கடந்த ஒரு மாதத்துக்குள் மூன்றாவது கிரகணத்தை இந்த உலகம் காண உள்ளது. கடந்த ஜூன் 5-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நடந்தது. இந்தநிலையில், மேலும் ஒரு சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது.
2020-ம் ஆண்டில் நிகழ உள்ள மூன்றாவது சந்திர கிரகணம் இது. ஜனவரி 10-ம் தேதி முதல் சந்திர கிரகணமும், ஜூன் 5-ம் தேதி இரண்டாவது சந்திர கிரகணமும் நிகழ்ந்துள்ளன.
ஞாயிறு அன்று நிகழப்போகும் கிரகணம், ‘புறநிழல் சந்திர கிரகணமாகும்’ (Penumbral lunar eclipse). இந்த கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.
கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். புறநிழல் என்பது பூமியின் நிழலின் வெளிப்பகுதியாகும். இதே போன்ற 'புறநிழல் நிலவு மறைப்பு' எனப்படும் சந்திர கிரகணம்தான் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதியும், ஜூன் 5-ம் தேதியும் நிகழ்ந்தது.
இந்த சந்திர கிரகணம் ஞாயிறு (ஜூலை 5) காலை 8.37க்கு துவங்கி 11.22 மணிக்கு முடிவடையும். அதிக நிலவு மறைப்பு நிகழ்வது 9.59 மணிக்கு நடக்கும். மொத்தமாக கிட்டதட்ட 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு இந்த கிரகணம் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி காலை நேரத்தில் இந்த கிரகணம் நிகழ்வுள்ளதால் இதை இந்தியாவில் காண முடியாது. அனால், இதை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் காணலாம்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் சவுந்தரராஜன் பெருமாள்,`` சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளியை நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும். நாளை நிகழப்போகும் கிரகணம், முழுமையான கிரகணம் அல்ல. இது ஒரு புறநிழல் சந்திர கிரகணமாகும்`` என்கிறார்.
மேலும் அவர், “குறிப்பிட்ட நாடுகளில் சந்திரன், பௌர்ணமி நிலவு போலவே காட்சி அளிக்கும். நிலவின் வண்ணத்தில் ஏற்படும் மாற்றத்தை மக்களால் காண முடியாது,” என்கிறார் அவர்.