Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்கா சிரியாவில் இருந்து 'எண்ணெய் திருட' முயற்சிக்கிறதா?

Advertiesment
அமெரிக்கா சிரியாவில் இருந்து 'எண்ணெய் திருட' முயற்சிக்கிறதா?
, சனி, 23 நவம்பர் 2019 (22:09 IST)
அமெரிக்க துருப்புகள் சிரியாவில் நிலைகொண்டிருக்கும் நிலையில், சிரியாவின் எண்ணெய் வருவாயில் இருந்து மாதம் தோறும் மில்லியன் கணக்கான டாலர் அமெரிக்காவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், தனது நாட்டிலிருந்து அமெரிக்கா எண்ணெய் திருடுவதாக சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
அதிபர் அசாத்தின் மிக பெரிய ஆதரவு நாடான ரஷ்யா அமெரிக்காவின் இந்த செயலை "சர்வதேச கொள்ளை" என்று விவரித்துள்ளது.
 
கட்டுப்படுத்த முயலும் சக்தி வாய்ந்த நாடுகள்
 
கடந்த அக்டோபர் மாதம் சிரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள அமெரிக்க துருப்புகளை திரும்ப பெற்று கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது.
 
ஆனால், எண்ணெய் உற்பத்தியின் முக்கிய பயனாளிகளாக இருக்கும் குர்துக்களின் படைகளோடு சேர்ந்து, இந்தப் பகுதியிலுள்ள எண்ணெய் நிறுவனங்களை பாதுகாப்பதற்கு சுமார் 500 படையினரை அங்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது.
 
"அமெரிக்க துருப்புகள் அங்கு இருப்பது இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் குழுவினரிடம் இருந்து பாதுகாப்பதற்கு மட்டுமல்ல, ரஷ்ய மற்றும் சிரிய அரசு படைப்பிரிவுகளிடம் இருந்து பாதுகாக்கவுமே" என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் கூறியுள்ளார்.
 
எண்ணெய் உற்பத்தியில் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயலுகின்ற சிரியாவுக்கு உதவி வரும் ரஷ்யாவும் எண்ணெய் வளங்களை தங்கள் நலனுக்கு பயன்படுத்த முயற்சிக்கிறது,
 
2018ம் ஆண்டு சிரியாவும், ரஷ்யாவும் எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் சிரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை மீள்கட்டமைக்கும் முழு உரிமையையும் ரஷ்யா பெற்றுள்ளது.
 
இந்த நிலையில்தான், அமெரிக்க துருப்புகள் பாதுகாத்து கொண்டிருக்கும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து அமெரிக்க பயன்பெற வேண்டுமென எதிர்பார்ப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
 
சிரியா உற்பத்தி செய்யும் எண்ணெய் எவ்வளவு?
 
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள எண்ணெய் வளத்தோடு ஒப்பிடுகையில் சிரியாவிலுள்ள எண்ணெய் வளம் சிறிய அளவாக இருந்தாலும், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைதான் சிரிய அரசுக்கு வருவாய் வழங்கக்கூடிய முக்கிய துறையாகும்.
 
சௌதி அரேபியாவின் 297 பில்லியன் பீப்பாய்கள், இரானின் 155 பில்லியன் பீப்பாய்கள் மற்றும் இராக்கின் 147 பில்லியன் பீப்பாய்களோடு ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு சிரியா 2.5 பில்லியின் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
சிரியாவின் கிழக்கு பகுதியில் இராக்கின் எல்லைக்கும், வடகிழக்கிலுள்ள ஹெசக்காவின் அருகிலுமுள்ள டேயர் சோர் மாகாணத்தில் எண்ணெய் வயல்கள் அதிகமாக காணப்படுகின்றன.
 
ஆனால், 2011ம் ஆண்டு சிரியாவில் போர் தொடங்கியதில் இருந்து நாட்டின் எண்ணெய் தயாரிப்பு சீர்குலைந்துவிட்டது.
 
2008ம் ஆண்டு ஒரு நாளுக்கு நான்கு லட்சத்து ஆறாயிரம் பீப்பாய்களை சிரியா தயாரித்தது என்று 2019ம் ஆண்டு உலக எரிசக்தி பற்றிய பிரிட்டன் பெட்ரோலிய புள்ளிவிவர ஆய்வறிக்கை தெரிவித்தது.
 
2011ம் ஆண்டு நாளைக்கு மூன்று லட்சத்து 53 ஆயிரம் பீப்பாய் என குறைந்து, 2018ம் ஆண்டு 90 சதவீதத்திற்கு மேலாக வீழ்ச்சியடைந்து ஒரு நாளுக்கு 24 ஆயிரம் பீப்பாய்கள் என குறைந்துவிட்டது.
 
சிரியாவின் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணெய் உற்பத்தி
 
சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்த நிலையில், நாட்டிலுள்ள பெரும்பாலான எண்ணெய் வயல்களின் கட்டுப்பாட்டை சிரியா அரசு இழந்துவிட்டது. இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொண்ட எதிர்தரப்பு குழுக்களிடம் இந்த கட்டுப்பாடு சென்றுவிட்டது.
 
இது பணம் மற்றும் எண்ணெய் பற்றியது...நாங்கள் நிச்சயமாக கோபத்தில் உள்ளோம். ஒவ்வொரு சிரியரும் கோபத்தில் உள்ளனர். இது கொள்ளையடிப்பு"
 
பஷார் அல்-அசாத், சிரியா அதிபர்
 
2014ம் ஆண்டு டேயர் சோர் மாகாணத்திலுள்ள மிக பெரிய அல்-ஒமர் எண்ணெய் வயல் உள்பட சிரியாவின் கிழக்கு பகுதியிலுள்ள பெரும்பாலான எண்ணெய் வயல்களை இஸ்லாமிய அரசு குழு கைப்பற்றியது.
 
எண்ணெய் விற்பனை தீவிரவாத குழுவுக்கு வருவாய் ஈட்டித்தரும் மிக பெரிய ஆதாரமாகியது. 2015ம் ஆண்டு சுமார் 40 மில்லியன் டாலர் வருவாய் இந்த குழுவுக்கு கிடைத்ததாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவிக்கிறது.
 
அமெரிக்காவின் ஆதரவு பெற்ற குர்துக்களின் தலைமையிலான சிரியா ஜனநாயக படைப்பிரிவுகளிடம் சிரியாவின் கிழக்கில் இருந்த தங்களின் வலுவிடங்களை ஜிகாதிகள் இழந்த பின்னர், சிரியாவின் எண்ணெய் வயல்களில் இருந்த கட்டுப்பாட்டை ஐ.எஸ் இழந்தது.
 
ஒரு குழுவின் முக்கிய வருவாய் ஆதாரத்தை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் சிரியாவின் எண்ணெய் வயல்களில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டன.
 
அமெரிக்கா ஏன் பாதாள குகைகளில் கச்சா எண்ணெயை சேமிக்கிறது?
 
குர்து படைப்பிரிவுகளிடம் தாங்கள் தோல்வியடைவது உறுதியானபோது, எண்ணெய் தயாரிப்பு உள் கட்டுமானங்கள் பலவற்றை ஐ.எஸ் அமைப்பினரே அழித்து விட்டனர்.
 
எண்ணெய் வருவாயில் பயன்பெறும் குர்து படைப்பிரிவுகள்
2017ம் ஆண்டு சிரியாவின் வடகிழக்கிலும், யூப்ரட்ஸ் ஆறு நெடுகிலும் உள்ள முக்கிய எண்ணெய் வயல்களின் கட்டப்பாட்டை இஸ்லாமிய அரசு குழுவிடம் இருந்து குர்துக்களின் தலைமையிலான சிரியா ஜனநாயக படைப்பிரிவுகள் தங்களின் கட்டுப்பாட்டில் எடுக்க ஆரம்பித்தன.
 
அதன் பின்னர் சில சேதங்களை சரிசெய்து ஓரளவு எண்ணெய் உற்பத்தியை அவர்கள் மீட்டெடுத்தனர். .
 
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜோனத்தான் ஹோஃப்மென் சமீபத்தில் கருத்து தெரிவித்தபோது, "எண்ணெய் வயல்களில் இருந்து கிடைக்கின்ற வருவாய் அமெரிக்காவுக்கு அல்ல, சிரியா ஜனநாயக படைப்பிரிவுகளுக்கு செல்கிறது" என்று தெரிவித்தார்.
 
"சிரியாவின் தேசிய எண்ணெய் ஆதாரங்கள் மற்றும் எரிவாயு தயாரிப்பு நிலையங்களில் 70 சதவீதத்தை, அந்நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள சிரியா ஜனநாயக படைப்பிரிவுகளும், கூட்டணி பழங்குடியினரும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன" என்று மத்திய கிழக்கு நிறுவனத்தின் மூத்த பேராசிரியர் சார்லஸ் லிஸ்டர் தெரிவிக்கிறார்,
 
"போர் தொடங்குவதற்கு முந்தைய எண்ணெய் தயாரிப்பின் அளவைவிட மிகவும் குறைவாக உற்பத்தி நடைபெற்றாலும், சிரியா ஜனநாயக படைப்பிரிவுகளின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக இந்த எண்ணெய் தயாரிப்பு விளங்குவதாக அவர் தெரிவிக்கிறார்.
 
சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி தாக்குதல் மேற்கொண்டுள்ளதால், குர்துக்கள் தங்களின் பகுதியை கணிசமாக இழந்திருந்தாலும், யூப்ரட்டஸ் ஆற்றுக்கு கிழக்கிலுள்ள எண்ணெய் வயல்களில் பெரும்பாலானவை சிரியா ஜனநாயக படைப்பிரிவுகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
 
நாட்டின் எண்ணெய் வயல்களை அணுக அதிபர் அசாத்தின் அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. போதிய எண்ணெய் இல்லாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை சிரியாவுக்கு ஏற்ப்படும்.
 
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைகளின் காரணமாக சிரியா எண்ணெய் இறக்குமதி செய்வதும் கடினமாகியுள்ளது.
 
சிரியாவுக்கு இரான் அதிக எண்ணெய் வழங்கி வந்தது. இந்த விநியோகமும் சிரியாவோடு வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனத்திற்கும், நாட்டுக்கும் அமெரிக்கா விதித்துள்ள கடுமையான தடைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 4 - கோடியே 64-லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பூமி பூஜை -எம்.ஆர். விஜய பாஸ்கர்