Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் – யார் இவர்?

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (11:19 IST)
இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதி, ஜெனரல் பிபின் ராவத் புதன்கிழமையன்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
யார் இந்த மதுலிகா ராவத்?
மதுலிகா ராவத், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விபத்துச் செய்தியை அறிந்ததிலிருந்து ஷாதோலில் பெரும் சோகம் சூழ்ந்துள்ளது.
மதுலிகா ராவத்தின் தாயார் ஜோதி பிரபா சிங் இன்னும் ஷாதோலில் இருப்பதாகவும் அவருடைய குடும்பத்துடன் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் குடும்பத்தினரிடம் இருந்து கிடைத்த தகவலில் கூறப்பட்டுள்ளது. மதுலிகா ராவத்தின் சகோதரர் யஷ்வர்தன் சிங் டெல்லி சென்றுள்ளார்.
 
ஷாதோலில் அமைந்துள்ள சோஹாக்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மதுலிகா ராவத். அவருடைய தந்தை ம்ரேகேந்திர சிங் தற்போது உயிருடன் இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பிபின் ராவத் கடைசியாக ஷாதோலுக்கு 2012-ம் ஆண்டு சென்றுள்ளார்.
 
மதுலிகா ராவத் தனது ஆரம்பக்கட்ட படிப்பை ஷாதோலில் முடித்தார். அதன்பிறகு மேல் படிப்பிற்காக குவாலியர் சென்று, சிந்தியா பள்ளியில் படித்தார். பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
 
1986-ம் ஆண்டு பிபின் ராவத்திற்கும் மதுலிகாவிற்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்குத் திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகள் படித்துக் கொண்டிருக்கிறார்.
 
பிபின் ராவத்: ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி மரணம்
பிபின் ராவத்: பாஜகவின் குரலில் பேசியதாக விமர்சிக்கப்பட்ட ராணுவ அதிகாரி
மதுலிகா ராவத் தான் ஹர்ஷ்வர்தன் சிங் மற்றும் யஷ்வர்தன் சிங் ஆகியோரின் ஒரே சகோதரி.
அவர், ராணுவ வீரர்களின் மனைவிகள் நல சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். அதன் இணைய பக்கத்தில், இது ராணுவ வீரர்களின் மனைவிகள், குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்காகச் செயல்படும் அமைப்பு என விவரிக்கப்பட்டுள்ளது.
 
ராணுவ வீரர்களின் மனைவிகள் நலச் சங்கம் 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், இது நாட்டின் மிகப்பெரிய தன்னார்வ நிறுவனங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது.
 
கணவரை இழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள், புற்றுநோயாளிகள், ஊனமுற்ற குழந்தைகளுக்கான சமூகப் பணிகளில் ஈடுபட்டார் மதுலிகா ராவத்.
 
என்ன நடந்தது?
 
நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
 
நேற்று காலை 11.00 - 11.30 மணியளவில் இந்த நிகழ்வு நடந்தது.
 
இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி உட்பட 13 பேரும் உயிரிழந்த நிலையில், விமானத்தில் சென்ற க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரி தப்போது வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றபோது குன்னூர் காட்டேரி பார்க் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது.
 
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளின் ஊழியர்களுக்கான கல்லூரியில் நடக்க இருந்த ஒரு நிகழ்வுக்காக பிபின் ராவத் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
 
பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப் படை நேற்று மதியம் உறுதி செய்து உயிரிழந்த செய்தியை மாலை 6 மணியளவில் அறிவித்தது.
 
விமானம் விழுந்து நொறுங்கிய இடம் வெலிங்டனில் இருந்து சுமார் 3.85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments