உலகம் முழுக்க உள்ள 168 கலாச்சாரங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பாதிக்கும் குறைவானவர்களே உதடுகளால் முத்தமிடுகிறார்கள்.
46 சதவீதம் பேர் மட்டுமே காதல் உணர்வில் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கிறார்கள் என்கிறார் நெவாடா லாஸ் வேகாஸ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் வில்லியம் ஜான்கோவியாக். இதில் பெற்றோர் குழந்தைக்கு கொடுக்கும் முத்தம் அல்லது வாழ்த்துக்களுக்கு கொடுக்கும் முத்தம் எலாம் கணக்கில் கிடையாது.
மனிதர்கள் ஏன் முத்தமிட வேண்டும் என்பதற்கு இரண்டு கோட்பாடுகள் கூறப்படுகின்றன.
குழந்தைகளாக இருக்கும் போதே நமக்கு உதட்டைத் தொடுவதில் இயல்பான விருப்பம் இருக்கிறது என்ற எண்ணத்திலிருந்து முத்தம் கொடுப்பது வருகிறது.
நாம் உதட்டை தொடுவதை தாய்ப்பால் குடிப்பதோடு தொடர்புபடுத்தலாம், அந்த தன்னிச்சையான செயல் நம் அனைவருக்கும் இயல்பாகவே இருக்கிறது.
தாய்ப்பால் குடிப்பது ஒரு பக்கம் இருக்க, குழந்தைகளுக்கான உணவை தாய் தன் வாயில் மென்று குழந்தைக்கு கொடுக்கும் வழக்கத்தை "premastication food transfer" என்கிறார்கள்.
உணவு தாயின் வாயிலிருந்து குழந்தையின் வாய்க்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இதனால் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கப்படுகிறது. தாய் மற்றும் சேய்க்கு மத்தியிலான உறவு வலுக்கிறது.
இப்படி வாயிலிருந்து நேரடியாக உணவு கொடுக்கப்படும் வழக்கம் சிம்பன்ஸி போன்ற மனிதர்களின் மூதாதையர்களிடம் காண முடிகிறது.
முத்தம் கொடுப்பதற்கும், அணிந்திருக்கும் ஆடைகள் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்கிற ஒரு யோசனையும் கூறப்படுகிறது.
பொதுவாக அதிகம் ஆடை உடுத்தாத வேட்டையாடும் சமூகத்தில் அதிகம் முத்தம் கொடுப்பதை காண முடியவில்லை. காரணம் அவர்களால் ஒருவரின் எந்த ஒரு உடல் பாகத்தோடும் தங்கள் உணர்வை வெளிப்படுத்த முடியும்.
ஆனால் ஆர்டிக் பகுதியில் இருக்கும் இன்யூட் வேட்டைச் சமூகங்கள் மத்தியில் இதழோடு இதழ் பதித்து மூக்கோடு மூக்கு உரசும் முத்தத்தைக் காண முடிந்தது. காரணம் அவர்கள் குளிர் காரணமாக அதிக ஆடை அணிந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் முகத்தில் உணர்வை வெளிப்படுத்தும் ஒரே பகுதியாகிறது உதடு.
ஆக ஆடைகள் குறைவாக அணிய அணிய முத்தம் கொடுப்பது குறைகிறது. ஆடைகளை அதிகம் அணிந்து கொண்டால் முத்தம் கொடுப்பது அதிகரிக்கிறது என்கிறார் வில்லியம் ஜான்கோவியாக்.
"மனிதர்களின் உணர்வு முத்தத்தைத் தாண்டி பல வழிகளில் பூர்த்தி செய்யப்படுவதால் மனிதர்கள் முத்தம் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்" என்கிறார் வில்லியம் ஜான்கோவியாக்.
இதழோடு இதழ் வைத்து முத்தமிடாத கலாச்சாரங்களில் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருக்க பிற வழிகளைக் கண்டிருக்கின்றனர் என ஷெரில் கிர்ஷன்பாம் கூறுகிறார்.
"டார்வின் விவரித்த மலாய் முத்தம் உள்ளது. பெண்கள் தரையில் ஸ்குவாட் முறையில் அமர்ந்து கொள்வார்கள், தங்கள் கூட்டாளியை ஒருவருக்கொருவர் விரைவாக முகர்ந்து கொள்வார்கள் - அவர்களின் கூட்டாளியின் வாசத்தை உணர்ந்து கொள்வர்."
பப்புவா நியூ கினியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ட்ரோப்ரியாண்ட் தீவுகளில், காதலர்கள் நேருக்கு நேர் அமர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் கண் இமைகளை கடித்து முத்தமிடுகிறார்கள்.
"நம்மில் பலருக்கு இது காதலின் உச்சம் போல் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அப்படிப்பட்ட முத்தம் வேலை செய்கிறது" என்கிறார் கிர்ஷன்பாம்.
உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது மற்றும் பிற வகையான முத்தங்களில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த தருணத்தில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்து அந்தரங்க தகவல்களைப் பகிர்ந்து கொள்வது தான்.
உதடுகளை ஒன்றாகக் குவித்து அழுத்துவதன் மூலம் முத்தமிடுவது கிட்டத்தட்ட தனித்துவமான மனித நடத்தை. முத்தம் என்கிற விஷயத்துக்கு ஒரு பரிணாம நோக்கம் இருக்கிறது என்றால், ஏன் விலங்குகள் முத்தமிடுவதை நாம் அதிகம் பார்க்க முடிவதில்லை?
மெலிசா ஹோகன்பூம் என்பவர் 2015 ஆம் ஆண்டில் பிபிசி எர்த்திடம் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஒரு கூட்டாளியின் முகத்தை நெருங்க நாம் கட்டாயப்படுத்தப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்களை நன்றாக முகர்வதற்குத் தான்.
ஒருவரின் வாசனை அனைத்து வகையான பயனுள்ள தகவல்களையும் வெளிப்படுத்த முடியும்: உணவு, நோய் இருப்பது, மனநிலை என பல தொடர்புடைய விஷயங்களை முத்தம் வெளிக்காட்டும்.
பல விலங்குகள் மனிதர்களை விட மிக நுட்பமான வாசனை உணர்வைக் கொண்டுள்ளன, எனவே அவை கிட்டத்தட்ட தன் கூட்டாளிக்கு நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவது இல்லை.