Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ்: கோவிட் 19 தொற்றிலிருந்து மீண்ட வேலூர் இளைஞரின் நம்பிக்கை பகிர்வு

Advertiesment
கொரோனா வைரஸ்: கோவிட் 19 தொற்றிலிருந்து மீண்ட வேலூர் இளைஞரின் நம்பிக்கை பகிர்வு
, திங்கள், 13 ஏப்ரல் 2020 (16:00 IST)
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷரத்தைச் சேர்ந்த 26 வயதான அஹமதுல்லாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானபோது அவரும், அவரது குடும்பத்தாரும் அதிக மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

19 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த அஹமதுல்லாவுக்கு பக்கபலமாக இருந்தது அவரது பள்ளிக்கூட நண்பர்கள்.

அஹமதுல்லா தனது அனுபவத்தை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் .

அஹமதுல்லா கூறியவற்றிலிருந்து,

தொழில் ரீதியாக துபாய் சென்று திரும்பிய எனக்கு மார்ச் 17ம் தேதி காய்ச்சல் வந்தது. கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்திகளில் காய்ச்சல், சளி இருந்தால் உடனே சோதனை செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார்கள் என்பதால் வாலாஜா அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். காய்ச்சல் இருந்ததால் அங்கேயே தங்கவேண்டும் என்றார்கள்.

இரண்டு நாட்களில் காய்ச்சல் குறைந்துவிட்டது. வீட்டுக்கு திரும்புவோம் என நினைத்த நேரத்தில், கொரோனா இருப்பது உறுதியாகிவிட்டது எனவே குணமாகும்வரை அங்கேயே இருக்கவேண்டும் என்றார்கள். முதல் இரண்டு நாட்கள் அதிக மன உளைச்சல் இருந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள் தன்னம்பிக்கை கொடுத்தார்கள். மருந்து, உணவு, பழங்கள் கொடுத்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

எனக்கு சிகிச்சை அளிக்கவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் என எல்லோரும் முகக்கவசம் அணிந்துகொண்டு, பாதுகாப்பு உடைகளுடன் வருவார்கள். இந்த காட்சிகள் முதலில் எனக்கு வருத்தமாக இருந்தது.

வீட்டில் என் பெற்றோர், இரண்டு அண்ணன்கள், தங்கை, அண்ணனின் மூன்று குழந்தைகள் என வீடு நிறைந்திருக்கும். மருத்துவமனையில் நான் மட்டுமே இருக்கிறேன். மொபைல் போன் ஒன்று மட்டும் என்னிடம் இருந்தது. பெற்றோரிடம் வீடியோ காலில் பேசினால், அவர்கள் மேலும் அவதிப்படுவார்கள் என்பதால் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீடியோ கால் செய்தேன். மற்ற நேரங்களில் என் பள்ளிக்கூட நண்பர்கள்தான் என்னை தைரியத்துடன் இருப்பதற்கு ஊக்கம் கொடுத்தார்கள்.

மூன்றாவது நாளில் இருந்து,திடமாக ஒரு எண்ணத்தை மனதில் வைத்தேன். நான் கொரோனாவில் இருந்து கட்டாயம் மீண்டு வருவேன் என்பதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தேன். என் நண்பர்கள் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை நினைவுகூர்ந்து பேசினார்கள். பள்ளி நாட்கள் நினைவுகளை அசைப்போட்டோம்.
webdunia

நண்பர்களோடு பேசிய பின்னர், என் மனதில் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே அனுமதித்தேன். நான் குணமடைந்து வீடு திரும்புவேன். நிச்சயம் பழையபடி என் குடும்பத்தோடு, நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருப்பேன் என்பதை உறுதியாக நம்பினேன்.

மருந்து ஒரு புறம் தேவை என்றால், கொரோனாவில் இருந்து மீண்டுவருவதற்குக் கட்டாயம் தேவைப்படும் டானிக் நம் தன்னம்பிக்கைதான். நான் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது கஷ்டம் என நினைத்தேன். ஆனால் எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றபோதும் என் வீட்டில் உள்ள யாரும் வெளியில் செல்லமுடியவில்லை. எங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள் என்பதால் அவர்களும் முடங்கியிருந்தார்கள்.

என் அம்மா அக்தர் பேகம் வருத்தத்துடன் பேசினார். ஆறு மாதத்திற்கு முன்புதான் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு நான்கு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

ஆனால் கொரோனா வந்துவிட்டதால், மருத்துவமனையில் நான் மட்டும் இருக்கிறேன் என்பதை என் அம்மாவால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உடல்வலி, காய்ச்சல்,தலைவலி என எதைப்பற்றியும் அவரிடம் நான் பேசவில்லை. நான் நலமாக இருக்கிறேன், சீக்கிரம் வீடு திரும்புவேன் என்றேன். முடிந்தவரை குடும்பத்தாருடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன்.
 
கொரோனா பாதித்த நேரத்தில் ஐந்து வேளை தொழுகை செய்தேன். மேலும் மேலும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விஷயங்களை மட்டும் பேசினேன். நன்றாக ஒய்வு எடுக்க எனக்கு ஒரு சமயம் கிடைத்துள்ளது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

எனக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் எனக்கு தைரியம் சொன்னார்கள்.

ஒவ்வொரு நாளும் என்னை சோதனை செய்தார்கள், படிப்படியாக இருமல், உடல்வலி என எல்லாம் சரியாகிவிட்டது. 19 நாட்கள் கழித்து என்னை வழியனுப்பும்போது, நம்பிக்கை சொன்னார்கள், 28 நாட்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்றார்கள். தினமும் என் உடல்நலன் குறித்து என்னிடம் கேட்கிறார்கள். வீட்டில் ஒரு அறையில் நான் இருக்கிறேன். மற்றவர்கள் அருகில் நின்றால் மாஸ்க் போட்டுக்கொள்கிறேன்.

என் வீட்டில் எல்லோரும் மாஸ்க் அணிந்துகொள்கிறார்கள். வெளியில் செல்வதில்லை. என் வீட்டில் உள்ள மூன்று குழந்தைகளும் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். குழந்தைகளின் நலன் கருதி அவர்களை தொடுவதுகூட இல்லை. கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டேன் என்றபோதும், பாதுகாப்பாக இருக்கிறேன்.

கொரோனா காலம் முடிந்த பின்னர், நண்பர்கள் மற்றும் மருத்துவமனையில் எனக்கு உதவியவர்களை நேரில் சென்று பார்ப்பேன். அவர்களுக்கு மிக்க நன்றி. இனி என் வாழ்வில் எந்தவிதமான சிரமம் நேர்ந்தாலும் தைரியத்துடன் அணுகுவேன்.

கொரோனாவை வென்ற எனக்கு எப்போதும் வெற்றிதான்.

இவ்வாறாக தமது அனுபவத்தை பகிர்ந்தார் அஹமதுல்லா

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவர் நியமனம் !