அயர்ன் டோம் என்பது சுருக்கமாக ராக்கெட் ஏவுகனைகளை எதிர்த்து தாக்கி அழிக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பு. இது தான் தற்போது காசாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளை தடுத்து அழித்து இஸ்ரேல் நாட்டை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த ரக தளவாடத்தை மேம்படுத்த இஸரேலுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது.
கடந்த சில தினங்களாக நடந்து வரும் இஸ்ரேல் - பாலத்தீன மோதலில், ஹமாஸ் மற்றும் பாலத்தீன போராளிகள், தங்கள் நாட்டின் மீது 1,500-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவி இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.
அவர்கள் ஏவிய ராக்கெட்டுகளில் பெரும்பாலானவற்றை இஸ்ரேலின் பாதுகாப்பு அரண் அமைப்பான அயர்ன் டோம் இடைமறித்து அழித்திருக்கிறது.
அயர்ன் டோம் அமைப்பு, தங்கள் நாட்டின் மீது ஏவப்படும் ராக்கெட்டுகள். அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களை தாக்கி அழிப்பதற்கு முன்பே, அவற்றில் 90 சதவீதத்தை நடுவானிலேயே கச்சிதமாக தாக்கி அழிப்பதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
அயர்ன் டோம் எப்படி செயல்படுகிறது?
பல ரகங்களில், பல கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கக் கூடிய ராக்கெட் ஏவுகணைகளைக் கொண்ட, பாதுகாப்பு அமைப்பு தான் அயர்ன் டோம். இதை பல பில்லியன் டாலர்கள் செலவில் தமது நாட்டைச்சுற்றி பரவலாக இஸ்ரேல் இயக்கி வருகிறது.
அயர்ன் டோம் அமைப்பு, தங்கள் நாட்டை இலக்கு வைத்து தாக்க வரும் ராக்கெட்டுகளை ரேடாரைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கிறது. பிறகு அவற்றை அழிக்க இரண்டு இடைமறிப்பு ஏவுகணைகளை அயர்ன் டோம் அமைப்பு செலுத்தி அந்த ராக்கெட்டுகளை அழிக்கிறது.
இந்த அமைப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், தங்களை நோக்கி வரும் ஏவுகணகளில், எது கட்டுமான பகுதிகளை தாக்கக் கூடியது, எது இலக்கை அடையாமல் கடந்து செல்லக் கூடியது எனவும் பிரித்தறிந்து கொள்ளும் திறனைப் பெற்றுள்ளது.
அப்படி தங்கள் நாட்டில் உள்ள நகர்ப்பகுதியை தாக்க வரும் ஏவுகனைகளை மட்டுமே இலக்கு வைத்து அயர்ன்டோம் அழித்தொழிக்கிறது. இதன் மூலம் இதன் ஏவுகணை தேவையற்று பயன்படுவது தவிர்க்கப்படுவதால் பொருள்செலவு மிச்சமாகிறது.
தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் நாளிதழ், ஒவ்வொரு இடைமறிப்பான் அயர்ன்டோம் சாதனத்தை நிறுவ 1.50 லட்சம் டாலர்கள் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
இது எப்படி மேம்படுத்தப்படுகிறது?
2006ஆம் ஆண்டில் தெற்கு லெபனானில் செயல்படும் ஹெஸ்புல்லா என்ற இஸ்லாமியவாத தீவிரவாத குழுவுக்கு எதிரான மோதலில் அயர்ன்டோம் சாதனத்தை இஸ்ரேல் பயன்படுத்தியது.
ஹெஸ்புல்லா குழு, ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியதில் இஸ்ரேலுக்கு பலத்த சேதமும் டஜன் கணக்கான அந்நாட்டவர்களும் கொல்லப்பட்டனர்.
ஓராண்டுக்குப் பிறகு, அரசின் பாதுகாப்பு நிறுவனமான ரஃபால் அட்வான்ஸ்ட் டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், ஒரு புதிய ஏவுகணை பாதுகாப்பு கேடய சாதனத்தை மேம்படுத்தும் என்று இஸ்ரேல் அறிவித்தது. அந்த திட்டத்துக்கு அமெரிக்காவிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக நிதி பெறப்பட்டது.
பல ஆண்டு கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு, அயர்ன் டோம் சாதனம் களத்தில் பரிசோதிக்கப்பட்டது., 2011ஆம் ஆண்டில் தென் பகுதி நகரான பீர்ஷெபா நகரை இலக்கு வைத்து வந்த ஏவுகணையை அயர்ன்டோம் இடைமறித்து அழித்தது.
அயர்ன்டோமின் பலவீனம் என்ன?
இஸ்ரேல் நாட்டின் மருத்துவக் குழுவினர், காசாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகளால் இதுவரை இரு சிறார் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், பாலத்தீன சுகாதார அதிகாரிகளைப் பொருத்தவரை, "இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83ஐ எட்டியிருக்கிறது. அதில் குறைந்தபட்சமாக இறந்த சிறார்களின் எண்ணிக்கை பதினேழு.
அயர்ன்டோம் சாதனம், பல இஸ்ரேலியர்கள் உயிரிழப்பதில் இருந்து அவர்களை காத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது ஏவுகணை தடுப்புக்கான முழு அரணாக விளங்கவில்லை.
இஸ்ரேல் - காசா இடையிலான சமீபத்திய சண்டையில், இஸ்ரேலில் இருக்கும் அஷ்கெலன் நகரத்தைப் பாதுகாக்க வேண்டிய சாதனம், சில தொழில்நுட்ப கோளாறால் இயங்கவில்லை என்கிறார் வெளிவிவகாரங்களுக்கான ஆய்வாளர் ஜோனாத்தன் மார்கஸ்.
காசாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளை எதிர்கொள்வதில் அயர்ன்டோம் கண்ட 90 சதவீத வெற்றி என்பது, எதிர்காலத்தில் வேறு ஒரு எதிரியை எதிர்கொள்ளும் போதும் இருக்குமா என்பதை நிரூபிப்பது சிக்கலானது என்று சில விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
ஜெருசலேம் போஸ்ட் என்ற இதழின் உளவு விவகாரங்களுக்கான ஆசிரியர் யோனா ஜெரமி பாப், "ஹெல்புல்லா போராளிகள் குறைந்த நேரத்தில் அதிக அளவிலான ஏவுகணைகளை ஏவும் திறனைப் பெற்றிருக்கிறார்கள். அத்தகைய சூழலில் அயர்ன் டோம் சாதனத்தால் எல்லா ஏவுகணைகளையும் தடுத்து வீழ்த்துவது சிரமம்," என்கிறார்.
ஒரு வகையில், தங்களின் உயிரை காப்பதற்காக பயன்படுவதற்காக அயர்ன் டோம் சாதனத்துக்கு இஸ்ரேலியர்கள் நன்றி கூற கடமைப்பட்டவர்கள்.
ஆனால், டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரான டாக்டர் யோவ் ஃப்ரோமெர், "ஒரு நீண்ட கால மோதலுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிக்கு தடங்கலாக அயர்ன்டோம் சாதனத்தை நம்பியிருக்கும் இஸ்ரேலின் போக்கு உள்ளது," என்று கூறுகிறார்.
"மாறுபாடான வகையில், அயர்ன்டோம் என்ற பாதுகாப்பு துணைக்கருவியின் குறிப்பிடத்தக்க வெற்றி, அரசியல் கொள்கை தோல்விகளுக்கு பங்களிப்பை வழங்கி முதல்நிலையிலேயே வன்முறை தீவிரமாகத் தூண்டுகிறது," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"பல ஆண்டுகளுக்குப் பிறகும், நாம் முடிவில்லாத வன்முறை சுழற்சியிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் அவர்.