மணிப்பூரில் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.
மணிப்பூரில் வசிக்கும் குக்கி - மெய்தி இன மக்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. மேலும் 2 பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கியது.
மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவ்வப்போது மோதல் வெடித்து வருகிறது
இந்த நிலையில், பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டின் வளாகத்தில் விழுந்த இந்த குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.
ராக்கெட் குண்டு வீச்சு நடந்த இடத்திற்கு அருகில்தான் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது. குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக சொல்லப்படுகிறது. தாக்குதல் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.