இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, கொரோனா தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி குறித்து நேரடியாக மேற்பார்வை செய்ய மூன்று நகர பயணத்தில் இருக்கிறார்.
பிரதமர், இன்று தன் மூன்று நகர கொரோனா தடுப்பு மருந்து பயணத்தை முதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரத்தில் தொடங்கினார்.
அகமதாபாத் நகரத்தில் இருந்து, சுமாராக 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் சங்கோதர் தொழிற்சாலைப் பகுதியில் அமைந்து இருக்கும், சைடஸ் கேடிலா ஃபார்மா நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில், பாதுகாப்பு அங்கியை அணிந்து கொண்டு, கேடிலா நிறுவனம் உற்பத்தி செய்துவரும் சைகோவ்-டி (ZyCOV-D) என்கிற கொரோனா மருந்து மேம்பாடு குறித்து மேற்பார்வை செய்தார்.
இந்த தடுப்பூசி டிஎன்ஏ-வை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசிக்கான முதல் கட்ட பரிசோதனைகள் முடிந்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம், இதன் இரண்டாம் கட்ட பரிசோதனையைத் தொடங்கியது கேடிலா நிறுவனம்.
இதைத் தன் ஆதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார் நரேந்திர மோடி.
அகமதாபாத்தைத் தொடர்ந்து, ஹைதராபாத் நகரத்தில் அமைந்து இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்குச் சென்றார் நரேந்திர மோதி.
ஹைதராபாத் நகரத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது பாரத் பயோடெக். இந்த நிறுவனம் கோவேக்சின் (Covaxin) என்கிற கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மேம்படுத்திக் கொண்டு இருக்கிறது. இது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரத் பயோடெக் நிறுவனத்தில் மேற்பார்வை செய்தது குறித்தும், கொரோனா தடுப்பு மருந்து குறித்து கேட்டு அறிந்து கொண்ட்தையும், தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் பிரதமர் மோதி.
ஹைதராபாத்தில், சுமாராக ஒரு மணி நேர மேற்பார்வைக்குப் பிறகு, பிரதமர், புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்குச் சென்றார்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனம் ஆகும். இது ஆஸ்ட்ராசெனீகா மருந்து உற்பத்தி நிறுவனம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் ஒரு கொரோனா தடுப்பு மருந்துக்காக கை கோர்த்து இருக்கிறது.
சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து கொண்டு இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்தும், எப்போது முறையாக தடுப்பூசி வழங்கல் தொடங்கப்படும் எனவும் மேற்பார்வை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.