Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீர் பிரச்சனை - "காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்" - இம்ரான் கான்

Advertiesment
காஷ்மீர் பிரச்சனை -
, சனி, 6 பிப்ரவரி 2021 (11:45 IST)
காஷ்மீர் விவகாரத்தில் பல தசாப்தங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி,  பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

நேற்று (பிப்ரவரி 5, வெள்ளிக்கிழமை) பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இருக்கும் கோட்லி எனும் இடத்தில் 'காஷ்மீர் ஒற்றுமை நாள் கூட்டம்' நடைபெற்றது.
 
1991ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "நீங்கள் காஷ்மீரின் எதிர்காலத்தை  தீர்மானிக்கும்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்தால், பாகிஸ்தானோடு இணைந்து இருக்கலாம் அல்லது விரும்பினால் தனியாக சுதந்திர நாடாக  இருக்கும் உரிமையை பாகிஸ்தான் வழங்கும்" எனக் கூறினார்.
 
"காஷ்மீர் மக்களுக்கும், பாகிஸ்தானுக்கும் வழங்கிய உத்தரவாதத்தை ஐநா சபைக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால், இதேபோன்று இந்தோனீசியா உள்ளிட்ட  நாடுகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தை ஐநா நிறைவேற்றியுள்ளது."
 
"சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவாக பாகிஸ்தான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகமும் நிற்கிறது. காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை என்னால் உணர முடிகிறது. நீங்கள் விரும்பியதை பெறும் வரை, நான் செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்று அவர் மேலும்  கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக ட்விட்டரில் தொடர் பதிவுகளை இட்டுள்ள அவர், "காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் குறிக்கோள் வெகு தொலைவில் இல்லை என்று  நான் கூற விரும்புகிறேன். உங்கள் நியாயமான உரிமைகளை நீங்கள் அடையும் வரை பாகிஸ்தான் உங்களுடன் துணை நிற்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
"காஷ்மீர் பிரச்சனைக்கு நியாயமான தீர்வைக் கோருவதில் இந்தியா நேர்மையை வெளிப்படுத்தினால், ஐநா சபையின் தீர்மானங்களின்படி, அமைதிக்காக இரண்டு  படிகளை முன்னெடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், அமைதிக்கான எங்கள் விருப்பத்தை யாரும் பலவீனம் என்று தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.  மாறாக, ஒரு வலிமைமிக்க நாடாக நாங்கள் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அமைதியான முறையில் நிறைவேற்றவே நாங்கள் விரும்புகிறோம்" என்று அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.
 
காஷ்மீர் பிரச்சனை
 
1947ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்தது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி (லைன் ஆஃப் கன்ட்ரோல்) என்றழைக்கப்படும்  எல்லைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இருநாடுகளும் நிர்வகித்து வருகின்றன.
 
கடந்த 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையவதை முடிவு செய்ய பொது மக்கள்  வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் காஷ்மீர் தனி நாடாக இருக்கலாம் என்கிற வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
 
எனினும், காஷ்மீரில் (பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் உட்பட) இருந்து பாகிஸ்தான் தன் துருப்புகளைப் பின்வாங்கும் வரை, இந்த பொது  வாக்கெடுப்பை நடத்த முடியாது என இந்தியா மறுப்புத் தெரிவித்து வந்தது.
 
இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை உறுதிசெய்யும் அரசமைப்பின் சட்டப்பிரிவு 370-ஐ இந்திய அரசு நீக்கியது. இதன் மூலம், காஷ்மீருக்கு இருந்து வந்த தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, அது இந்தியாவின் மத்திய ஆட்சிப்  பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டன.
 
மேலும், காஷ்மீரில் மாதக் கணக்கில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் தொலைத் தொடர்பு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நேற்றுதான் (பிப்ரவரி 5) சுமார் 18 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் 4ஜி தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும்  செயல்பாட்டுக்கு வந்தன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிமுகமானது ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன்!