Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நரேந்திர மோதியுடன் நடந்த திருமணம்: பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட யசோதாபென்

Advertiesment
நரேந்திர மோதியுடன் நடந்த திருமணம்: பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட யசோதாபென்
, வியாழன், 30 மே 2019 (17:14 IST)
அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி 2014 ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த படிவத்தில், தன்னை திருமணம் ஆனவர் என்று குறிப்பிட்டு, மனைவியின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.
2002, 2007 மற்றும் 2012 என மூன்று முறை முதல்வராக இருந்தபோதும், தேர்தல் வேட்புமனுக்களில் திருமணம் குறித்த கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்த மோதி, 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் இந்தத் தகவலை அளித்தபோது, உலகிற்கு அறிமுகமானவர்தான் யசோதாபென்.
 
1952ஆம் ஆண்டு, வடக்கு குஜராத்தின் பிரம்மவாடா பகுதியில் பிறந்த யசோதாபென், 1968ஆம் ஆண்டு, நரேந்திர மோதியை திருமணம் செய்தார்.
 
தற்போதும் அதே கிராமத்தில் தனது இளைய சகோதரருடன் வசித்துவரும் அவர், ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியை.
 
மோதியின் வேட்புமனு குறித்த தகவல் வெளிவரும் வரையில், அந்த ஊரில் இருந்த பலருக்குக்கூட, இவர் மோதியின் மனைவி என்பது தெரியாது. தகவல் வெளியான பிறகு, பலரும் அவரைச் சந்திக்க தொடங்கினர்.
 
2014ஆம் ஆண்டு, பிபிசிக்கு அளித்த பேட்டியில், திருமணமான சில நாட்கள் மட்டுமே தன்னோடு மோதி இருந்தார் என்றும், வேலை நிமித்தமாக வெளியே சென்ற மோதி, பின்பு திரும்பி வரவே இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அதன்பிறகு அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவும் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
குஜராத்தின் முதல்வராக மோதி பதவியேற்றபோது, அவரிடம் பேசும் எண்ணம் தனக்கு வந்ததாகவும் ஆனால், அதற்கான எந்த முயற்சியும் தான் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
 
மோதி பிரதமராக பதவியேற்ற பிறகு, டெல்லிக்கு வரும் விருப்பம் தனக்கு இருந்ததாகவும் அவர் கூறினார். டெல்லிக்கு வந்து, தனது கணவர் வாழும் ஊர், பகுதி மற்றும் இடங்களை பார்க்கும் விருப்பம் இருந்ததாக அவர் கூறியிருந்தார்.
 
அவர் குறித்த விவரங்கள் வெளிவரத் தொடங்கிய பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், திருமணங்களுக்கும் அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். முடிந்தவரை நிகழச்சிகளை தவிர்க்கும் அவர், சில திருமணங்களில் மட்டும் பங்கேற்கிறார்.
 
சர்ச்சைகள்:
 
2014 ஆம் ஆண்டு, யசோதாபென் பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்த போது, அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதற்கான காரணத்தை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அவர் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். ஆனால், அதற்கான பதில் இதுவரை அவருக்கு கிடைக்கவில்லை.
 
ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் வாழும் அவரை பாதுகாக்க 4 முதல் 6 கமாண்டோ அதிகாரிகள் அங்கு பணியில் உள்ளனர். அவர் அருகாமையில் உள்ள கோயிலுக்கு நடந்து செல்லும்போதும், பக்கத்து ஊர்களுக்கு பேருந்தில் செல்லும்போதும், இந்த கமாண்டோக்கள் அவரை காரில் பின்தொடர்கிறார்கள்.
 
இது அவருக்கு பிடிக்கவில்லை என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.
 
கண் கலங்கிய யசோதாபென்:
 
2015ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா மற்றும் அவரின் மனைவியான மிஷேல் ஒபாமா ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தந்தனர். அந்த நிகழ்ச்சியை நேரலையில் யசோதாபென் பார்த்தபோது, அவருடன் பிபிசி குழுவும் இருந்தது. ஒபாமா தம்பதியை மோதி தனியாக நின்று வரவேற்றதை பார்த்த யசோதாபென் கண்கள் கலங்கினார்.
 
 
 
இது ஆனந்த கண்ணீரா அல்லது வருத்தமா என்று கேட்டபோது, அவர் நமக்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை. அந்த நேரத்தில் பிபிசியிடம் பேசிய அவரின் சகோதரரான அஷோக், "என் சகோதரி, பிரதமரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. பிரதமர் நல்ல உடல்நலனுடன் இருக்கவே அவர் விரும்புகிறார். தற்போது அவர் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்," என்று தெரிவித்தார்.
 
மேலும், "ஒரு முறையேனும் பிரதமர் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச வேண்டும் என அவர் விரும்புகிறார். இந்த பாஸ்போர்ட் விவகாரத்திற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. இவர் நடந்து சென்றாலும், பாதுகாப்பு அதிகாரிகள் இவரை காரில் பின் தொடர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது. ஒரு பிரதமரின் மனைவியாக அவருக்கு கிடைக்க வேண்டிய விஷயங்கள் அவருக்கு கிடைக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
 
தற்போது, ஊடகங்களிடம் பேசுவதை தவிர்த்து வரும் யசோதாபென், நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கிறார்.
 
'அழைப்பு ஏதும் வரவில்லை'
 
சூரத் மாநகராட்சியால் இன்று மாலை பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதால் பதவியேற்பு விழாவை நேரலையில் பார்க்க முடியாது என்று யசோதாபென் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
தங்களுக்கு பதவியேற்பு விழாவுக்கான அழைப்பு ஏதும் வரவில்லை யசோதா பென்னின் சகோதரர் அசோக் மோதி தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#Pray_For_Nesamani! சென்னை மாநகர போலீஸ் வெளியிட்ட அதிரடி போஸ்டர்!!