Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேசமணி: குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடிய மார்சல் நேசமணியைப் பற்றித் தெரியுமா?

நேசமணி: குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடிய மார்சல் நேசமணியைப் பற்றித் தெரியுமா?
, வியாழன், 30 மே 2019 (21:14 IST)
நேசமணி
 
நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரமான நேசமணிக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிரார்த்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் துவங்கிய பிரசாரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
இந்த பின்னணியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், 'குமரித் தந்தை' என்று அழைக்கப்படுபவருமாகிய மார்சல் ஏ. நேசமணியை பற்றிய தகவல்களை கொண்டுள்ளது இந்தக் கட்டுரை.
 
'குமரித் தந்தை' மார்சல் ஏ. நேசமணி
 
இந்தியா விடுதலை அடைந்த பின்னரும், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைப்பதற்கு பல போராட்டங்கள் நடத்தி 1956ம் ஆண்டு நவம்பர் முதலாம் தேதி குமரி, தமிழ்நாட்டோடு இணைக்கப்படுவதற்கு தலையேற்று பாடுபட்டவர்தான் நேசமணி.
 
தாயின் ஊரான கல்குளம் தாலுகாவை சேர்ந்த மாறாங்கோணத்தில், அப்பல்லோஸ், ஞானம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 1895ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி மார்சல் நேசமணி பிறந்தார்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு தாலுகாவில் பள்ளியாடியில் வளர்ந்தார்.
 
ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையை நேரடியாக அனுபவித்தவர் இவர். இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காக போராட தொடங்கியவர்.
 
நேசமணியின் கல்வியும், சமூக அக்கறையும்
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டுப் பின்னர் திருநெல்வேலி சி.எம்.எஸ். கல்லூரியில் படித்தார்.
 
திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்து ஆசிரியர் பணி செய்தார். பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் 1921ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து பணியாற்ற தொடங்கினார்.
 
 
நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆதிக்க சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் தாழ்த்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு சாதாரண இருக்கையும் இடப்பட்டிருந்தது.
 
முதல் நாளே இருக்கையை காலால் உதைத்துவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதி வேறுபாட்டை ஒழித்தார் நேசமணி.
 
நேசமணி குணமாக தமிழர்கள் வேண்டுவது ஏன்? - ஹிட் அடித்த பொறியாளர்கள்
மேலும், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் ஆதிக்க சாதி வழக்கறிஞர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதி வழக்கறிஞர்களுக்கும் தனித்தனியாக இருந்த குடிநீர்ப் பானையை உடைத்துவிட்டு ஒரே பானையை வைத்தார் நேசமணி.
 
நாகர்கோவில் பார் அசோசியேஷனுக்கு தலைவராக 1943-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார் நேசமணி. அதே ஆண்டு நாகர்கோவில் நகரசபைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 முதல் 1947 வரை அவர் நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராக இருந்தார்
 
1962 மற்றும் 1967ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு, மக்களவை உறுப்பினராக இருந்தார்.
 
குமரிப் போராட்டம்
 
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது.
 
இங்கு வாழ்ந்த பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்ததால், இதனை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர்.
 
இதற்கு போராட்டம் வெடித்தபோது, கேரள அரசு கடும் அடக்குமுறைகளை மேற்கொண்டது.
 
நேசமணி தலைமையில் இந்தப் போராட்டம் எழுச்சி பெற்று, நீண்ட போராட்டத்துக்குப் பின், 1956 நவம்பர் மாதம், முதலாம் தேதி, அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் உதயமானது.
 
திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்
 
டிசம்பர் மாதம் 1945ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அமைப்பை நேசமணி நிறுவினார்.
 
1945 முதல் 1947 வரை திருவாங்கூர் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும், திருவாங்கூர் பல்கலைக்கழக நியமன உறுப்பினராகவும் மாறினார்.
 
1947 அக்டோபர் மாதம் இவர் நிறுவிய திருவாங்கூர் காங்கிரஸ்-ஐ அரசியல் கட்சியாக மாற்றி அமைத்தார்.
 
1948 முதல் 1952 வரை திருவாங்கூர் கொச்சி சட்டசபைக்கு திருவாங்கூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1951ம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சின் சமஸ்தானத்தின் ஒரு தொகுதியாக நாகர்கோவில் இருந்தது.
 
1951ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்ட ஏ.நேசமணி வெற்றி பெற்றார்.
 
1956ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழ் நாட்டோடு இணைந்த பின்னர் நடைபெற்ற 1962, 1967 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
இவர் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பாராட்டப்பட்டார்.
 
மக்களுக்கு ஆற்றிய அரும்பணியால் மார்சல் நேசமணி அன்பாக அழைக்கப்பட்டார். மார்த்தாண்டத்திற்கு அருகில் இவரது பெயரில் பாலம் ஒன்று உள்ளது.
 
நாகர்கோவிலில் கட்டப்பட்ட மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தினை 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 
தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளான நவம்பர் 1, அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் பதவி : ஓபிஎஸ் மகனுக்கு ஏமாற்றம் ! அதிர்ச்சியில் அதிமுக