Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லம்பி வைரஸ்: பசும்பால் குடிப்பதால் மனிதர்களுக்கு தொற்று பரவுமா? உண்மை என்ன?

Lumby Virus
, செவ்வாய், 25 அக்டோபர் 2022 (15:37 IST)
கால்நடைகளை பாதிக்கும் லம்பி வைரஸ் தொடர்பான தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்திய அரசின் சமீபத்திய தகவல்களின்படி, இந்தியாவில் மட்டும் லம்பி வைரசால் 24 லட்சம் கால்நடைகள் பாதிக்கப்பட்டு அவற்றுள் 1 லட்சத்து 10ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

பால் உற்பத்தில் உலகின் மிகப்பெரிய நாடான இந்தியா கால்நடைகள் எண்ணிக்கையிலும் உலகின் மிகப்பெரிய நாடாக இருக்கிறது. ஆனால், இந்த லம்பி வைரசால கால்நடைகளை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையில், பால் பருகுவது, தொடர்பான தவறான தகவல்கள் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

வைரஸ் பாதித்த கால்நடையின் பாலை மனிதர்கள் அருந்தலாமா? அது பாதுகாப்பானதா?

மேலே உள்ள படம் ஒரு ட்விட்டர் பதிவு. ஹிந்தியில் உள்ள இந்த ட்வீட்டில், "அனைத்து நண்பர்களும் சில நாட்களுக்கு தேநீர் குடிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். லம்பி வைரஸ் நமது நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வேகமாகப் பரவியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு தவறானது; உண்மையில், இந்த நோய் மனிதர்களை பாதிக்காது.

"வைரஸ் பாதித்த கால்நடையின் பாலை மனிதர்கள் பருகினால், அவர்களுக்கும் அதேபோல தோல் வியாதிகள் வரலாம் என்று ஏராளமான சமூக ஊடக பதிவுகள் பொய்யாகத் தெரிவிக்கின்றன. இந்தப் பதிவுகளில் மனிதர்கள் தோல் வியாதிகளுடன் இருக்கும் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது அச்சத்தை அதிகரிக்கிறது.

பால் பொருட்கள் துறையினரின் சமூக ஊடக குழுக்களில் இதுபோன்ற ஏராளமான பதிவுகளை நான் பார்த்திருக்கிறேன். இவற்றைப் பரப்புவது பொறுப்பற்றது. ஆனால், அவர்கள் அதை உண்மை என்று நம்புவதால் பகிர்கிறார்கள்," என்கிறார் சுமார் 6000 கால்நடை விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட கூட்டமைப்பின் பொதுச்செயலாளரான போரஸ் மெஹலா.


பால் உற்பத்தியாளர்கள் இது போன்ற பதிவுகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். "இந்த பதிவுகளை சமூக ஊடகங்களில் நான் கவனித்தேன். அதுபோக, இதை நம்பும் சிலர் பாலை தூக்கி எறிந்ததாகவும் கேள்விப்பட்டேன். லம்பி வைரசால் ஏற்கெனவே மாடுகளை இழந்து பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் கால்நடை உரிமையாளர்களின் துன்பத்தை இப்போது பால் மீதான தவறான நம்பிக்கையும் சேர்ந்து மேலும் அதிகரித்துள்ளது."

லம்பி வைரஸ் பாதித்த பசுவின் பாலை குடிக்கலாமா என்ற கேள்விக்கான தேடல்கள் கடந்த 30 நாட்களில் 5000% அதிகரித்துள்ளதாக கூகுள் ட்ரெண்ட்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

உண்மையில், லம்பி வைரஸால் வரும் தோல் நோய் விலங்கியல் நோய் அல்ல. அப்படியென்றால் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது அல்ல என்று பொருள். லம்பி வைரஸ் தோல் நோய், மனிதர்களை பாதிக்காது என்று உணவு மற்றும் விவசாயத்திற்கான ஐ,நா.வின் அமைப்பு (UN's Food and Agricultural Organisation -FAO) உறுதி செய்துள்ளது.

இந்தத் தகவலை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமும் (IVRI) உறுதி செய்துள்ளது. "விலங்கிலிருந்து மனிதருக்கு இந்த நோய் பரவுவதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. தொற்று ஏற்பட்ட பசுவின் மடியில் நேரடியாக பால்குடிக்கும் கன்றுக்குட்டிக்கு இந்த தொற்று ஏற்படலாம்" என்கிறார் IVRI இணைய இயக்குநர் மருத்துவர் கே.பி.சிங்.

சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளில் இணைக்கப்பட்டிருக்கும் மனித உடல்களின் படங்கள், அடிக்கடி இதுபோன்ற தவறான பதிவுகளில் வைக்கப்படுபவையே. மேலும், "முறையான ஆய்வக பரிசோதனைகள் ஏதுமின்றி, வெறுமனே ஒரே மாதிரியான அறிகுறிகளை வைத்து இந்த நோய்தான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இதே போன்ற அறிகுறிகளுடன் ஏராளமான நோய்கள் உள்ளன" என்றும் கே.பி.சிங் தெரிவிக்கிறார்.

லம்பி வைரஸ் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்ததா?

லம்பி வைரஸின் தோற்றுவாய் குறித்த செய்திகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. அவற்றுள், 'லம்பி வைரஸ் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்தது', 'இந்திய பசுக்களுக்கு எதிரான பாகிஸ்தானின் சதிதான் இது' ஆகிய தகவல்களும் அடக்கம். இந்தியாவின் பெரும்பான்மையான இந்து மக்களால் பசுக்கள் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.

உண்மை என்ன?

லம்பி வைரஸ் முதன்முதலாக ஜாம்பியா நாட்டில் 1929ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த வைரஸ், சப் சஹரன் ஆப்பிரிக்கா என்று அழைக்கப்படும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பேரிடராக இருந்தது. பின்னர் அங்கிருந்து வட ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா, ஐரோப்பாவுக்கும் பரவின.


ஆசியாவில் முதல்முறையாக வங்கதேசம், சீனா மற்றும் இந்தியாவில் இந்த வைரஸ் 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தெரிவிக்கிறது. 2020ஆம் ஆண்டு எஃப்.ஏ.ஓ. தன் அறிக்கையை வெளியிடும்வரை பாகிஸ்தானில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இதன்மூலம், பாகிஸ்தானில் இந்த வைரஸ் கண்டறியப்படும் முன்பாகவே, இந்தியாவில் லம்பி வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது தெரியவருகிறது. எனவே, பாகிஸ்தானிலிருந்து லம்பி வைரஸ் இந்தியாவுக்குள் வந்தது என்ற தகவல் பொய்யானது.

இந்த தகவல் மருத்துவர் கே.பி.சிங் வாயிலாக மேலும் உறுதி செய்யப்பட்டது. "இந்த தொற்று எல்லை கடந்த கால்நடைகள் பரிமாற்றத்தால் வங்கதேசத்தில் இருந்துதான் இந்தியாவுக்குள் வந்தது. பாகிஸ்தானில் இருந்து அல்ல. இந்தியாவுக்கு முன்பே வங்கதேசத்தில் இந்த தொற்று இருந்தது. பாகிஸ்தானில் இந்தியாவுக்கு பின்னரே வந்தது," என்று அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி குறித்தும் பரவிய தகவல்கள்

 
சமூக ஊடகங்களில் உலவும், தடுப்பூசிக்கு எதிரான சதிக்கோட்பாடுகளின் வரிசையில் லம்பி வைரஸ் தொடர்பான பொய்த் தகவல்களும் இணைந்துகொண்டன.

கொத்துக்கொத்தாகக் கிடக்கும் கால்நடைகளின் காட்சியைக் காட்டும் காணொளி ஒன்று, " இந்திய அரசின் தடுப்பூசியைச் செலுத்திய பின்னர் திடீரென இந்த கால்நடைகள் இறந்தன" என்று தெரிவித்தது. இந்த காணொளி பல்லாயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு பல்லாயிரம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்டிருந்தது.

இந்த காணொளி உண்மையானதுதான். ஆனால், அதற்கு காரணம் லம்பி வைரசுக்கான இந்திய அரசின் தடுப்பூசி என்பது பொய். பரவி வரும் லம்பி வைரஸ் தொற்றைத் தடுக்க, இதுபோன்ற பெரிய அளவிலான தடுப்பூசி செலுத்தல் ஒரு மிகச்சிறந்த வழி என்று FAO தெரிவிக்கிறது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தற்போது நடந்து வருகிறது, மேலும் கால்நடை அம்மை தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. லம்பி வைரஸ் நோய்க்கான எதிர்ப்பாற்றலை கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி வழங்குகிறது.

2019 ஆம் ஆண்டிலிருந்து இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டறிய ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், லம்பி வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். ஆனால், இன்னும் அந்தத் தடுப்பூசி வணிக ரீதியான பயன்பாட்டுக்கு வரவில்லை.

இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விலங்குகள் ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. "தற்போது உள்ள ஒரே தீர்வு கோட்பாக்ஸ் தடுப்பூசி எனப்படும் கால்நடை அம்மை தடுப்பூசியாகும். மிகவும் நல்ல தடுப்பூசியான இது, எந்த பக்க விளைவுகளும் இன்றி லம்பி வைரஸ் நோய்க்கு எதிராக 70-80% பாதுகாப்பு அளிக்கிறது. இந்த தாக்கத்தை நாங்கள் களத்தில் இருந்து கவனித்து நல்ல கருத்துகளையும் பின்னூட்டங்களாகப் பெறுகிறோம்," என்று டாக்டர் கே.பி. சிங் பிபிசியிடம் கூறினார்.

Updated By Prasanth.K

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் இறுதிக்குள் வடகிழக்கு பருவமழை.... வானிலை ஆய்வு மையம்