கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சலர் பணியிடம் உள்ளிட்ட நான்கு பணிகளுக்கான அஞ்சல் துறைத் தேர்வுகள் வழக்கத்துக்கு மாறாக, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நாடு முழுவதும் நடந்தன.
மாநில மொழிகளிலும் இந்தத் தேர்வை நடத்தவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
தேர்வை நடத்த அனுமதித்த நீதிமன்றம் தமிழகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படுவதைக் கண்டித்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தமிழக எம்.பி.க்கள் இந்தப் பிரச்சனையை எழுப்பினர்.
அதிமுக எம்.பி.க்கள் மைத்ரேயன், நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், திமுக எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் இந்தப் பிரச்சனையை எழுப்பி அமைச்சர் இது தொடர்பாக உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கோரினர்.
இதை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அனுமதிக்க மறுத்தார். இதையடுத்து தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் எழுப்பிய நிலையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் மீண்டும் பிரச்சனை எழுப்பப்பட்டது. பல முறை அவை இப்படி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவைக்கு வந்து ஜூலை 14-ம் தேதி நடந்த அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், எல்லா மாநில மொழிகளிலும் புதிதாகத் தேர்வு நடக்கும் என்றும் அறிவித்தார். அரசு தமிழ் உட்பட எல்லா மொழிகளையும் மதிப்பதாகவும் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே. ரங்கராஜன் எல்லா துறைகளுக்கான தேர்வுகளும் மாநில மொழிகளில் நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ராம் கோபால் யாதவ் என்ற எம்.பி. போஜ்புரி மொழி அலுவல் மொழியாக ஏற்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.