டிருப்பது என்ன?
 

புகாரில், “குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர் (நிர்மலா சீதாராமன்), பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், அவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ரெய்டுகள், பறிமுதல்கள் மற்றும் கைதுகளை நடத்துவதற்காக குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரின் (அமலாக்க இயக்குநரகம்) சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டார்.

 

குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரின் அழுத்தத்தால் இரண்டாம் நபர் மேற்கொண்ட ரெய்டுகளுக்கு பயந்ததால், பல கார்ப்பரேட் நிறுவனங்களும் பணக்காரர்களும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்று கூறப்பட்டுள்ளது.

 

மேலும், இதன்மூலம் 8,000 கோடி வசூலித்திருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

 

அதோடு, ஏப்ரல் 2019, ஆகஸ்ட் 2022 மற்றும் நவம்பர் 2023க்கு இடையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 230.15 கோடி வழங்கிய அலுமினியம் மற்றும் தாமிர நிறுவனங்களான ஸ்டெர்லைட், வேதாந்தா ஆகியவற்றின் உதாரணத்தை இந்தப் புகார் குறிப்பிடுகிறது.

 

அலுமினியம் மற்றும் தாமிர நிறுவனமான, மெசர்ஸ் ஸ்டெர்லைட் மற்றும் மெசர்ஸ் வேதாந்தா நிறுவனம், ஏப்ரல் 2019, ஆகஸ்ட் 2022 மற்றும் நவம்பர் 2023க்கு இடையில் ரூ. 230.15 கோடி செலுத்தியுள்ளது.

 

மெசர்ஸ் அரபிந்தோ ஃபார்மா குழும நிறுவனங்கள் 5 ஜனவரி 2023, 2 ஜூலை 2022, 15 நவம்பர் 2022 மற்றும் 8 நவம்பர் 2023 ஆகிய தேதிகளுக்கு இடையே ரூ.49.5 கோடி வழங்கியுள்ளது. இந்த உதாரணங்களை புகாரில் மேற்கோள் காட்டியுள்ளனர்.

 

வழக்கறிஞர் பாலன் கூறுகையில், ''எங்கள் கருத்தை நிரூபிக்கும் வகையில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளோம். நாங்கள் நீண்ட காலமாக முன்வைத்த வாதங்களை மீண்டும் முன்வைத்தோம். எங்களின் வழக்கு சுமார் பத்து முறை ஒத்தி வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடுவதற்கு முன்பு, போதுமான ஆதரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதை (prima facie case) நீதிமன்றம் ஒப்புக்கொண்டது," என்று தெரிவித்தார்.

 

இந்தப் புகார் CrPC-இன் பிரிவு 156 (3) இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவின் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (XLII) நீதிமன்றம், அபராதம் அல்லது அபராதம் இல்லாமல் ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன் கூடிய குற்றங்களுக்காக நியமிக்கப்பட்ட ஒரு நீதிமன்றம் ஆகும்.

 

இந்தக் குற்றங்களுக்காக, ஐபிசி பிரிவுகள் 384 (பணம் பறித்தல்), 120B (குற்றச் சதி) மற்றும் ஐபிசி பிரிவு 34 (பொது நோக்கத்திற்காகப் பலரின் ஒருங்கிணைந்த நடவடிக்கை) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வரவில்லை. அவர் உஸ்பெகிஸ்தானுக்கு சென்றிருப்பதாகவும், இந்த நேரத்தில் அவரைத் தொடர்புகொள்வது கடினம் என்றும் அவருடைய அலுவலகத்தில் கூறப்பட்டது. அவர்களின் பதில் வந்ததும் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

150 ஆண்டுகால டிராம் சேவை நிறுத்தம்! கொல்கத்தா அரசு முடிவு! - மக்கள் அதிர்ச்சி!