Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரேல்: போர் சூழலில் தமிழர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? - விவரிக்கும் மாணவர்கள்

israel -Palestine
, வெள்ளி, 13 அக்டோபர் 2023 (21:05 IST)
சரியாக ஒரு வார காலத்திற்கு முன்னதாக திருவாரூரைச் சேர்ந்த நிவேதிதா, காலை நேரத்தில் எப்போதும் போல இஸ்ரேலில் உள்ள தனது மகள் ஆதித்யாவுடன் பேசுவதற்காக அழைத்திருக்கிறார். அவரது அழைப்புக்கு மறுபுறத்தில் யாரும் பதிலளிக்கவில்லை.
 
சுமார் எட்டு மணிநேரத்திற்குப் பின்னர் பேசிய ஆதித்யா, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்பதால் பதுங்கு குழியில் ஒளிந்திருந்ததாகச் சொன்னதும் தயார் நிவேதிதா நடுங்கிப்போனார்.
 
இஸ்ரேல் நாட்டின் பீர் ஷேவா பகுதியில் அமைந்துள்ள பென் குரியன் பல்கலைக்கழகத்தில் கேன்சர் செல் குறித்த பி.எச்.டி. ஆய்வில் ஆதித்யா ஈடுபட்டுள்ளார். தனது சக மாணவர்கள் 20 பேருடன் பதுங்கு குழியில் ஒளிந்திருந்ததை அவர் சொன்ன தருணத்தில் இருந்து, கடந்த ஒரு வாரமாக இரவு பகல் பாராமல் தனது மகளின் பாதுகாப்பு குறித்த சிந்தனையால் பதற்றத்தில் இருந்தார் நிவேதிதா.
 
“இன்று என் மகள் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்துவிட்டேன் என்று சொன்னபோதுதான் எனக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. என் மகளும் மருமகன் விமலும் ஒரே பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி,” என்கிறார் நிவேதிதா.
 
 
சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த பிறகு பிபிசி தமிழிடம் பேசிய ஆதித்யா, போர் சூழல் முடிந்ததும் மீண்டும் இஸ்ரேலில் படிப்பைத் தொடரப் போவதாகத் தெரிவித்தார்.
 
“நாங்கள் பத்திரமாக இருந்தோம். பல்கலைக்கழக பகுதியில் பதுங்கு குழி இருக்கிறது. அங்குதான் ஒரு வாரம் தங்கியிருந்தோம். ஏவுகணை தாக்குதல் சத்தம் அவ்வப்போது கேட்டது. ஆனால் நாங்கள் போர் காட்சிகள் எதையும் நேரடியாகப் பார்க்கவில்லை என்பதால் அதைப் பற்றித் தெரியவில்லை.
 
இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் அவ்வப்போது தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம். 114 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தினமும் அப்டேட் செய்துகொண்டோம்,” என்றார் ஆதித்யா.
 
ஆதித்யா மற்றும் அவரது கணவர் விமல் இருவரும் இணைந்து தங்களுக்குத் தெரிந்த தமிழ் நண்பர்கள் ஒவ்வொருவரையும் வாட்ஸ் ஆப்பில் இணைத்து தமிழ்நாடு அரசின் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
 
இஸ்ரேலில் தாக்குதல் நடப்பது சாதாரணம்
இஸ்ரேல் காசா மீது வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது என்றும், பல ஆயிரம் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்றும் செய்திகள் வாயிலாகத்தான் தெரிந்துகொண்டதாகக் கூறும் விமல், இந்திய தூதரகம் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகத் தெரிவித்தார்.
 
“இஸ்ரேலில் போர்ச் சூழல் நிலவுகிறது என்று தெரிந்ததும், தூதரகம் மூலமாக எங்களிடம் பேசினார்கள். முதலில் உயிர் பயம் ஏற்பட்டது. ஆனால் நாங்கள் வாட்ஸ் ஆப் குரூப் மூலமாக ஒவ்வொருவராக இணைந்து ஒவ்வொருவரின் பாதுகாப்பு பற்றியும் தகவல் கொடுத்தோம். ஆறுதல் சொல்லிக்கொண்டோம்.
 
டெல் அவிவ் விமான நிலையத்தில் எங்களுக்கான விமானம் வியாழக்கிழமை தயாராக இருக்கும் என்று சொன்னார்கள். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து விமான நிலையத்திற்குப் பாதுகாப்பாக வந்தோம். அதனால் எங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இன்று காலை இந்தியா திரும்பிவிட்டோம்,” என்கிறார் விமல்.
 
தமிழ்நாடு திரும்பிய மற்றொரு ஆய்வு மாணவர் தினேஷ் பிபிசியிடம் பேசுகையில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் பலரும் கடந்த இரண்டு வாரங்களாக பல்கலைக்கழகத்திற்கு வரவில்லை என்றார். போர் பற்றி அவ்வப்போது பேசப்படும் என்பதால், இந்த முறை நடந்த மோதலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்ததாக அவர் சொல்கிறார்.
 
“நான் மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் அங்கு சென்றேன். மற்ற மாணவர்கள் மற்றும் என்னுடைய சக நண்பர்கள் பலரும் போர் நடப்பது இங்கு சாதாரணம் என்றார்கள். அதனால் எப்போதும் போல, நாங்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாங்கி வைத்திருந்தோம் என்பதால் உணவுப் பிரச்னை எங்களுக்கு ஏற்படவில்லை,” என்றார்.
 
இந்த முறை தீவிரமான போர் நடைபெற்றுள்ளது என்று செய்திகளில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டதாகக் கூறும் தினேஷ், இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஐயர்ன் டோம் வசதி இருப்பதால், குண்டுவீச்சு தாக்குதல் பெரும்பாலும் தடுக்கப்பட்டது என்றார்.
 
“இந்த டோம் ஒரு பகுதியில் எறியப்படும் குண்டை உள்வாங்கி, பல மீட்டர் உயரத்தில் வெடிக்கச் செய்யும், அதனால் பாதிப்பு தவிர்க்கப்படும் என உள்ளூர்வாசிகள் சொல்லிக் கேள்விப்பட்டேன். பதுங்கு குழியில் தங்கியது பதற்றமாக இருந்தது. ஆனால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதால் கவலையின்றி இருக்க முடிந்தது,” என விவரித்தார் தினேஷ்.
 
திண்டுக்கலைச் சேர்ந்தவரான தினேஷ் தனது ஆய்வு குறித்த அறிவிப்புகள் ஆன்லைனில் தரப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதால், படிப்பை இஸ்ரேலில் தொடர்வதில் எந்தத் தயக்கமும் இல்லை என்றார்.
 
 
இஸ்ரேலில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 21 நபர்களில் ஏழு பேர் கோவை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் கோவை விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
 
ஊட்டியைச் சேர்ந்த திவாகர் நான்கு ஆண்டுகளாக இஸ்ரேலில் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள சூழல் குறித்த புரிதலை கொண்டுள்ளார்.
 
கோவை விமான நிலையத்தில் பிபிசி தமிழிடம் பேசிய திவாகர், “முதல்கட்டமாக அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல்களைத் தொடங்கியபோது இது வழக்கமாக இஸ்ரேலில் நடப்பது தான் என்று கருதி சாதாரணமாக இருந்தேன்.
 
அதன்பிறகு, இஸ்ரேல் அரசு முழுவதுமாக ராணுவத்தைக் குவித்து, எதிர்த் தாக்குதலைத் தொடங்கிய பிறகுதான் பிரச்னையின் தீவிரத்தை உணர முடிந்தது. பிரச்னை தொடங்கிய ஒரு நாளில் அனைத்தையும் இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
 
நான் இருந்த பகுதி போரில் பாதிப்புக்குள்ளாகவில்லை, இதனால் அச்சமின்றி இயல்பாகத்தான் இருந்தேன். அனைத்துப் பகுதிகளிலும் ராக்கெட் தாக்குதல் நடப்பதில்லை, குறிப்பிட்ட சில கிராமங்களில், நாட்டின் எல்லைப்பகுதியில் மட்டுமே தாக்குதல்கள் நடக்கின்றன. நான் தங்கியிருந்த ரிஷோன் லெஜியோன் என்ற பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு நாளைக்கு இரண்டு ராக்கெட்டுகள் வருவதே குறைவுதான்,” என்றார்.
 
இஸ்ரேல் அரசு ஒரு மொபைல் செயலியை இயக்குவதாகவும், அதில் அவ்வப்போது நாட்டில் நடக்கும் சம்பவம் குறித்த தகவல்கள் பகிரப்படுவதாகவும், ராக்கெட் வரும்போது செயலியில் சைரன் ஒலிக்கும் என்றும் சொல்கிறார் திவாகர்.
 
“சைரன் சத்தம் கேட்டால், நாங்கள் நல்ல தடிமனான கான்கிரீட் சுவர், இரும்புக்கதவு கொண்ட தரைத் தளம், பதுங்கு குழி போன்ற அறைகளில் சென்று தங்கிக் கொள்வோம். தொடர்ந்து இதேபோன்ற தாக்குதல்கள் நடப்பதால், இஸ்ரேலில் உள்ளவர்கள் இதற்குப் பழகிவிட்டனர். எனவே, அதற்குத் தகுந்தாற்போல் கட்டடங்களைக் கட்டியுள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.
 
 
ஆதித்யா, விமல், தினேஷ் உள்பட 21 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து தற்போது தமிழ்நாடு திரும்பியுள்ளனர். மொத்தமுள்ள 114 பேரில் 21 நபர்கள் வந்துவிட்டனர் என்றும் மற்றவர்கள் அடுத்தடுத்த நாட்களில் திரும்புவார்கள் என்றும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். போரால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து வந்திருப்பதால், மனநல ஆலோசனை தேவைப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரில் மத்திய அரசு இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்டு வருகிறது என்று கூறிய அமைச்சர், முதல் கட்டமாக சென்னை, கடலூர், திருச்சி, விருதுநகர், கோவை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர் என்றார்.
 
ஏற்கெனவே யுக்ரேன் நாட்டில் நடந்த போர் காரணமாக, தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடர முடியாத சூழல் உள்ளது. தற்போது இஸ்ரேல் நாட்டிலிருந்து திரும்பியுள்ள மாணவர்களின் படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டால், அவர்களுக்கு என்ன உதவி கிடைக்கும் என செய்தியாளர்கள் கேட்டபோது, மாணவர்கள் இஸ்ரேல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களின் படிப்பு குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு, பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
 
இஸ்ரேல் பகுதியில் இருந்து மட்டும்தான் தற்போதுவரை தகவல்கள் தெரிய வந்துள்ளன. காசா மற்றும் பாலத்தீன பகுதிகளில் தமிழர்கள் உள்ளனரா என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
 
இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை ஆணையர் ஜெசிந்தாவிடம் கேட்டபோது, பெரும்பாலும் ஆய்வுப் படிப்புகளுக்காக மட்டும்தான் தமிழ்நாட்டில் இருந்து இஸ்ரேல் பகுதிகளுக்குப் பலர் செல்கின்றனர் என்றும் காசா மற்றும் பாலத்தீன பகுதிகளில் இருப்பது அரிது என்றும் கூறியவர், இருந்தாலும் அதுகுறித்தும் இந்திய அரசிடம் தகவல்களை கேட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே போர்: அமெரிக்காவின் கருத்துக்கு துருக்கி அதிபர் எதிர்ப்பு