Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகேந்திர சிங் தோனி வருகை: விராட் கோலியுடன் அவர் இணைவதை இந்தியா கொண்டாடுவது ஏன்?

மகேந்திர சிங் தோனி வருகை: விராட் கோலியுடன் அவர் இணைவதை இந்தியா கொண்டாடுவது ஏன்?
, வியாழன், 9 செப்டம்பர் 2021 (13:51 IST)
ஓராண்டுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் அழைத்திருக்கிறது இந்திய அணி.

இந்த முறை அவரது ஹெலிகாப்டர் ஷாட்களை ரசிகர்கள் பார்க்க முடியாது. மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் காணக் கிடைக்காது. ஆனால் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் அவரது தலைமைப் பண்பை மட்டும் நிச்சயமாகப் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.

ஏனென்றால் இப்போது அவர் அணியில் இடம்பெறவில்லை, இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆடுகளத்துக்கு வெளியே இருந்தபடி அணியை அவர் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி-20 உலகக் கோப்பை போட்டிக்கு மட்டும் அணியின் ஆலோசகராக இருப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டதாக டி-20 அணியை அறிவித்தபோது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

விராட் கோலி தலைமையில் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படும் தமிழக வீரர் அஸ்வின் அணியில் மீண்டும் இடம்பிடித்திருக்கிறார்.

அண்மையில் இலங்கைக்கு சென்ற அணிக்கு கேப்டனாக இருந்த ஷிகர் தவான் அணியில் இடம்பெறவில்லை. லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கும் இடமளிக்கப்படவில்லை. அக்ஸர் படேல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

அணியில் பல மாற்றங்கள் நடந்திருந்தாலும் தோனியின் வருகையே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது. ஒரு நாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் எதிர்பார்த்தபடி ஆடாத கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

தோனியின் வருகைக்கு பல முன்னாள் இந்நாள் வீரர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும், நட்சத்திரங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இதை "மாஸ்டர் ஸ்ட்ரோக்" என்று கூறியிருக்கிறார்.

தோனி தேர்வு செய்யப்பட்டது ஏன்?

தோனி கேப்டனாக இருந்தபோது பல முக்கியமான கோப்பைகளை இந்திய அணி வென்றிருக்கிறது. 2007-ஆம் ஆண்டு நடந்த டி-20 உலகக் கோப்பை போட்டிதான் தோனியின் தலைமைப் பணியின் தொடக்கப் புள்ளி. அந்தக் கோப்பையை இந்தியா வென்றதன் மூலமாக அணியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்ததுடன் தலைமைப் பதவிக்கும் உயர்த்தப்பட்டார்.

2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என பெருமைக்குரிய பல பட்டங்களை இந்தியா வெல்லும்போதும் தோனியே அணியின் கேப்டனாக இருந்தார்.

சர்வதேசப் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் ஐபிஎல் தொடர்களில் அவர் தொடர்ந்து ஆடி வருகிறார். அதிலும் அவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதும் மதிக்கப்படும், வெற்றி வாய்ப்புள்ள அணியாகவே திகழ்ந்து வருகிறது. இப்படி கிரிக்கெட் விளையாட்டுடன் தோனி தன்னை நெருக்கமாகத் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறார்.

பெரிய தொடர்களின் முக்கியப் போட்டிகளின்போது இந்திய அணி தடுமாறுவது வாடிக்கையாகி விட்டதாகவே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

2017-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. 2019- உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரை முன்னேறி நியூசிலாந்து அணியிடம் தோற்றுப்போனது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளைத் சரியாகக் சமாளிக்கும் திறன் கொண்டவராகவே தோனி பார்க்கப்படுகிறார்.

தோனியின் தேவை இந்திய அணிக்கு இருப்பதாகவே சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆயினும் விராட் கோலிக்கு மாற்றாகவோ அவருக்குப் போட்டியாகவோ தோனி மீண்டும் கொண்டு வரப்படவில்லை என்பதை அணியின் அறிவிப்பின்போது ஜெய் ஷா தெளிவுபடுத்தினார். கோலியுடனும், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடனும் ஆலோசனை நடத்தி, அவர்களின் விருப்பத்துடனேயே தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தினேஷ் கார்த்திக் கூறியிருப்பது போல தோனியைத் தேர்வு செய்திருப்பது "மாஸ்டர் ஸ்ட்ரோக்" - ஆக இருக்கலாம். ஆனால் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் தோனியும் இணைந்து டி-20 உலகக் கோப்பையை வென்றால்தான் அது உறுதியாகும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசாமில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கப்பல்கள்! – பயணிகளை தேடும் பணி தீவிரம்!