Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நம்ம வீட்டுப் பிள்ளை: சினிமா விமர்சனம்

நம்ம வீட்டுப் பிள்ளை: சினிமா விமர்சனம்
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (14:39 IST)
திரைப்படம் நம்ம வீட்டுப் பிள்ளை
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சூரி, யோகிபாபு, நட்டி, ஆர்.கே. சுரேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அர்ச்சனா, வேல ராமூர்த்தி, சண்முகராஜா
பின்னணி இசை டி. இமான்
இயக்கம் பாண்டிராஜ்


 
மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களுக்குப் பிறகு, இயக்குனர் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் ஒன்றுசேர்ந்திருக்கும் மூன்றாவது படம் நம்ம வீட்டுப் பிள்ளை. வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்த்திருந்த படம் இது.
 
பெரியவர் அருள்மொழி வர்மனின் (பாரதிராஜா) பேரன் அரும்பொன் (சிவகார்த்திகேயன்). தந்தை சின்ன வயதிலேயே இறந்துவிட, தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார் அரும்பொன். இவருடைய தங்கை துளசி (ஐஸ்வர்யா ராஜேஷ்). அருள்மொழி வர்மனின் மற்ற மகன்கள் அரும்பொன்னின் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். ஆனால், துளசியின் திருமணத்தில் ஏற்படும் பிரச்சனை, அரும்பொன்னை பெரும் சிக்கலில் தள்ளுகிறது. அதிலிருந்து மீண்டு, தன் தங்கையின் வாழ்வை எப்படி காப்பாற்றுகிறார் அரும்பொன் என்பது மீதிக் கதை.

webdunia

 
கிட்டத்தட்ட கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்ப்பதுபோல இருக்கிறது. பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இருக்க அவர்களையெல்லாம் ஒன்றிணைக்கும் இளைஞனுக்கு என்னென்ன அவமானங்கள் அந்தப் படத்தில் வந்ததோ, அதே அவமானங்கள் இந்தப் படத்திலும் கதாநாயகனுக்கு ஏற்படுகின்றன. அந்தப் படத்தில் முடிவின் கதாநாயகன் ஒரு நீண்ட வசனத்தின் மூலம் உறவினர்களை எப்படி திருத்தி, மனமாற்றம் செய்வாரோ அதேபோலத்தான் இந்தப் படத்திலும். அந்தப் படத்தில் இருந்த சூரி இந்தப் படத்திலும் இருக்கிறார். இதனால் பல தருணங்களில் ஏற்கனவே பார்த்த படத்தைப் பார்ப்பதுபோலவே இருப்பது இந்தப் படத்தின் மைனஸ்.
 
தவிர, இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் படம் நீண்ட நேரம் ஓடும் உணர்வை ஏற்படுத்துகின்றன.
 
கடந்த இரண்டு, மூன்று படங்களில் தான் உருவாக்கிக் கொண்டிருந்த ஆக்ஷன் ஹீரோ இமேஜிலிருந்து சற்று விலகி, ஒரு பொறுப்பான குடும்பத்து இளைஞன் இமைஜை உருவாக்க முயன்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் அவருக்கு கிட்டத்தட்ட வெற்றிதான்.
 
ஹீரோவுடனேயே வரும் வழக்கமான பாத்திரம் சூரிக்கு. பெரிதாக சிரிக்கவைக்க முயலாமல், தன் பாத்திரத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார். சில காட்சிகளில் மட்டும் வந்துபோகும் யோகிபாபு, அந்தந்தக் காட்சிகளில் மட்டும் கலகலப்பேற்படுத்துகிறார்.
 
ஆனால், இந்தப் படத்தைக் கிட்டத்தட்ட நகர்த்திச் செல்பவர் துளசியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்தான். அவருடைய திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
 
இந்தப் படத்தில் நாயகியின் பாத்திரத்திற்குப் பெரிய வேலையில்லை. கதாநாயகியான அனு இமானுவேலுக்கும் கதாநாயகனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் பெரிதாக வசீகரிக்கவில்லை.
 
டி இமானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன.
 
சுற்றியிருக்கும் எல்லோரும் கெட்டவர்களாகவும் மையக் கதாபாத்திரங்கள் மட்டும் நல்லவர்களாக வரும் தொலைக்காட்சித் தொடர் ரசிகர்களுக்கு இந்தப் படம் ரொம்பவுமே பிடிக்கக்கூடும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”பரீட்சையில் தயவு செய்து உங்கள் சொந்த கதைகளை எழுதி வைக்காதீர்கள்”.. மாணவர்களுக்கு அட்வைஸ் கூறும் பல்கலைகழகம்