Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை ஜனாதிபதி வீட்டின் முன் நள்ளிரவில் நடந்த போராட்டம் – 45 பேர் கைது

Advertiesment
இலங்கை ஜனாதிபதி வீட்டின் முன் நள்ளிரவில் நடந்த போராட்டம் – 45 பேர் கைது
, வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (11:31 IST)
நேற்றிரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.


இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். கண்ணீர் புகை குண்டு வீச்சால் ஏற்பட்ட புகையில் கண் எரிச்சல் மற்றும் பிற பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ஆளானதாக களத்தில் இருந்து பிபிசி தமிழுக்காக செய்தி சேகரிக்கும் ரஞ்சன் அருண் பிரசாத் கூறுகிறார்.

இந்த போராட்டம் தொடர்பாக ஒரு பெண் உட்பட இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறையில் காவல்துறை தரப்பில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும், காவல்துறை ஜீப் மற்றும் இரண்டு மோட்டார் பைக்குகள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் நடந்த போராட்டம்

இலங்கை தலைநகர் கொழும்பில் பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 5,000-க்கும் மேற்பட்டோர், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறிய ஜனாதிபதி பதவி விலகக் கோரி கோஷமிட்டனர்.

இலங்கை அதிபரின் இல்லம் அருகே பேரணி நடத்திய ஒரு பிரிவு போராட்டக்குழுவினர் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களை ஒடுக்க ஏற்கெனவே அங்கு தயார் நிலையில் துணை ராணுவ படையினர், போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அங்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றுக்கு பல வாரங்களாக கடுமையான பற்றாக்குறை உள்ளது.

13 மணி நேர மின்வெட்டு

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் டீசல் கிடைக்காததால், நாட்டின் பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக 13 மணி நேர மின்வெட்டுக்குள்ளாயினர்.

சாலைகளில் மின் விளக்கு எரிய வைப்பதற்கு கூட போதிய மின்சாரம் இல்லாத நிலை இருப்பதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பல இடங்களில் மருந்துகள் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருந்த அரசு மருத்துவமனைகளில் மின்தடை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் வருகின்றன.

மின்சார விநியோக தடையால் செல்பேசி ஒலிபரப்பு நிலைய சேவைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல இடங்களில் செல்பேசி கோபுரங்களை இயக்க மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் செல்பேசி தொலைத்தொடர்பு விநியோக சேவை பாதிக்கப்பட்டது.

கொழும்பு பங்குச் சந்தை வர்த்தகத்தை அரை மணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை மட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

இந்த நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டன. மின்சாரத்தை மிச்சப்படுத்த தெரு விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன என்று ஒரு அமைச்சரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடும்பம், குடும்பமாக திரண்ட மக்கள்

இத்தகைய சூழலில்தான் மக்கள் தன்னிச்சையாகவே சிறிது, சிறுதாகவும் பிறகு ஆயிரக்கணக்கிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில், குடும்பம், குடும்பமாக திரளத் தொடங்கினர்.

அவர்களில் பலர் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களை முழங்கினர். அவர்களை கலைக்க வந்த போலீஸாருடன் பொதுமக்களில் சிலர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீஸார் மீது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசினர்.

இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை போலீஸார் கலைக்க முற்பட்டனர். சமூக ஊடக காணொளியொன்றில் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு போலீஸ்காரர்களை ஒரு கும்பல் சுற்றி வளைத்த காட்சி இடம்பெற்றிருந்தது.

போராட்டக்களத்துக்கு அருகே உள்ள பகுதியில் ஒரு பேருந்தின் கண்ணாடியை போராட்டக்குழுவினர் உடைத்து நொறுக்கினார்கள். இந்த சம்பவத்தின் உச்சமாக ஒரு போலீஸ் பேருந்து தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வீட்டில் இல்லை என்று அதிகாரபூர்வ ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பல நகரங்களின் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் மறியலில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு உத்தரவு

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த போராட்டம் வெள்ளிக்கிழமை மேலும் வலுப்பெறலாம் என்று கூறுகிறார் கொழும்பில் இந்த போராட்ட தகவல்களை சேகரித்து வழங்கி வரும் செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்.

இலங்கை ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். இளையவர் பசில் ராஜபக்ஷ நிதி இலாகாவை வைத்திருக்கிறார். மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ விவசாய அமைச்சராகவும், மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மாவட்டங்களில் சதமடித்த வெயில்! – வியர்த்து போகும் தமிழகம்!