Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்கில் போர்: பாகிஸ்தான் ஜெனரல் முஷரஃபின் சதித்திட்டத்தை ஒட்டு கேட்டு முறியடித்த இந்திய உளவு அமைப்பு

Advertiesment
கார்கில் போர்: பாகிஸ்தான் ஜெனரல் முஷரஃபின் சதித்திட்டத்தை ஒட்டு கேட்டு முறியடித்த இந்திய உளவு அமைப்பு
, ஞாயிறு, 26 ஜூலை 2020 (10:30 IST)
1999 மே 26ஆம் தேதியன்று இரவு 9.30 மணியளவில் இந்தியாவின் ராணுவத் தலைவர் ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக்கின் சர்வதேச தொடர்பு தொலைபேசியின் மணி அடித்தது. மறுமுனையில், இந்திய உளவுத்துறையான ரா-வின் செயலாளர் அரவிந்த் தவே இருந்தார். பாகிஸ்தானின் இரண்டு உயர் தளபதிகளிடையிலான உரையாடலை தனது துறையினர் பதிவு செய்துள்ளதை அவர் ஜெனரல் மாலிக்கிடம் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் பெய்ஜிங்கில் இருக்கும் தலைவருடன் பேசினார். அதில் உள்ளத் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் என்று கருதியதால், அது குறித்த தகவலை ஜெனரல் மாலிக்கிடம் தெரிவித்தார்.

பிபிசியிடம் அந்த தொலைபேசி அழைப்பை நினைவு கூர்ந்த ஜெனரல் மாலிக், "உண்மையில் தவே, இந்த தகவலை, ராணுவ உளவுத்துறை தலைமை இயக்குநருக்குத்தான் சொல்ல விரும்பினார். ஆனால், அவரது செயலாளர் தவறாக என்னை அழைத்துவிட்டார். டிஜிஎம்ஐக்கு பதிலாக நான் தொலைபேசியில் இருக்கிறேன் என்று அறிந்ததும், அவர்களுக்கு தர்மசங்கடமாகிவிட்டது. இந்த தொலைபேசி உரையாடலின் டிரான்ஸ்-ஸ்கிரிப்டை உடனடியாக எனக்கு அனுப்புமாறு அவர்களிடம் சொன்னேன்.”

இதைப்பற்றி மேலும் கூறும் ஜெனரல் மாலிக், "முழு டிரான்ஸ்கிரிப்டையும் படித்த பிறகு, அரவிந்த் தவேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அப்போது, சீனா சென்றிருந்த ஜெனரல் முஷரஃபுக்கும், பாகிஸ்தானின் மூத்த ஜெனரலுக்கும் இடையில் இந்த உரையாடல் நடைபெற்றிருக்கலாம் என கருதுவதாக அவரிடம் தெரிவித்தேன். அந்த தொலைபேசி எண்களை தொடர்ந்து கண்காணித்து பதிவு செய்யுமாறு தவேவிடம் சொன்னேன்.” என்கிறார் அவர்.

"மூன்று நாட்களுக்குப் பிறகு, ரா இருவருக்கும் இடையில் மற்றுமொரு உரையாடலைப் பதிவு செய்தது. ஆனால், இந்த முறை, அதை ராணுவ புலனாய்வு இயக்குநரிடமோ அல்லது என்னிடமோ பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக, நேரடியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். ஜூன் 2ஆம் தேதியன்று, கடற்படை விழாவில் பிரதமர் வாஜ்பாயியும், பிரஜேஷ் மிஸ்ராவும் கலந்துக் கொண்டனர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நானும் மும்பைக்குச் சென்றிருந்தேன். அப்போது, உரையாடல் பதிவு தொடர்பாக பிரதமர் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார்.

"அப்போதுதான், நான் பிரஜேஷ் மிஸ்ராவை இதுவரை பார்த்ததேயில்லை என்பதை அவர் உணர்ந்தார். திரும்பி வந்ததும், பிற உரையாடல்களின் டிரான்ஸ்கிரிப்டை எனக்கு அனுப்பினார்,'' என்று ஜெனரல் மாலிக் நினைவு கூர்கிறார்.

முக்கியமான சண்டையின் போதுகூட, உளவுத்துறை அனைவருடனும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. அதோடு, ரா அமைப்பு, குறிப்பாக சிலருக்கு மட்டுமே தகவல்களை அனுப்பியது என்பதும் தெரியவந்தது.

டேப்பை நவாஸ் ஷெரீப்புக்கு அனுப்பும் முடிவு

இந்த பதிவு நாடா ஜூன் ஒன்றாம் தேதிக்குள் பிரதமர் வாஜ்பாயி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு கிடைத்தது.

ஜூன் 4 ஆம் தேதி, இந்த நாடாக்களை பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கொடுக்க இந்தியா முடிவு செய்தது. முஷரஃபின் உரையாடலைப் பதிவு செய்த இந்திய உளவுத்துறைக்கு, அவற்றை நவாஸ் ஷெரீஃபிடம் கொடுப்பது என்பது பெரிய காரியமல்ல.

இந்த முக்கியமான பதிவு நாடாக்களை எடுத்துக் கொண்டு இஸ்லாமாபாத்திற்கு யார் செல்வார்கள்?

இஸ்லாமாபாத்துக்கு ரகசியப் பயணம் சென்ற இந்திய செய்தி தொடர்பாளர்

அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்த பிரபல பத்திரிகையாளர் ஆர்.கே.மிஸ்ரா இதற்காக தேர்வு செய்யப்பட்டார் என்று பெயர் கூற விரும்பாத ஒருவர் தெரிவித்தார். அவர் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு, அவரிடம் அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.

இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் அவரை சோதனை செய்யக்கூடாது என்பதால், அவருக்கு 'தூதரக அதிகாரி' என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவருடன் வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் விவேக் கட்ஜுவும் இஸ்லாமாபாத் சென்றார்.

காலை 8:30 மணிக்கு காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நவாஸ் ஷெரீஃபை சந்தித்து அவரிடம் பேசினார். பிறகு, அவரிடம் அந்த பதிவு நாடாவின் டிரான்ஸ்கிரிப்ட்டை ஒப்படைத்தார்.

கொடுக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டு மிஸ்ராவும், கட்ஜுவும் அன்று மாலையே டெல்லிக்கு திரும்பி விட்டார்கள். இந்த பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது அல்லது குறைந்தபட்சம் அந்த சமயத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்படவில்லை.

கொல்கத்தாவிலிருந்து வெளியான 'டெலிகிராஃப்' செய்தித்தாள் மட்டுமே, ஜூலை 4, 1999 இதழில், பிராணாய் ஷர்மாவின், "டெட்லி ஹிட்ஸ் ஷெரீஃப் வித் ஆர்மி டேப் டாக்" என்ற கட்டுரையில் இந்தப் பயணம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

நவாஸ் ஷெரீஃபிடம் டேப்பை கொடுப்பதற்காக வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் விவேக் கட்ஜுவை இஸ்லாமாபாத்துக்கு அனுப்பியதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரா-வின் முன்னாள் கூடுதல் செயலாளரான பி. ரமண், 2007 ஜூன் 22 அன்று அவுட்லுக் இதழில் எழுதிய "Release of Kargil tape masterpieces and blender?" என்ற கட்டுரையில், நவாஸ் ஷெரீஃபிடம் டேப்பை கொடுத்து, அதை அவர் கேட்டபின், மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது தெளிவாக அறிவுறுத்தப்பட்டதையும், அதை ஷெரீஃபிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கூறப்பட்டிருந்ததும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்த வேலையை தான் செய்யவில்லை என்று பின்னர் மிஸ்ரா மறுத்தார். விவேக் கட்ஜுவும் இதை வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை.

இவை அனைத்திற்கும் பின்னால் ரா அமைப்பின் அரவிந்த் தவே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் இருந்தனர். இந்தியாவிடம் இதுபோன்ற பதிவு நாடாக்கள் இருக்கக்கூடும் என்ற அச்சத்திற்குப் பிறகு கார்கில் மீதான பாகிஸ்தானின் ஆசை நீர்த்து போவதுடன், பாகிஸ்தான் தலைமைக்கும் அழுத்தம் இருக்கும் என்றும் கருதப்பட்டது.

பகிரங்கப்படுத்தப்பட்ட பதிவு நாடாக்கள்

இந்த உரையாடல் பதிவுகளை நவாஸ் ஷெரீப்பை கேட்க வைத்த ஒரு வாரத்துகுப் பிறகு, 1999 ஜூன் 11ஆம் தேதியன்று, வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் இந்தியாவுக்கு வருகை தந்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியா இந்த பதிவு நாடாக்களை பகிரங்கப்படுத்தியது.

இந்த பதிவு நாடாவின் நூற்றுக்கணக்கான பிரதிகள் தயாரிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அனைத்திற்கும் அனுப்பப்பட்டன.

இந்த முடிவை எடுத்தது ஏன் என்பதை சொல்வதற்கு தற்போதும் கூட இந்திய உளவுத்துறையை சேர்ந்தவர்கள் தயங்குகிறர்கள்.

இந்த வேலையில் சிஐஏ அல்லது மொசாத் இந்தியாவுக்கு உதவியிருக்கலாம் என்பது பாகிஸ்தானியர்களின் நம்பிக்கை. இந்த பதிவு நாடாக்களைக் கேட்டவர்கள், இஸ்லாமாபாத்தில் இருந்து பேசியவரின் குரல் மிகவும் தெளிவாக இருந்தது என்றும், எனவே, அது இஸ்லாமாபாத்தில்தான் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என நம்புகின்றனர். பாகிஸ்தான் பத்திரிகையாளர் நசீம் ஜாகீர் எழுதி, மிகவும் பிரபலமான 'From Kargil to the Coup' என்ற புத்தகத்தில், "தொலைபேசியில், உயரதிகாரிகளிடம் இதுபோன்ற முக்கியமான உரையாடல் நிகழ்த்திய ஜெனரல் முஷரஃப் எந்த அளவிற்கு கவனக்குறைவாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக இது இருக்கிறது. கார்கில் நடவடிக்கையில் பாகிஸ்தானின் உயர் தலைமை எந்த நிலையில் இருந்தது என்பதை இந்த உரையாடல் பகிரங்கமாக நிரூபித்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 'இன் தி லைன் ஆஃப் ஃபயர்' என்ற தனது சுயசரிதையில் பர்வேஸ் முஷரஃப் இந்த அதி முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை. ஆனால், பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற பிறகு, இந்திய பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பருக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த உரையாடல் பதிவு நாடா விவகாரத்தை உண்மைதான் என்பதை முஷரஃப் ஏற்றுக்கொண்டார்.

சர்தாஜ் அஜீஸுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு

இந்த உரையாடல் பதிவுகளை நவாஜ் ஷெரீஃபுக்கு கொடுத்து சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் டெல்லிக்கு வந்திருந்தார். அவரை வரவேற்க டெல்லி விமான நிலையத்தில் உள்ள விஐபி வருகையிடத்தில் அஜீஸை வரவேற்க பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார் டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் ஹை கமிஷனின் செய்தித் தொடர்பாளர்.

அவர் கையில் குறைந்தது ஆறு இந்திய செய்தித்தாள்கள் இருந்தன. அதில் முஷரஃப் - அஜீஸ் பேச்சுக்கள் என்ற தலைப்பில் பல கட்டுரைகள் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால், ஜஸ்வந்த் சிங், அஜீஸுடன் மிகவும் இயல்பாக கைகுலுக்கினார்.

பாகிஸ்தான் பிரதமர் கார்கில் பிரச்சனையில் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்ற நம்பிக்கையை, உலகம் முழுவதும் அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஏற்படுத்தியது. அதோடு, கார்கிலில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை தொடர்பான தகவல்களிலிருந்து ராணுவம் அவரை ஒதுக்கி வைத்துள்ளது என்பதும் பகிரங்கப்படுத்தப்பட்டது.

நாடாக்களை பகிரங்கமாக்கிய விமர்சனம்

இந்த பதிவு நாடாக்களை பகிரங்கப்படுத்தியது தொடர்பாக இந்தியாவின் உளவுத்துறை வட்டாரங்கள் சிலவற்றில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

ராவின் கூடுதல் செயலாளராக இருந்தவரும், 'India's external intelligence - Secret of Research and Analysis Wing' என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தை எழுதிய மேஜர் ஜெனரல் வி.கே.சிங்கிடம், இது தொடர்பாக பிபிசி பேசியது. "இந்த நாடாக்களை பகிரங்கப்படுத்தியதால், இந்தியாவுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து என்ன கிடைத்தது என்று தெரியவில்லை. ஆனால், ரா அமைப்பு, சிறப்பு இடைமறிப்பு செயற்கைக்கோள் இணைப்பு குறித்து இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங் தெளிவாக தெரிந்துக் கொண்டன. உடனே அந்த வழி அடைக்கப்பட்டது. எங்களுக்கு இந்த வழி அடைக்கப்படாமல், தொடர்ந்து தகவல் பெறும் வசதி இருந்திருந்தால், எங்களுக்கு இன்னும் பல முக்கியமான தகவல்கள் கிடைத்திருக்கும்' என்று அவர் குறிப்பிட்டார்.

சர்ச்சில் உதாரணம்

ரா அல்லது பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள், 1974 இல் எஃப்.டபிள்யூ விண்டர்பாத்தமின், 'அல்ட்ரா சீக்ரெட்' புத்தகத்தைப் படிக்கவில்லை போலும் என்று சொல்கிறார் மேஜர் ஜெனரல் வி.கே. சிங். அதில், இரண்டாம் உலகப் போரின் முக்கியமான புலனாய்வு ஆதாரம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த மாபெரும் போரின் ஆரம்பத்தில், ஜெர்மனியின் முக்கியமான 'Enigma' என்ற சாதனத்தின் குறியீட்டை பிரிட்டன் உடைத்தது. இந்த தகவல் இறுதி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. முழு போரின்போதும் ஜெர்மனி தொடர்ந்து 'எனிக்மா' என்ற அந்தக் குறியீட்டைப் பயன்படுத்தியது. இதன் மூலம், பிரிட்டன் உளவுத்துறைக்கு பல மதிப்புமிக்க தகவல்கள் கிடைத்தன.

மறுநாள் காலையில் கோவென்ட்ரி மீது'Loftwafe', அதாவது ஜெர்மன் விமானப்படை குண்டு வீசப் போகிறது என்ற தகவல் இங்கிலாந்துக்கு தெரியவந்தது. அந்த நகர மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினால் மக்களை காப்பாற்றலாம். ஆனால், இதைச் செய்ய வேண்டாம் என்று சர்ச்சில் முடிவு செய்தார். ஏனென்றால், அது ஜெர்மனிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். பிறகு, 'Enigma' பயன்பாட்டை நிறுத்திவிடும் என்பதால் அவர் அந்த முடிவை எடுத்தார்.

உளவியல் ரீதியான போரில் இந்தியாவுக்கு நன்மை

ஆனால், இந்த உரையாடல் பதிவு நாடாக்களை பகிரங்கப்படுத்தியது உளவியல் ரீதியான போரின் மிகப்பெரிய மாதிரி என்று கூறுகிறார் முன்னாள் ரா கூடுதல் செயலாளர் பி. ராமன். ஊடுருவியவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் 'வழக்கமான' சிப்பாய் என்பதும், முஷரஃப் பலமுறை திரும்பத் திரும்பக் கூறியது போல் ஜிஹாதி பிரிவினைவாதிகள் அல்ல என்பதும் தெளிவாகிவிட்டது.

அதோடு, காஷ்மீரில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறியுள்ளது என்ற விஷயத்தில் அமெரிக்கா ஒரு முடிவுக்கு வருவதை இந்த தகவல் எளிதாக்கியது. மேலும், இந்தியாவின் நிலத்திலிருந்து எந்த விலை கொடுத்தாவது பாகிஸ்தான் அகற்றப்பட வேண்டும் என்பதற்கும் இந்த தகவல் பகிரங்கப்படுத்தியது அவசியமாகிறது.

பாகிஸ்தான் மக்களிடையே, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் முஷரஃப் மீதான நம்பகத்தன்மை மீதும் இந்த தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியது. கார்கில் பற்றி முஷரஃப் சொல்லும் கதையை நிராகரிக்கும் பலர் இன்றும் பாகிஸ்தானில் உள்ளனர்

இந்த பதிவு நாடாக்கள் வெளியிடப்பட்டதால், பாகிஸ்தானுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்தது என்பதையும், அதன் வீரர்களை கார்கிலிலிருந்து அகற்ற வேண்டும் என்ற குரல் வலுத்ததையும் மறுக்க முடியாது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய உளவு அமைப்பு சிறப்பாக அமைய…கார்கில் போர் காரணமா?