Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாய் க்ரேட்டர் அடிப்பாறை கண்டுபிடிப்பு - இதன் வயது என்ன?

Advertiesment
BBC Tamil
, திங்கள், 20 டிசம்பர் 2021 (13:43 IST)
அப்பாறைகளின் தோற்றம் எரிமலை தொடர்புடையதாக இருக்கின்றன, ஒருவேளை முந்தைய காலகட்டத்தில் ஏற்பட்ட எரிமலை ஓட்டத்தின் விளைவாகக் கூட அவ்வாறு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பு பெர்சவெரன்ஸ் ரோவர் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல், காரணம் அடுத்த தசாப்தத்தில் இந்த பாறைகளின் மாதிரிகள் பூமிக்கு திரும்பும்போது, ​​பாறைகள் எந்த காலத்தைச் சேர்ந்தவை என ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்படலாம்.

நாசாவின் பெர்சவெரன்ஸ் ரோவர் தரையிறங்கிய இடம் மட்டுமின்றி, பொதுவாக செவ்வாய் கிரகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பரந்து விரிந்த சூரிய குடும்பத்தின் வரலாறு பற்றிய நமது புரிதலை இது அதிகரிக்கும்.

நாசாவின் பெர்சவெரன்ஸ் ரோவர் தரையிறக்கப்பட்ட தளத்தில், அவ்வியந்திரம் ஒருவித பாறையைக் கண்டுபிடித்துள்ளது. அது அப்பகுதியில் உள்ள பழம்பெரும் பாறைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பர்டூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியல் குழு உறுப்பினர் பிரியோனி ஹோர்கன், இந்த அடையாளப்படுத்தல் "உண்மையில், மிகப் பெரிய விஷயம்," என்று கூறினார்.

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோ க்ரேட்டர் என்கிற இடத்தில் தரையிறங்கியது.

செயற்கைக்கோள் படங்களில் டெல்டா போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதாகத் தோன்றியதால், ரோவர் தரையிறங்குவதற்கு ஏதுவானதாக இந்த ஆழமான தாழ்வுப் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் இருந்த நுண்ணுயிர் தடயங்களை பதிவு செய்யக்கூடிய புவியியல் அம்சமாகும்.

பெர்சவெரன்ஸ் ரோவர் டெல்டா பகுதியில் தரையிறங்கவில்லை, ஆனால் அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் - க்ரேடர் பள்ளத்தின் தரையில் தரையிறக்கப்பட்டது. இங்கு தான் பெர்சவெரன்ஸ் ரோவர் எந்திரம் அதன் அடிப்படை பாறைகளை கண்டுபிடித்துள்ளது. இரண்டு பரந்த பகுதிகளை ஆய்வு செய்ய ரோவருக்கு கட்டளையிடப்பட்டது: ஒன்று "ஃப்ராக்சர்ட் ரஃப்" என்று அழைக்கப்படும் ஒரு பகுதி, மற்றொன்று "செய்டா (Séítah)" என பெயர்சூட்டப்பட்டுள்ள பகுதி.

செய்டாவைக் குறித்து விஞ்ஞானிகளின் உடனடி கருத்து என்னவென்றால், அதன் பாறைகள் தோற்றத்தில் வண்டலை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது, அவை தண்ணீரால் அல்லது காற்றின் மூலம் குவிக்கப்பட்ட கனிமத் துகள்களின் திரட்சியாகும். இந்த பார்வை வெளிப்படையான அடுக்குகளால் உறுதிப்படுத்தபடுகிறது.

ஆனால், பெர்சவெரன்ஸ் ரோவர் செய்டாவில் துளையிட்டு அதன் புவி வேதியியலை விரிவாக ஆராயத் தொடங்கியபோது திட்டக் குழுவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

பைராக்ஸீன் கனிமத்தால் சூழப்பட்ட ஏராளமான ஒலிவின் படிகங்களை ரோவரின் கருவிகள் கண்டறிந்தன.

பெர்சவெரன்ஸ் ரோவர் கண்டது, குமுலேட் டெக்ஸ்ட்சர் (cumulate texture) என்றழைக்கப்படும் உருகிய பாறைகள் அடுக்கடுக்காக ஒருங்கிணைந்து உருவாகும் பாறை அமைப்பு என புவியியலாளர்கள் விவரிப்பதாக கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த கெல்சி மூர் கூறினார்.

"எனவே இது பள்ளத்தில் ஊடுருவி இருக்கலாம் அல்லது வெடிப்பினால் ஏற்பட்டு இருக்கலாம் அல்லது வெளியில் இருந்து க்ரேட்டர் பள்ளத்துக்குள் பாய்ந்து இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஒரு சாத்தியமான விளக்கம் என்னவென்றால், ஒரு காலகட்டத்தில் ஒரு எரிமலைக்குழம்பு ஏரி இருந்திருக்கலாம், அதில் மாக்மா நிறைந்து இருந்திருக்கலாம்." என்றும் கூறியுள்ளார் கெல்சி.

"ஃப்ராக்சர்ட் ரஃப்" பகுதியை விட செய்டா பகுதி பழமையானது என்று குழு அறிந்திருக்கிறது. எனவே இது செய்டாவை ஜெசெரோவில் உள்ள பழமையான பாறைகளாக்குகிறது. மேலும் டெல்டாவை விடவும் மிகவும் பழமையானதாக்குகிறது.

சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களின் மேற்பரப்புகளிலும் உள்ள, தாக்கங்களினால் ஏற்பட்ட பள்ளங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதன் மூலம் அதன் வயது கணக்கிடப்படுகின்றன. பல்வேறு கோள் உடல்களின் வயதை ஒப்பிட்டுப் பார்க்க அதிநவீன மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பள்ள "காலமானிகள்" இதுவரை பெறப்பட்ட சில உறுதியான, பாறை மாதிரிகளைக் கொண்டு ஆய்வகத்தின் மூலம் வயதைக் கணித்த சோதனைகளைச் சார்ந்துள்ளது. 1960கள் மற்றும் 1970களில் நிலவில் இருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்ட பாறை மாதிரிகளைக் கொண்டு ஆய்வகத்தில் அதன் வயது கணக்கிடப்பட்டன.

செய்டா மற்றும் ஃப்ராக்சர்ட் ரஃப் ஆகிய தளங்களில் பெர்சவரன்ஸ் ரோவர் துளையிட்ட எடுக்கப்பட்ட பாறைத் துண்டுகளும் எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் பூமிக்குத் திரும்பும். அவற்றின் கதிரியக்க உள்ளடக்கத்தைப் ஆராய்வதன் மூலம் அதன் வயது உறுதி செய்யப்படும். இதன் விளைவாக கிடைக்கும் உறுதியான வயது (தேதிகள்), பள்ளம் எண்ணும் மாதிரிகளை நீட்டிக்கவும், செம்மைப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம்.

பெர்சவரன்ஸ் ரோவரால் செய்டாவில் கார்பனேட் மற்றும் சல்ஃபேட் தாதுக்கள் இருப்பதை நிறுவ முடிந்துள்ளதால், செய்டா மாதிரிகள் பூமிக்கு வரும்போது அதன் மீதான ஆர்வம் இன்னும் அதிகமாக இருக்கும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நகைகள் மீட்பு!