Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ. அன்பழகன், ஜெயலலிதா, கருணாநிதி: நடப்பு சட்டப்பேரவையில் நீளும் மரண பட்டியல்!

ஜெ. அன்பழகன், ஜெயலலிதா, கருணாநிதி: நடப்பு சட்டப்பேரவையில் நீளும் மரண பட்டியல்!
, புதன், 10 ஜூன் 2020 (14:23 IST)
தற்போது தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் 15வது சட்டப்பேரவையில் இதுவரை ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர்.
 
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று (ஜூன் 10) காலை உயிரிழந்த நிலையில், தற்போது தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் 15வது சட்டப்பேரவையில் இதுவரை ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர்.
 
கடந்த ஓராண்டில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டுவரும் சட்டப்பேரவை, மாநிலத்தின் 15வது சட்டப்பேரவை. 2016ல் தேர்வுசெய்யப்பட்ட இந்த சட்டப்பேரவையில், அ.தி.மு.க. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஜெ.ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
 
ஆனால், இந்தச் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்து தற்போதுவரை சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மரணமடைந்துவருகின்றனர். தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனின் மரணத்தோடு சேர்ந்து இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.எம். சீனிவேல், வாக்கு எண்ணிக்கை நடந்த தினத்தன்றே காலமானார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் வெற்றிபெற்றிருந்தபோதிலும், சட்டமன்றத்தில் உறுப்பினராகப் பதவியேற்பதற்கு முன்பே காலமானார்.
 
அதற்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா (சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம் தொகுதி), ஆர்.கனகராஜ் (சூலூர் தொகுதி) என அடுத்தடுத்து மரணங்கள் நடந்தன.
 
தி.மு.கவிலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்தனர். கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி (திருவாரூர்), கே.ராதாமணி (விக்கிரவாண்டி), கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), எஸ்.காத்தவராயன் (குடியாத்தம்) ஆகியோர் உயிரிழந்துவிட்ட நிலையில், ஐந்தாவதாக சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ. அன்பழகனும் உயிரிழந்திருக்கிறார். கே.பி.பி. சாமியும் எஸ். காத்தவராயனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர்.
 
விக்கிரவாண்டி கே. ராதாமணி, திருவொற்றியூர் கே.பி.பி. சாமி, குடியாத்தம் காத்தவராயன், சேப்பாக்கம் அன்பழகன் என தி.மு.கவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த ஓராண்டிற்குள் உயிரிழந்துள்ளனர்.
 
இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.கவின் பலம் 100ஆக உயர்ந்திருந்த நிலையில், கே.பி.பி. சாமி, எஸ். காத்தவராயன் மறைவுக்குப் பிறகு 98ஆகக் குறைந்தது. ஜெ. அன்பழகனும் உயிரிழந்திருக்கும் நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 97ஆகக் குறைந்துள்ளது.
 
234 எம்எல்ஏக்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் தற்போது 231 உறுப்பினர்களே உள்ளனர். இந்த சட்டப்பேரவையின் காலம் 2021 ஏப்ரல் வரையே உள்ளதால், தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடத்திட்டங்கள் குறைப்பு; பள்ளி திறப்பு எப்போது? – மத்திய அரசு பதில்!