"சீனா மசூதிகளை மூடுகிறது, அழிக்கிறது அல்லது வேறு நோக்கத்திற்காக மாற்றுகிறது" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) தனது புதிய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஒடுக்குமுறையானது சீனாவில் இஸ்லாம் மதத்தை தடுப்பதற்கான "அமைப்பு ரீதியான முயற்சியின்" ஒரு பகுதியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக நாத்திகம் என்றாலும் கூட, மத சுதந்திரத்தை அனுமதிப்பதாக கூறும் சீன அரசு, சீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் இருப்பதாக கூறுகிறது.
ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்த மதத்தின் மீதான ஒடுக்குமுறை அதிகரித்துள்ளதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக கருத்து தெரிவிக்க சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இன விவகாரங்கள் துறை ஆணையத்தை பிபிசி தொடர்பு கொண்டது.
"மசூதிகளை மூடுவது, இடித்து அழிப்பது மற்றும் மறுபயன்பாடு செய்வது போன்றவை சீனாவில் இஸ்லாமைத் தடுப்பதற்கான சீன அரசாங்கத்தின் அமைப்பு ரீதியான முயற்சியின் ஒரு பகுதியாகும்" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சீன இயக்குநர் மாயா வாங் கூறினார்.
சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக அமைப்பு ரீதியாக மனித உரிமை மீறல்களின் பெருகிவரும் ஆதாரங்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சீன அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.
சீனாவின் பெரும்பாலான முஸ்லிம்கள் நாட்டின் வடமேற்கில் வாழ்கின்றனர், இதில் ஜின்ஜியாங், குயிங்காய், கான்ஸூ மற்றும் நிங்ஷியா ஆகியவை அடங்கும்.
நிங்ஷியாவின் தன்னாட்சிப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமமான லியோகியாவோவில், ஆறு மசூதிகளில் மூன்று மசூதிகளின் குவிமாடங்கள் மற்றும் மினாரட்டுகள் அகற்றப்பட்டுள்ளன என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. எஞ்சியவற்றில் முக்கிய பிரார்த்தனை கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அது கூறுகிறது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் பெறப்பட்ட செயற்கைக்கோள் காட்சிகள், அக்டோபர் 2018 மற்றும் ஜனவரி 2020 க்கு இடையில் லியோகியாவோ கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில் ஒரு வட்டமான குவிமாடம் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக சீன பாணி பகோடாவாக மாற்றப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் நிங்ஷியாவில் உள்ள சுமார் 1,300 மசூதிகள் மூடப்பட்டுள்ளன அல்லது வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன என்று சீன முஸ்லிம்கள் குறித்த அறிஞர் ஹன்னா தியேக்கர் பிபிசியிடம் தெரிவித்தார். அந்த எண்ணிக்கை இப்பகுதியில் உள்ள மொத்த மசூதிகளில் மூன்றில் ஒரு பங்கைக் குறிக்கிறது.
சீன அதிபர் ஜின்பிங்கின் கீழ் கம்யூனிஸ்ட் கட்சி அதன் அரசியல் சித்தாந்தம் மற்றும் சீன கலாசாரத்துடன் மதத்தை இணைக்க முயன்றது.
2018-ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மசூதிகளின் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய ஆவணத்தை வெளியிட்டது. இது போன்ற மத கட்டமைப்புகளை "அதிகமாக இடித்து, குறைவானவற்றைக் கட்டவும், அதுபோன்ற கட்டமைப்புகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறைக்க முயற்சிகளை மேற்கொள்ளவும்" என்று மாநில அரசுகளை அது வலியுறுத்தியது.
மசூதிகளின் கட்டுமானம், வடிவமைப்பு மற்றும் நிதியுதவி "கண்டிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும்" என்கிறது அந்த ஆவணம்.
இத்தகைய அடக்குமுறை திபெத் மற்றும் ஜின்ஜியாங்கில் மிக நீண்ட காலமாகவும் கடுமையாகவும் இருந்து வருகிறது, ஆனால் அது மற்ற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இரண்டு பெரிய முஸ்லிம் இனக்குழுக்கள் உள்ளன. 8 ஆம் நூற்றாண்டில் தாங் வம்சத்தின் போது சீனாவிற்கு வந்த முஸ்லிம்களின் வம்சாவளியினர் ஹுயிஸ். இரண்டாவது குழு உய்குர்கள், பெரும்பாலும் ஜின்ஜியாங்கில் வசிக்கின்றனர். ஜின்ஜியாங்கில் உள்ள மசூதிகளில் மூன்றில் இரண்டு பங்கு 2017 ஆம் ஆண்டு முதல் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் ஒரு சுயாதீன சிந்தனைக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
"பொதுவாகப் பேசினால், சீனமயமாக்கல் என்ற கொள்கையை செயல்படுத்துவதற்கான ஒரு முன்னோடி தளமாக நிங்ஷியா இருந்து வருகிறது, எனவே, மற்ற மாகாணங்களை விட நிங்ஷியாவில் புதுப்பித்தல் மற்றும் இணைப்புகள் இரண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது" என்கிறார் பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரான டாக்டர் தியேக்கர். சீன அரசியலில் நிபுணத்துவம் பெற்ற கல்வியாளர் டேவிட் ஸ்ட்ரூப்-உடன் இணைந் ஹுய் முஸ்லிம்கள் குறித்த ஒரு அறிக்கையை அவர் எழுதியுள்ளார். டேவிட் ஸ்ட்ரூப், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்
"சீனமயமாக்கல்" என்பது சீன கலாசாரம் மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் மத நம்பிக்கைகளை மாற்றுவதற்கான ஜின்பிங்கின் முயற்சிகளை குறிக்கிறது.
கிராமவாசிகள் இடமாற்றம் செய்யப்படும் போதோ அல்லது ஒன்றிணைக்கப்படும் போதோ மசூதிகளை ஒருங்கிணைப்பதாக சீன அரசாங்கம் கூறுகிறது. இது பெரும்பாலும் முஸ்லிம்கள் மீதான பொருளாதாரச் சுமையைக் குறைக்க உதவுகிறது என்பது அதன் கூற்று, ஆனால் சில ஹுய் முஸ்லிம்கள் கட்சி மீதான தங்கள் விசுவாசத்தை திருப்பிவிடும் முயற்சியின் ஒரு பகுதியாக நம்புகிறார்கள்.
சில குடியிருப்பாளர்கள் இந்த "சீனமயமாக்கல்" கொள்கைகளை பகிரங்கமாக எதிர்த்தனர், ஆனால் அவர்களின் எதிர்ப்பு இதுவரை பயனற்றதாகவே உள்ளது. பல ஆண்டுகளாக, மசூதிகளை மூடுவது அல்லது இடிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் மோதலில் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
"மசூதிகளில் இருந்து வெளிப்புற கூறுகளை அகற்றிய பிறகு, உள்ளூர் அரசாங்கங்கள் மத நடவடிக்கைகளுக்கு அவசியமான வசதிகளான கழுவுதல் மண்டபங்கள் மற்றும் பிரசங்க மேடைகள் போன்றவற்றை அகற்றும்" என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஹுய் ஆர்வலரான மா ஜு கூறுகிறார்.
"மக்கள் [மசூதிகள் அல்லது அதிகாரிகளிடம்] செல்வதை நிறுத்தினால், மசூதிகளை மூடுவதற்கு அதையே ஒரு சாக்காகப் பயன்படுத்துவார்கள்," என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையில் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் சரிபார்க்கப்பட்ட மற்றொரு வீடியோ, தெற்கு நிங்ஷியாவில் உள்ள லியுஜியாகுவோ மசூதியில் இரண்டு மினாரட்டுகளும் குவிமாடமும் அகற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் துறவு மண்டபம் இடிக்கப்பட்டதை காட்டுகிறது.
நிங்ஷியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கான்ஸூ மாகாணத்தில், மசூதிகளை மூடல், ஒருங்கிணைத்தல் மற்றும் மாற்றியத்தல் குறித்த அறிவிப்புகளை அதிகாரிகள் அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டில், சீனாவின் "லிட்டில் மெக்கா" என்று முன்னர் அழைக்கப்பட்ட மாகாணத்தில் உள்ள நகரமான லின்ஷியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறார்களை மத நடவடிக்கைகளில் பங்கேற்கவோ அல்லது படிப்பதையோ அதிகாரிகள் தடை செய்தனர். உள்ளூர் தொலைக்காட்சி நிலையமொன்றின் 2019 ஆம் ஆண்டு அறிக்கையானது, "கடினமான கருத்தியல் கல்வி மற்றும் வழிகாட்டுதல் பணிகளுக்குப் பிறகு" அதிகாரிகள் பல மசூதிகளை "பணியிடங்கள்" மற்றும் "கலாச்சார மையங்களாக" மாற்றியுள்ளனர்.
"சீனமயமாக்கல்" நடவடிக்கைகளுக்கு முன்பு, ஹுய் முஸ்லிம்கள் பல வழிகளில் அரசிடமிருந்து ஆதரவையும் ஊக்கத்தையும் பெற்றுள்ளனர் என்று டாக்டர் தியேக்கர் கூறினார்.
"சீனமயமாக்கல் நடவடிக்கை சீனாவில் முஸ்லிம்களின் இருப்பை தீவிரமாகக் குறைத்துள்ளது. மேலும் குறிப்பிட்ட ஒரு நோக்கம் கொண்ட தேசபக்தி மற்றும் மத நடைமுறைகளுக்கு அரசின் ஆதரவை அளித்துள்ளது.
இது அரசின் ஆழமான இஸ்லாமிய வெறுப்பு நோக்குநிலையை பிரதிபலிக்கிறது. அதில் முஸ்லிம்கள் எல்லாவற்றிற்கும் மேலாக தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும். 'வெளிநாட்டு' செல்வாக்கின் எந்த அறிகுறியையும் அச்சுறுத்தலாக சீன அரசு கருதுகிறது," என்று அவர் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள அரபு மற்றும் முஸ்லிம் தலைவர்கள் "கேள்விகளைக் கேட்க வேண்டும் மற்றும் கவலைகளை எழுப்ப வேண்டும்" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குநர் எலைன் பியர்சன் கூறினார்.
சீன அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் ஏனைய இன மற்றும் மத சிறுபான்மையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உதாரணமாக, சீனா சமீபத்திய மாதங்களில் அதிகாரப்பூர்வ இராஜதந்திர ஆவணங்களில் "திபெத்" என்ற பயன்பாட்டை மாண்டரின் மொழியில் "ஜிசாங்" என்று மாற்றியுள்ளது. அதிகாரிகள் தேவாலயங்களில் இருந்து சிலுவைகளை அகற்றினர், போதகர்களை கைது செய்தனர் மற்றும் ஆன்லைன் கடைகளில் இருந்து பைபிள்களை இழுத்தனர்.