Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரபு உலகில் அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனா: இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னையில் என்ன செய்கிறது?

Advertiesment
அரபு உலகில் அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனா: இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னையில் என்ன செய்கிறது?
, புதன், 22 நவம்பர் 2023 (21:15 IST)
திங்களன்று பெய்ஜிங்கில் நடந்த, அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பின் போது சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, காஸாவில் நடந்து வரும் போரை நிறுத்த உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
 
செளதி அரேபியா, ஜோர்டன், எகிப்து, பாலத்தீன தேசிய ஆணையம் மற்றும் இந்தோனேஷியாவின் வெளியுறவு அமைச்சர்கள், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் மற்றும் பல அதிகாரிகளும் பெய்ஜிங்கிற்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்தனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர்கள் சீனப் தரப்புடன் விவாதித்தனர்.
 
காஸாவில் போர் நிறுத்த முயற்சிகளில் சீனாவும் பெரும் பங்கு வகிக்க விரும்புகிறது. அதனால்தான் இந்த சந்திப்பை சீனா நடத்தியது என்றும் நம்பப்படுகிறது.
 
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அரேபிய மற்றும் முஸ்லிம் நாடுகள் சீனாவின் பக்கம் திரும்பியிருப்பதால், இது இரு துருவ உலகத்தின் ஆரம்பமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
 
2020 ஜூன் மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங் பெய்ஜிங்கில் பாலத்தீன அதிகார சபைத் தலைவர் முகமது அப்பாஸை சந்தித்தார்.
 
பெய்ஜிங் சந்திப்பின் போது போர் நிறுத்தத்தை வலியுறுத்திய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்த அவலம் பரவாமல் தடுக்க சர்வதேச சமூகம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து உடனடியாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
இந்தப் போரில் சீனா நீதி மற்றும் நியாயத்துடன் உறுதியாக நிற்கிறது என்றும் அவர் கூறினார்.
 
உடனடி போர்நிறுத்தம், நிவாரணம், காஸாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியிலிருந்து விடுபடுவது மற்றும் நிலையான மத்திய கிழக்கிற்காகவும், அரபு-இஸ்லாமிய நாடுகளுடன் சீனா தொடர்ந்து பணியாற்றும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எக்ஸ்ஸில் (ட்விட்டர்) எழுதினார்.
 
பெய்ஜிங் "அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் நல்ல நண்பர் மற்றும் சகோதரர்" என்றும் பாலத்தீனர்களின் நியாயமான தேசிய உரிமைகள் மற்றும் நலன்களை மீட்டெடுப்பதற்கான நியாயமான காரணத்தை எப்போதும் உறுதியாக ஆதரிப்பதாகவும் திங்களன்று நடந்த கூட்டத்தில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, கூறினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது.
 
பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த எகிப்திய வெளியுறவு அமைச்சர் சமே ஷோக்ரி, இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடியை கையாள்வதில் சீனா பெரிய பங்கை வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 
"காஸாவில் பாலத்தீனர்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதில் சீனா போன்ற முக்கியமான சர்வதேச நாடுகளின் அதிக பங்களிப்பை எகிப்து எதிர்பார்க்கிறது" என்று வெளியுறவு அமைச்சர் ஷோக்ரி சீன வெளியுறவு அமைச்சரிடம் கூறினார் என்று எகிப்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர் ட்விட்டரில் எழுதினார்.
 
தற்போதைய இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு சில முக்கிய நாடுகள் ஆதரவு வழங்குவது துரதிர்ஷ்டவசமானது என்றும் ஷோக்ரி கூறினார்.
 
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் ஹமாஸை கண்டிக்கவில்லை. கூடவே பதற்றங்களை குறைக்க இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் இடையே "இருதரப்பு தீர்வுக்கு" அழைப்பு விடுத்துள்ளது.
 
மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவால் விடுப்பதோடு கூடவே அரேபிய மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான தனது நல்லுறவைப் பயன்படுத்தி அதன் மூலம் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனா முயற்சிப்பதாக நம்பப்படுகிறது.
 
மத்திய கிழக்கிற்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன், பாலத்தீனத்திற்கான ’இரு நாடுகளின் தீர்வு’ மற்றும் அங்கீகாரம் குறித்து விவாதிப்பதற்கு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகார சபையுடன் கூடவே அரபு லீக் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் கடந்த ஆண்டில் கூட்டங்களை நடத்தினார்.
 
சமீபத்திய நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து ஜுன், மத்திய கிழக்கின் பல நாடுகளுக்குச் சென்று சீனாவை ஒரு சாத்தியமான மத்தியஸ்தராக முன்வைக்க முயற்சிக்கிறார்.
 
பாலத்தீன-இஸ்ரேல் மோதல் தொடர்ந்து அதிகரிப்பதானது பாலத்தீனத்தின் பிரச்சினையை சர்வதேச சமூகத்தால் புறக்கணிக்கவோ அல்லது மறக்கவோ முடியாது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது என்று தனது சமீபத்திய பஹ்ரைன் பயணத்தின்போது அவர் கூறியிருந்தார்.
 
ஒருமித்த கருத்தை உருவாக்கவும், பாலத்தீன பிரச்சனையை சரியான பாதையில் மீண்டும் கொண்டு வரவும் சர்வதேச சமூகம் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
அரபு நாடுகளுடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பைப் பேணவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கூடிய விரைவில் மேம்படுத்துவதற்கு தகுந்த முயற்சிகளை மேற்கொள்ளவும் சீனா தயாராக உள்ளது என்றும் ஜுன் கூறினார்.
 
காஸாவில் சண்டை நிறுத்தம், 50 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க உடன்பாடு
?
டாக்டர். ஆண்ட்ரூ ஸ்கோபெல், யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் இல் சீனா திட்டத்தில் ஒரு புகழ்பெற்ற உறுப்பினராவார்.
 
"இந்த சீன அறிக்கைகளை நேர்மையற்ற பேச்சு என்று சொல்லமுடியாது. ஆனால் உண்மையில் அவை வெற்றுப் பேச்சுகள். பெய்ஜிங் ஒரு அமைதியான மற்றும் நிலையான மத்திய கிழக்கை விரும்புகிறது. ஏனெனில் தொடர்ச்சியான மோதலால் புவியியல் ரீதியாக சீனாவுக்கு நன்மை கிடைப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் பொருளாதார ரீதியாக இழப்பு அதிகம், குறிப்பாக பெட்ரோலிய விநியோகம். கூடவே நெருக்கடி நீடித்தால் அல்லது அதிகரித்தால், சர்வதேச கப்பல் வழித்தடங்களில் இடையூறுகள் ஏற்படக்கூடும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
 
மத்திய கிழக்கில் ராணுவ பலத்தையும் தூதாண்மை சக்தியையும் காட்டும் அளவிற்கு சீனாவின் அவ்வளவு திறன் இல்லை என்று டாக்டர். ஸ்கோபெல் தெரிவிக்கிறார். அமெரிக்காவின் முன்முயற்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போதைய நெருக்கடியின் போது வாஷிங்டனும் பெய்ஜிங்கும் என்ன சாதிக்க முடியும் என்பதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்பது தெளிவாகிறது என்று அவர் எழுதுகிறார்.
 
உதாரணமாக கிழக்கு மத்திய தரைக்கடலில் இரண்டு சக்திவாய்ந்த விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா உடனடியாக நிலைநிறுத்தியதை டாக்டர். ஸ்கோபெல் மேற்கோள் காட்டுகிறார். அக்டோபர் இறுதிக்குள்தான் ஏடன் வளைகுடாவில் ஆறு கடற்படைக் கப்பல்களை தற்காலிகமாக நிலைநிறுத்துவதில் சீனா வெற்றி பெற்றது என்பதுடன் அவர் இதை ஒப்பிடுகிறார்.
 
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் சீனா மத்தியஸ்தராக மாற முயற்சிக்கிறதா என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
 
பேராசிரியர் ஹர்ஷ் வி பந்த், புது டெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவராக உள்ளார்.
 
"சீனா தன்னை ஒரு வகையான மத்தியஸ்தராக நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது ஒரு மத்தியஸ்தராக ஆக முடியுமா இல்லையா என்பது இன்னும் ஒரு கேள்வியாகவே உள்ளது," என்று அவர் கூறுகிறார்.
 
"ஒரு மத்தியஸ்தராக செயல்பட இரு தரப்பிலும் செல்வாக்கு தேவை என்று நான் நினைக்கிறேன். தற்போது சீனாவுக்கு இஸ்ரேல் மீது எந்த செல்வாக்கும் இல்லை. ஏனெனில் சீனா அரபு நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது," என்று ஹர்ஷ் பந்த் குறிப்பிட்டார்.
 
''இந்த விவகாரத்தில் மத்தியஸ்த முயற்சி சீனாவுக்கு ஏற்றது என்று நான் நினைக்கவில்லை. இந்த நேரத்தில் இஸ்ரேலியர்கள் அமெரிக்கா சொல்வதைக் கூட கேட்கவில்லை. எனவே அவர்கள் சீனாவின் பேச்சைக் கேட்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.”
 
இந்த நேரத்தில் ஒரு மத்தியஸ்தராக ஆவதற்குத் தேவையான திறன் சீனாவிடம் இருப்பதாக தான் கருதவில்லை என்கிறார் பந்த். ”வருங்காலத்தில் சீனா இதில் பங்கு வகிக்கக்கூடும். ஆனால் தற்போது அதற்கான சாத்தியகூறு தென்படவில்லை,” என்றார் அவர்.
 
அப்படியானால் மத்திய கிழக்கில் சீனாவின் எல்லா முயற்சிகளும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவால்விடும் உத்தியா?
 
அமெரிக்காவிற்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே சீனாவின் நோக்கம் என்று பேராசிரியர் பந்த் கூறுகிறார்.
 
"இதில் உள்ள பெரும்பான்மையான விஷயங்களும் அரபு உலகின் நிலைமையைப் பற்றியது என்று நான் நினைக்கிறேன். அங்கு அமெரிக்க கொள்கை இஸ்ரேலியர்களுக்கு சாதகமாக உள்ளது என்ற உணர்வு உள்ளது. எனவே சீனா உள்ளே வந்து நாங்கள் அரபு உலகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு நடுநிலையான ஆதரவு அளிக்கிறோம் என்று கூறுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
 
"அமெரிக்காவிற்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்த, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சீனா மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதி இது என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் பேராசிரியர் பந்த்.
 
காஸாவில் சண்டை நிறுத்தம், 50 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க உடன்பாடு
 
ஏ.கே. மொஹாபாத்ரா டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தில் பேராசிரியராக உள்ளார்.
 
மத்திய கிழக்கில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் சீனாவின் முயற்சி இது என்றும் ஆனால் இந்த முயற்சியில் அது வெற்றி பெறாது என்றும் அவர் கூறுகிறார்.
 
"அமெரிக்கா இஸ்ரேலுக்கு பக்கபலமாக உள்ளது. தன் இடத்தை சீனா எடுத்துக்கொள்வதை அது ஒருபோதும் விரும்பாது. ஐநா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரித்தது. கிழக்கு மத்திய தரைக் கடலில் விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியது. இப்படி அமெரிக்கா இஸ்ரேலை ஆதரித்த விதத்தை பார்க்கும்போது இஸ்ரேலும் அமெரிக்காவின் கையை விட்டுவிடாது. அமெரிக்காவில் பலமான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிக்கிறது,” என்று மொஹாபாத்ரா கூறுகிறார்.
 
"இந்த விவகாரத்தில் சீனாவின் நுழைவு இரானின் வேண்டுகோளின் பேரில் நடந்தது,” என்கிறார் மொஹாபாத்ரா.
 
"இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று இரான் விரும்புகிறது. ஏனெனில் தன் நம்பகத்தன்மை ஆபத்தில் இருப்பதாக அது உணர்கிறது. இரான் ஹமாஸைத் தூண்டிவிட்டு அதைப் பயன்படுத்தியது. ஆனால் தன்னுடன் இணைந்து சண்டையிடுமாறு ஹமாஸ் இரானிடம் சொன்னபோது இரான் அதற்கு தயாராக இல்லை. இரான் கேட்டுக்கொண்டதை அடுத்தே சீனா இந்த விஷயத்தில் பேசுகிறது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
 
மென்மையான நிலைப்பாட்டை எடுக்குமாறு இரானியர்களை கேட்டுக்கொள்ள சீனாவுக்கு அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. சீனா இரானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
 
காஸாவில் நிலவும் சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர சீனாவுடன் பேச்சுவார்த்தையை அதிகரிக்க தயாராக இருப்பதாகவும் இரான் கூறுகிறது.
 
காஸாவில் சண்டை நிறுத்தம், 50 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க உடன்பாடு
 
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியில் சீனா தீவிரமாகப் பங்கு வகிக்கும் விதத்தைப் பார்க்கும்போது, இது இரு துருவ உலகின் (இரண்டு பெரிய துருவங்கள் உள்ள உலகம்) ஆரம்பமா என்ற விவாதமும் தொடங்கியுள்ளது.
 
மத்திய கிழக்கில் சீனா மிக முக்கியமான துருவமாக உருவெடுத்து வருவதாக தான் நினைக்கவில்லை என்று ஹர்ஷ் பந்த் கூறுகிறார். மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் அதிகாரம் மிகவும் உறுதியானது. சீனா அதை செய்யும் நிலையில் இல்லை என்றும் அரபு நாடுகளுக்கும் அது தெரியும் என்றும் அவர் கூறுகிறார்.
 
”இந்தியா, மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை முன்மொழிந்தபோது, அமெரிக்காவின் சக்திதான் அதைச் சாத்தியமாக்கியது. சீனாவுக்கு அந்தப் பிராந்தியத்தில் இதுபோன்ற செல்வாக்கு இல்லை. தன்னை அரபு உலகின் மையமாகவும், ஒரு தெளிவான மாற்றாகவும் நிலைநிறுத்தி, படிப்படியாக அரபு உலகை அமெரிக்காவிடமிருந்து விலக்க சீனா முயற்சி செய்கிறது,” என்றார் அவர்.
 
இது இரு துருவ உலகின் ஆரம்பம் என்று கூறுவது மிகவும் அவசரத்தனமானது என்று பேராசிரியர் மொஹாபாத்ரா தெரிவிக்கிறார்.
 
"உலகம் இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரியப் போகிறது என்று இப்போது சொல்வது கடினம். இன்று இரானின் நெருங்கிய நண்பராக இருப்பது சீனா மட்டுமே. இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையே சீனா அமைதி ஒப்பந்தம் செய்துவைத்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு 400 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாகவும் சீனா உறுதி கூறியுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது தன் செல்வாக்கை அதிகரிக்கும் சீனாவின் முயற்சிகள் தொடர்கின்றன என்பது தெளிவாகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
 
"ஆனால் அமெரிக்கா போன்ற பங்கை வகிக்க அது மேலும் நிறைய செய்ய வேண்டும். மேற்காசியாவின் அரசியல் மிகவும் சிக்கலானது. சீனாவில் அரபு அல்லது பாரசீக மொழி சரியாக பேசக்கூடிய போதுமான நிபுணர்கள் இல்லை. மேலும் மேற்காசியாவில் அமெரிக்கா போல ராணுவ இருப்பு சீனாவிடம் இல்லை. மேற்காசியாவில் அமெரிக்கா இப்போதும் முதலிடத்தில் உள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்கு அது தொடரும்,” என்று மொஹாபாத்ரா கூறினார்.
 
சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது சீனாவும் ரஷ்யாவும் ஒன்றிணைந்து அமெரிக்காவிற்குப் போட்டியாக ஒரு பெரிய பிரிவாக உருவெடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் ரஷ்யா தற்போது யுக்ரேனுடன் போரில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்படி நடக்கும் சாத்தியக்கூறும் இல்லை என்றே தோன்றுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆவின் பச்சை நிற பாலுக்கு பதிலாக 'டிலைட் பால்'- அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்