Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரேல் - பாலத்தீனம்: புதிய சண்டைகளுக்கு வித்திடும் பழைய சிக்கல்கள்!

இஸ்ரேல் - பாலத்தீனம்: புதிய சண்டைகளுக்கு வித்திடும் பழைய சிக்கல்கள்!
, வியாழன், 13 மே 2021 (08:55 IST)
இஸ்ரேலியர்களுக்கு பாலத்தீனியர்களுக்கும் இடையே இப்போது நடந்து வரும் சண்டைகள் இருதரப்புக்கும் இடையே தீர்க்கப்படாத பழைய சிக்கல்களின் தொடர்ச்சிதான். மத்திய கிழக்கில் இது ஆறாத காயம். அதனால்தான் நேருக்கு நேரான மோதல்களும், ராக்கெட் தாக்குதல்களும் உயிரிழப்புகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
 
சமீப ஆண்டுகளாக சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இஸ்ரேலிய - பாலத்தீன விவகாரம் இடம்பெறவில்லை என்பதற்காக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொருள் இல்லை. பல ஆண்டுகளாக மாத்திரமல்ல, பல தலைமுறைகளாப் பிரச்னையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெறுப்பும் கசப்பும் குறைந்துவிடவில்லை.
 
யோர்தான் ஆற்றக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட நிலம் தங்களுக்கே சொந்தம் என்று கோரி யூதர்களும் அரபுக்களும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சண்டையிட்டு வருகிறார்கள். இஸ்ரேல் என்றொரு நாடு 1948-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிறகு, பாலத்தீனியர்களைப் பல முறை தோல்வியடைச் செய்திருக்கிறது. ஆனாலும் இதுவரை வெற்றிபெற முடியவில்லை.
 
இந்தச் சிக்கல்களால் இருதரப்பினருக்குமே பாதுகாப்பு இல்லை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிய சண்டை நடப்பது மட்டும் உறுதியாகிவிடுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக காஸாவையும் இஸ்ரேலையும் பிரிக்கும் வேலி நெடுக மோதல்கள் நடைபெற்று வருவது வழக்கமாகிவிட்டது.
 
ஜெருசலேமும் அங்குள்ள புனிதமான இடங்களும் வேறெங்கும் இல்லாத அளவுக்கு வன்முறைகளைத் தூண்டுவதற்கான காரணிகளாக அமையும் என்பது இந்த முறை நினைவுபடுத்தப்பட்டிருக்கிறது.
 
கிறிஸ்துவர்கள், யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு ஜெருசலேம் நகரம் புனிதமானது என்பது வெறும் மதம் சார்ந்த விவகாரம் மட்டுமல்ல. யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித இடங்கள், தேசிய அடையாளங்களும் கூட. இரண்டும் கல்வீசும் தொலைவில்தான் அமைந்திருக்கின்றன. அதற்கு நெருக்கமாக பாலத்தீனிய கிறிஸ்தவர்களின் புனித இடமான திருக்கல்லறைத் தேவாலாயம் அமைந்திருக்கிறது.
 
ஷேக் ஜார்ரா என்ற பகுதியில் இருந்து பாலத்தீனர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சமும் வன்முறைகள் தூண்டுப்பட்டதற்கு ஒரு காரணி. இந்த இடம் பழைய ஜெருசலேம் நகரின் எல்லைச் சுவர்களுக்கு வெளியே உள்ள பகுதி. இந்தப் பகுதி தங்களுக்கு உரியது என யூதக் குடியேறிகள் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்.
 
ஜெருசலேமை யூதமயமாக்கும் இஸ்ரேலின் ஒரு முயற்சிதான் யூதக் குடியேற்றங்களை அதிகப்படுத்துவது. ஜெருசலேம் நகரைச் சுற்றி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் சர்வதேச சட்டங்களை மீறும் விதமாக பெரிய யூதக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. ஜெருசலேம் பழைய நகரத்தின் பாலத்தீனியர்களின் பகுதிகளில் அதிக அளவு யூதர்களைக் குடியமர்த்துவதற்கு அரசும் யூதக் குடியேற்றங்களுக்கான அமைப்புகளும் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 
இப்படி ஏற்கெனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக கடந்த சில வாரங்களாக பாலத்தீனர்கள் மீது காவல்துறை அடக்குமுறைகளில் ஈடுபட்டது. மெக்காவுக்கும் மதீனாவுக்கும் அடுத்தபடியாக இஸ்லாமியர்களால் புனிதத் தலமாகக் கருதப்படும் அல்-அக்சா மசூதிக்குள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் காவல்துறையினர் வீசினார்கள்.
 
பதிலுக்கு காஸாவில் இயங்கும் ஹமாஸ் இயக்கம் வழக்கத்துக்கு மாறாக இஸ்ரேலியப் படைகள் அல்-அக்சா மசூதியை விட்டும் ஷேக் ஜார்ரா பகுதியை விட்டும் வெளியேறுவதற்கு கெடு விதித்தது. பின்னர் ஜெருசலேமை நோக்கி ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல்களை நடத்தியது.
 
"காஸாவின் பயங்கரவாத இயக்கம் எல்லை மீறிவிட்டது. பெருஞ்சக்தியுடன் இஸ்ரேல் பதில் கொடுக்கும்" என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ட்விட்டரில் பதிவிட்டார்.
 
இன்னும் சில நிகழ்வுகளுக்குப்பிறகு வழக்கம்போல சண்டை முடிவுக்கு வரும். அடிப்படைச் சிக்கல்கள் தீர்க்கப்படாதவரை இவை மீண்டும் மீண்டும் நடக்கத்தான் போகின்றன.
 
இரண்டு தரப்பும் அமைதியாக வாழ்வதற்கு இதற்கு முன் கடைசியாக எப்போது நம்பிக்கைக் கீற்று தென்பட்டது என பிபிசியின் ஒரு தொகுப்பாளர் என்னைக் கேட்டார். நான் ஜெருசலேமில் 1995-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை வசித்தேன். அதன் பிறகும் பலமுறை அங்கு சென்று வந்திருக்கின்றேன்.
 
பிபிசி தொகுப்பாளரின் கேள்விக்குப் பதில் கூறுவது மிகவும் கடினம். 1990-களில் ஓஸ்லோ அமைதி நடவடிக்கைகள் நடந்தபோதுதான் கடைசியாக ஒரு நம்பிக்கை தோன்றியது.
 
இரு தரப்பிலும் உள்ள தலைவர்களுக்கு அமைதிதான் இலக்காக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தங்களது உள்நாட்டு அரசியல் ஆதாயத்துக்காகச் சண்டையிடுகிறார்கள். தங்களது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இந்த முரணுக்கு பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படவில்லை.
 
சில புதிய யோசனைகள் உதித்திருக்கின்றன. மதிப்புப்பெற்ற இரு சிந்தனைக் குழுக்கள் கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. பாலத்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் சம உரிமையும் சம பாதுகாப்பும் வழங்குவதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அந்த அறிக்கை கூறுகிறது.
 
"இஸ்ரேலியப் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் முழு சமத்துவமும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும்; சமமற்ற இரு நடைமுறைகள் இருக்கக்கூடாது' என்பதை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
புதிய சிந்தனை நல்லது. பழைய யதார்த்தத்தில் இருந்து வெடித்திருக்கும் இந்த வார மோதல்களும் வழக்கமான சொற்களும் மற்ற அனைத்தையும் மூழ்கடித்து விடுகின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவை தொடர்ந்து தாக்கும் புதிய நோய்! – மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் மத்திய அரசு!