Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்று கூடும் தாலிபனின் எதிரிகள் - அவர்களால் வெல்ல முடியுமா?

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (05:56 IST)
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் போர் முடிந்துவிட்டதாக தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் அறிவித்துள்ளார்.
 
ஆனால் மறுபுறம், பெயர் வெளியிடப்படாத ஓர் இடத்திலிருந்து வெளியான செய்தியில், ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் அம்ருல்லா சலேஹ், அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், தான்தான் இப்போது ஆப்கானிஸ்தானின் பொறுப்பு அதிபர் என்றும் போர் இன்னும் முடிவடையவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
செவ்வாயன்று, காபூலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆப்கானிஸ்தானை வசப்படுத்திய பிறகு, தாலிபன் செய்தித் தொடர்பாளர் முதன்முதலாகச் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், சபிஹுல்லா, பொது மன்னிப்பு வழங்குவது, பெண்களின் உரிமைகள் மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது பற்றிப் பேசினார்.
ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புக்குச் சற்று முன்பு, பதவி நீக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் துணை அதிபர், அம்ருல்லா சலேஹ், ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பின் படி, அதிபர் இல்லாத நிலையிலோ, ராஜினாமா செய்திருந்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, துணை அதிபர், நாட்டின் பொறுப்பு அதிபராகிறார் என்று அறிவித்தார்.
 
ட்விட்டரில் அவர், "நான் தற்போது நாட்டில் இருக்கிறேன். சட்டபூர்வமான பொறுப்பு அதிபராக இருக்கிறேன். அனைத்துத் தலைவர்களின் ஆதரவு மற்றும் ஒருமித்த கருத்தைப் பெறுவதற்காக நான் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினாலும், தாலிபன் கட்டுப்பாட்டிற்கு எதிராக ஒரு எதிர்ப்பு இயக்கத்தை தொடங்க தயாராக இருந்த சில ஆப்கானிஸ்தான் தலைவர்களில் அம்ருல்லா சலேவும் ஒருவர், ஆயுதமேந்திய தாலிபன் போராளிகள் நாட்டை ஆக்கிரமிப்பது "சட்டவிரோதமானது" என்று அவர் கூறினார்.
 
தற்போது, நாட்டின் அனைத்து முக்கிய எல்லைப் பாதைகளையும் தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர். தாலிபன்கள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அறிவிக்காத சில பகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
 
மசூதின் மகன் போராட்ட அறிவிப்பு
இதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு பிரெஞ்சு பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரையில், "ஷேர்-இ-பஞ்சஷீர்" என்று பிரபலமாக அறியப்படும் ஆப்கானிஸ்தான் தலைவர் அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத், தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தாலிபானுக்கு எதிரான 'போரை' அறிவித்தார். '
அகமது மசூத் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், தான் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறவில்லை என்றும், பஞ்சஷீர் மக்களுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
 
காபூலில் இருந்து சுமார் மூன்று மணிநேர பயண தூரத்தில் உள்ள பஞ்சஷீர் மாகாணம் தாலிபன்களுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பெயர் பெற்றது. 1996 முதல் 2001 வரை தாலிபன் ஆட்சியின் போது கூட, இந்த மாகாணம் அவர்களின் கட்டுப்பாட்டில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வடக்கு கூட்டணி தாலிபன்களை எதிர்த்துப் போரிட்டது.
 
முன்னாள் வடக்கு கூட்டணியின் முக்கிய தளபதிகள் மற்றும் கூட்டாளிகளுடன் அம்ருல்லா சலேஹ் மற்றும் அகமது மசூத் மீண்டும் தொடர்பு கொண்டு அவர்கள் அனைவரையும் சண்டையில் சேருமாறு வலியுறுத்தி ஒப்புக்கொள்ள வைத்ததாக பஞ்சஷீர் வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.
 
"தாலிபனை எதிர்த்துப் போராடுவோம்"
அதிபர் அஷ்ரப் கனியின் நெருங்கிய உதவியாளர் ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை எடுத்துரைத்தார்.
 
பிபிசியிடம் அவர் கூறியதாவது, "கடந்த வெள்ளிக்கிழமை காபூலைக் கைப்பற்ற தாலிபன்கள் வந்தபோது, சில தரப்பினர் ஜனாதிபதி அஷ்ரப் கனி ராஜினாமா செய்யும்படி அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை."
 
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில் இரவில் நடந்த பல சந்திப்புகளில், அதிபர் அஷ்ரஃப் கனியின் பல நெருங்கிய உதவியாளர்கள் ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியதாக அவர் கூறினார், ஆனால் அஷ்ரஃப் கனியை ஆதரித்த ஒரே நபர் அம்ருல்லா சலேஹ். கடைசி நேரம் வரை அவர் ராஜினாமா செய்யவோ நாட்டை விட்டு வெளியேறவோ கூடாது என்று வலியுறுத்தி வந்தார்.
 
இந்த சந்தர்ப்பத்தில் அம்ருல்லா சலேஹ் மீண்டும் மீண்டும் "நாங்கள் தாலிபன்களுடன் போராடுவோம்" என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
 
அதிபர் மாளிகையின் இந்தச் சந்திப்புகள் பற்றிய மற்றொரு தகவலும் இதே விஷயத்தை உறுதிசெய்தது. ஜனாதிபதி அஷ்ரப் கனியின் ராஜினாமாவுக்கு அம்ருல்லா சலேஹ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன.
 
பஞ்சஷீரில் ஒன்று கூடும் தாலிபன் எதிர்ப்பாளர்கள்
காபூலுக்கு தாலிபன்கள் வந்த பிறகு, ஜனாதிபதி கனி நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, அம்ருல்லா பஞ்சஷீருக்குச் சென்று இப்போதும் அங்கு தான் இருக்கிறார் என்று அவர் கூறுகிறார்.
 
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா முகமதியும் அம்ருல்லாவுடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
 
அம்ருல்லா சலேஹின் ஆடியோ செய்தியும் வெளிவந்துள்ளது, அதில் அவர் எதிர்கால நடவடிக்கை பற்றிப் பேசுகிறார்.
 
அமெரிக்காவில் உள்ள ஆப்கானிஸ்தான் அரசியல் ஆய்வாளர் ஹஷிம் வஹ்தத்யார் கூறுகையில், அம்ருல்லா சலேஹின் செய்தியில் இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன. "அவற்றில் ஒன்று என்னவென்றால், தாலிபன்கள் ஜனநாயக அரசாங்கத்தைப் பற்றி பேசினால், ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளலாம். ஆனால் தாலிபன்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்தால், ஒருவேளை அம்ருல்லா அவர்களுக்கு எதிராக போராடுவார்."
 
ஆனால் தற்போது அம்ருல்லாவுக்கு நாட்டில் எவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
தாலிபன் எதிர்ப்பு வேகம் பெறுமா?
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தங்கள் புதிய அரசாங்கம் பற்றி இதுவரை அதிகம் கூறவில்லை என்றாலும், சபியுல்லா முஜாஹித் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் தனது அரசாங்கத்தில் அனைத்துத் துறைகளிலும் கொள்கைகளிலும் குடிமக்களின் பங்களிப்பு இருக்கும் என்று கூறியுள்ளார். தனது அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் உறுதியளித்துள்ளார்.
 
தற்போது தாலிபன் வசம் தான் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதால் இனி என்ன நடந்தாலும் அதற்கு தாலிபானே பொறுப்பு என்று கூறுகிறார், அரசியல் ஆய்வாளர் ஹஷிம் வஹ்தத்யார்.
 
தாலிபன்கள் அம்ருல்லா சலேஹ் மற்றும் அகமது மசூத் ஆகியோருடன் பேசவும், அரசாங்கத்தில் அவர்களையும் சேர்க்க ஒரு குழுவை அனுப்பவும் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக வஹ்தத்யார் கூறுகிறார்.
 
ஆனால் அப்படி நடந்தாலும் கூட, கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களும் அவர்களின் எதிரிகளும் ஒன்றாகச் சேர்வதைத் தடுக்கும் பல சம்பவங்கள் நடந்துள்ளன.
 
இந்த நிகழ்வுகளைக் குறிப்பிடும் வஹ்தத்யார், வடக்கு கூட்டணி மற்றும் பெரும்பாலான மக்கள் அகமது ஷா மசூத்தை "தலைவர்" என்று குறிப்பிடுவதாகவும் இதை தாலிபன்களால் ஏற்க முடியுமா என்றும் கேள்வி எழுப்புகிறார்.
 
அகமது ஷா மசூத் 9/11 தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு அல்-கொய்தா தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டார் என்பது நினைவில் கொள்ளத் தக்கது. வடக்கு கூட்டணி மற்றும் அகமது ஷா மசூதின் ஆதரவாளர்கள் இன்று வரை, அவரது நினைவு நாளில், காபூல் நகரை முடக்குகின்றனர்.
 
சபிஹுல்லா முஜாஹித்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பைக் குறிப்பிடும் வஹ்தத்யார், தாலிபன்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினால், தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் குறைக்க முடியும் என்று கூறினார்.
 
ஆனால், தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்தபின், அவர்கள் பழையபடி கடுமையான முடிவுகளை எடுத்தால், அந்த அரசாங்கத்தின் சிரமங்கள் அதிகரிக்கலாம் என்று அவர் கூறினார்.
 
எதிர்ப்பாளர்கள் சாலைகளில் கூடும் வீடியோ வைரல்
ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தாலிபன்களை எதிர்ப்பதற்கு ஒரு குழு ஒன்று சேர சிறிது காலம் பிடிக்கலாம். ஆனால் ஆங்காங்கே போராட்டங்கள் தெருக்களில் நடக்கத் தொடங்கியுள்ளன.
 
கடந்த இரண்டு நாட்களில் குறைந்தது மூன்று வீடியோக்கள் வெளிவந்துள்ளன, அதில் மக்கள் தாலிபன்களுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
 
ஒரு வீடியோவில், சில பெண்கள் காபூலில் ஒரு தெருவில் கையால் எழுதப்பட்ட அட்டைகளை உயர்த்திப் பிடித்திருப்பதைக் காணலாம். தங்களைப் பணிக்குச் செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதமேந்திய தாலிபன்களும் அவர்களைச் சுற்றி நிற்கிறார்கள்.
 
கோஷ்த் மாகாணத்தில் இருந்து வெளியான மற்றொரு வீடியோவில், சில இளைஞர்கள் ஆப்கானிஸ்தானின் கொடியுடன் கோஷங்களை எழுப்பியபடி கடந்து செல்வதைக் காணலாம். தாலிபன் போராளிகள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
 
ஆகஸ்ட் 18 அன்று, மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் பாகிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள பெரு நகரமான ஜலாலாபாத்தில் சிலர் தாலிபன்களின் வெள்ளைக்கொடியை அகற்றி முந்தைய அரசாங்கத்தின் பச்சை மற்றும் சிவப்பு கொடியை ஏற்றுகின்றனர்.
 
மறுபுறம், பாமியானில், பிரபல ஹசாரா தலைவர் அப்துல் அலி மசாரியின் சிலையை தாலிபன்கள் தகர்த்தனர். மசாரி 1996 இல் தாலிபன்களால் படுகொலை செய்யப்பட்டார். மசாரி ஹசாரா ஷியா சமூகத்தின் முக்கிய தலைவராக இருந்தார். அவர் தாலிபன்களை எதிர்த்து வந்தார்.
 
இதே பாமியானில் தான் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், அங்கு இருந்த புத்தரின் இரண்டு மாபெரும் சிலைகளைத் தாலிபன்கள் தகர்த்தனர்.
 
6 ஆம் நூற்றாண்டில் பாமியானில் உருவாக்கப்பட்ட, கௌதம புத்தரின் பெரிய சிலை 53 மீட்டர் உயரமும், சிறிய சிலை 35 மீட்டர் உயரமும் கொண்டவை. இஸ்லாத்திற்கு எதிரானவை என்று கூறி தாலிபன் நிர்வாகிகள் பீரங்கி குண்டுகளால் அவற்றை அழித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments