Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிப்பூரில் குகி - மெய்தேய் மீண்டும் மோதல்: டிரோன், ராக்கெட் லாஞ்சர்கள் கிடைத்தது எப்படி?

Manipur

Prasanth Karthick

, திங்கள், 9 செப்டம்பர் 2024 (14:24 IST)

மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 7) காலை நடந்த வன்முறைச் சம்பவத்தில் நான்கு ஆயுததாரிகள் மற்றும் ஒரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

 

 

இந்தத் தாக்குதல் அசாம் எல்லையில் உள்ள ஜிரிபாம் பகுதியில் உள்ள மோங்பங் கிராமத்திற்கு அருகே நடந்துள்ளது.

 

பாதுகாப்புப் படையினரின் கூற்றுப்படி, ஜிரிபாம் மாவட்டத்தில் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர், மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரை அவரது வீட்டில் வைத்துக் கொலை செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

 

தற்போது அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

சனிக்கிழமை காலை மெய்தேய் சமூகத்தின் ஆயுதக் குழுக்களுக்கும், குக்கி பழங்குடியினரின் ‘கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கும்’ இடையே துப்பாக்கிச் சூடு துவங்கியதாக சில உள்ளூர்வாசிகள் கூறினர்.

 

மோங்பங் கிராமத்திற்கு அருகில் வசிக்கும் குகி பழங்குடி கிராமவாசி ஒருவர் கூறுகையில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடந்ததாகவும், தற்போது ​​அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

பாதுகாப்பு படை அதிகாரி என்ன சொன்னார்?

மணிப்பூரில் இருக்கும் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆயுதம் ஏந்திய சிலர் காலையில் கிராமத்திற்குள் நுழைந்து ஒருவரைக் கொன்ற பிறகு துப்பாக்கிச் சூடு துவங்கியது. இந்தக் கொலை, மெய்தேய் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே நடந்து வரும் இன மோதலின் ஒரு பகுதி. குக்கி மற்றும் மெய்தேய் ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இறந்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது," என்றார்.

 

ஜிரிபாம் காவல் நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிங்க்தெம் குனாவ் என்ற பகுதியில், அதிகாலை 5 மணியளவில் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த ஒய் குல்சந்திரா என்ற 63 வயதான நபர், குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

குல்சந்திராவின் மனைவி ஒய் பெம்ச்சா, சம்பவத்தின் போது தான் உணவு சமைத்துக் கொண்டிருந்ததாக ஊடகங்களிடம் தெரிவித்தார். அப்போது, ​​ஆயுதம் ஏந்திய மூன்று பேர் அவரது வீட்டிற்குள் நுழைந்து, கணவரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர் என்று அவர் கூறினார்.

 

இந்தத் தாக்குதலை உறுதிசெய்த, ஜிரிபாம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர், "இந்தத் தாக்குதலில் மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர்," என்றார்.

 

தற்போது, ​​பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

செப்டம்பர் 7-ஆம் தேதி தாக்குதல் குறித்து, மணிப்பூர் காவல்துறை ஐ.ஜி (உளவுத்துறை) கே.கபீப் ஊடகங்களிடம் கூறுகையில், "காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது, அதன் பிறகு பதிலடித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது" என்றார்.

 

போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து ராணுவச் சீருடையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது வரை அந்த உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.

 

மணிப்பூரில் கடந்த 16 மாதங்களாக நீடிக்கும் குக்கி-மெய்தேய் சமூகங்களுக்கிடையிலான வன்முறையில், கடந்த 2 நாட்களாக ட்ரோன் குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் பாதுகாப்புப் படையினரின் கவலையை அதிகரித்துள்ளது.

 

இந்த சமீபத்திய வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மணிப்பூர் காவல்துறை அதிகாரி கே.கபீப், "மாநிலத்தில் சமீபத்திய வன்முறை காரணமாக, மணிப்பூர் காவல்துறை கூட்டு பாதுகாப்புப் படைகளுடன் ஒருங்கிணைந்து சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எங்கள் மூத்த அதிகாரிகள் களத்தில் மற்றும் மாவட்டத் தலைமையகத்தில் தங்கி தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். மாநிலக் காவல்துறை ட்ரோன்களைத் தடுக்கும் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி வருகிறது. அத்தகைய கட்டமைப்புகளை மேலும் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது,” என்றார்.

 

அமைச்சரவையைக் கூட்டி முதல்வர் ஆலோசனை

முன்னதாக, அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் வலுவான எதிர்வினைகளையும், தேவையான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க மணிப்பூர் மாநில அரசு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

 

இதற்கிடையில், செப்டம்பர் 7-ஆம் தேதி நடந்த இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அதே நாள் மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி, தற்போதைய நிலைமை குறித்து ஆலோசித்தார்.

 

ஆயுததாரிகளிடம் ட்ரோன் வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் இருப்பது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அத்தகைய அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதேசமயம், குகி பழங்குடி அமைப்புகள், இந்தச் சமீபத்திய வன்முறைக்கு மாநில முதல்வர் பிரேன் சிங் தான் பொறுப்பு என்று கூறும் ஆடியோ கிளிப் ஒன்றை வைத்துள்ளனர். அதில் முதல்வருக்கும் இந்த வன்முறைக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

 

குகி பழங்குடியினரின் உச்ச அமைப்பான குகி இன்பியின் (Kuki Inpi) உயர்மட்டத் தலைவர் ஒருவர் பிபிசி-யிடம் கூறுகையில், "கடந்த வாரம் முதல்வரின் ஆடியோ கிளிப் வெளியானதையடுத்து மாநிலத்தில் மீண்டும் வன்முறை துவங்கியது. ஏனெனில் இந்த ஆடியோ வெளியானதையடுத்து, குகி அமைப்புகள் அதனைக் கடுமையாக எதிர்த்தன,” என்றார்.

 

“குகி பழங்குடியினரின் உச்ச அமைப்பான குகி இன்பி, குகி மாணவர் அமைப்பு, உள்ளிட்ட பல குகி அமைப்புகள் சனிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன,” என்றார் அவர்.

 

இன மோதலுக்கும் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்குக்கும் தொடர்பை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் ஆடியோ எதிரொலியாக இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

 

இருப்பினும், பிபிசி அத்தகைய ஆடியோ கிளிப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.

 

மணிப்பூர் அரசாங்கம் இந்த கிளிப் 'போலியானது' என்று கூறியதுடன், மாநிலத்தில் 'அமைதி முன்னெடுப்பைச்' சீர்குலைக்கும் முயற்சியில் இது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது என்று கூறியிருக்கிறது.

 

முன்னதாக, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6), மறைந்த முன்னாள் முதல்வர் மாரெம்பம் கொய்ரெங்கின் வீட்டின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார், பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இரண்டு கட்டடங்கள் அழிக்கப்பட்டன.

 

ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள்

இந்தச் சமீபத்திய வன்முறைச் சம்பவங்களில், அதிநவீன ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஆர்.பி.ஜி-க்கள் (rocket propelled guns - ராக்கெட் குண்டுகளைச் செலுத்தும் துப்பாக்கிகள்) பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

 

இத்தகைய ஆயுதங்கள் பொதுவாகப் போரின் போது பயன்படுத்தப்படுபவை ஆகும்.

 

போலீஸார் கூற்றுப்படி, பொதுவாகப் போரின் போது ட்ரோன் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது ஒரு பெரிய மாற்றமாகும்.

 

“இந்தச் சம்பவத்தில் சிறந்த பயிற்சி, தொழில்நுட்ப நிபுணத்துவம், மற்றும் உதவிக்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது,” என போலீசார் கூறுகின்றனர்.

 

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக் காவல்துறை தயாராகி வருகிறது.

 

ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை தொடர்கிறது

மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குகி மற்றும் மெய்தேய் மோதல் துவங்கியது.

 

2023-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி மணிப்பூர் உயர் நீதிமன்றம், ஒரு உத்தரவில், மெய்தேய் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை விரைவாக பரிசீலிக்குமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டது.

 

இந்த உத்தரவுக்குச் சில நாட்களுக்குப் பிறகு, மாநிலத்தில் வன்முறை வெடித்து, பலர் உயிரிழந்தனர். இந்த வன்முறையால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர், பொது சொத்துகளும் சேதம் அடைந்தன.

 

மெய்தேய் சமூகத்திற்குப் பட்டியல் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே இந்த வன்முறைக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

பின்னர் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மணிப்பூர் உயர் நீதிமன்றம் அதன் முந்தைய உத்தரவில் இருந்து மெய்தேய் சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கான பரிந்துரை குறிப்பிடப்பட்டிருந்த பகுதியை நீக்கியது.

 

மணிப்பூரில் கடந்த ஆண்டு தொடங்கிய வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அங்கே இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

 

வன்முறையால் பாதிக்கப்பட்ட மெய்தேய் மற்றும் குகி சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட சிலர் அண்டை மாநிலமான மிசோரமில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

 

கடந்த சில மாதங்களாக மாநிலத்தில் பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.780 கோடி வாடகை பாக்கி.! கிண்டி ரேஸ் கிளப்புக்கு சீல்.!!