Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செளதி இளவரசர் முகமது பின் சல்மானின் துருக்கி பயணம் நிர்பந்த சூழலில் நடக்கிறதா?

Saudi - Prince
, வெள்ளி, 3 ஜூன் 2022 (10:14 IST)
செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் துருக்கிக்கு பயணம் செய்வது தொடர்பாக கருத்து ஒற்றுமை எட்டப்பட்டுள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லூத் சாவு ஷோக்லு தெரிவித்துள்ளார்.


ஆயினும் முகமது பின் சல்மானின் இந்த பயணம் எப்போது நடக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

"செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் துருக்கி பயணம் இந்த மாதம் நடக்க உள்ளது. இது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது," என்று துருக்கி அரசு ஊடகத்திடம் சாவுஷோக்லு கூறினார்.

இளவரசரின் பயண தேதியை தீர்மானிக்க செளதி அரேபிய வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனைகளை தான் நடத்திவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தவிர, செளதி அரேபியாவுடனான இறுக்கமான உறவுகளை இயல்பாக்குவதற்கு துருக்கி செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

2018 ஆம் ஆண்டில் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில், செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை செளதி ஏஜெண்டுகள் கொன்றதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதற்றமடைந்தன.

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்தோகன் ஏப்ரல் பிற்பகுதியில் செளதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது, இந்த உறவுகளில் இயல்பு நிலை சிறிதே திரும்பத் தொடங்கியது. இந்தப் பயணத்திற்குப் பிறகு, செளதி அரேபியாவின் உயர்மட்டத் தலைமையும் துருக்கிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முகமது பின் சல்மான் துருக்கி செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளாரா?

எர்தோகன் செளதி அரேபியாவுக்குச் சென்றபோது, அவர் முகமது பின் சல்மானை துருக்கிக்கு வருமாறு அழைத்ததாகவும், இருதரப்பும் அதற்கான பணிகளில் ஈடுபட்டதாகவும் செய்தியறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு துருக்கிய அதிகாரி 'டெய்லி சுபா' என்ற வலைதளத்திடம், "அப்போது, இருதரப்பு வர்த்தகம், பிராந்திய வளர்ச்சி, அன்னிய செலாவணி, எரியாற்றல் திட்டங்கள் மற்றும் பிற முதலீட்டு விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறும்," என்று கூறினார்.

மறுபுறம், துருக்கி-செளதி அரேபியா இடையேயான உறவுகளை இயல்பாக்குவது காலத்தின் தேவை என்றும் இது ஒரு நிர்பந்தம் எனவும் கூறப்படுகிறது.

கஷோக்ஜியின் கொலைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள சரிவு, முக்கியமாக இரு நாடுகளின் வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 5 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. அதே சமயம் துருக்கியின் பொருளாதாரம் சமீப காலமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தவும், அரசியல் பிடியைத் தக்கவைக்கவும் செளதி அரேபியாவுடனான உறவுகளை மேம்படுத்த எர்தோகன் விரும்புகிறார்.

மறுபுறம், செளதி அரேபியாவும் இதில் ஆர்வம் காட்டி வருகிறது. துருக்கியுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் தனது 'பிராந்திய சக்தி' பிம்பத்தை மீட்டெடுக்க விரும்புகிறது. சமீப காலமாக முதலீட்டில் கணிசமான சரிவு பதிவாகியுள்ள நிலையில், இதன் மூலம் தனது முதலீட்டை அதிகரிக்கவும் செளதி விரும்புகிறது.

துருக்கியுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் செளதி அரேபியா தனது பிராந்திய போட்டியாளரான ஈரானின் மீது அழுத்தத்தை அதிகரித்து, பிராந்தியத்தில் புதிய அதிகார சமநிலையை உருவாக்க விரும்புகிறது.

முகமது பின் சல்மான் துருக்கியுடன், கிரேக்க சைப்ரஸ், கிரேக்கம், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கும் செல்வார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் செய்தி முகமையான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன. இதன் போது, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களுடன் எரிசக்தி மற்றும் வர்த்தகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களையும் அவர் செய்துகொள்வார்.

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் ஜமால் கஷோக்ஜி கொலைக்குப்பிறகு, முகமது பின் சல்மான் இந்தப் பிராந்தியத்திற்கு வெளியே மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 2019 ஆம் ஆண்டு, ஜி-20 உச்சிமாநாட்டிற்காக அவர் ஜப்பான் சென்றிருந்தார்.

உறவுகளில் பதற்றம் ஏன்?

2018 ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது உண்மைதான். ஆயினும் மத்திய கிழக்கில் செளதி அரேபியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான பகை ஓஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் காலத்திலிருந்தே உள்ளது.

துருக்கி மற்றும் செளதி அரேபியா ஆகிய இரண்டுமே, சன்னி முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளாகும். ஆனால், முஸ்லிம் உலகின் தலைமைக்காக, இரு நாடுகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் பிற இஸ்லாமிய குழுக்களை ஆதரிப்பது தொடர்பாக, செளதி உட்பட வளைகுடாவில் உள்ள பிற நாடுகளுடன் எர்தோகனுக்கு பதற்றம் உள்ளது என்று பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளர் செபாஸ்டியன் அஷர் கூறுகிறார்.

2014இல் எர்தோகன் துருக்கியின் அதிகாரத்தைக் கைப்பற்றினார், 2015இல், மன்னர் சல்மான், செளதி அரேபியாவின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். இதற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே செயல்உத்தி ஒத்துழைப்பு சபை உருவாக்கப்பட்டது.

2017இல் வளைகுடா நெருக்கடியின் போது, செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை கத்தாருடன் உறவுகளை முறித்துக் கொண்டு பல தடைகளை விதித்தன.

ஆனால், இறக்குமதி சார்ந்த கத்தாரை தனிமைப்படுத்துவது மனிதாபிமானமற்றது என்றும் இஸ்லாத்தின் மதிப்புகளுக்கு எதிரானது என்றும் எர்தோகன் கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு துருக்கிக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்தது.

கத்தார் மீதான தடைகளை நீக்கச்செய்ய, எர்தோகன் செளதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டார். ஆனால், கத்தார் மீதான தடையை நீக்க மன்னர் சல்மான் உடன்படவில்லை.

2018 ஆம் ஆண்டில் ஜமால் கஷோக்ஜியின் படுகொலைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தடம் புரண்டன. துருக்கியுடனான வர்த்தகத்தில் அதிகாரப்பூர்வமற்ற தடைகளை செளதி விதித்தது.

கஷோக்ஜி கொலையில் தொடர்புடைய செளதியைச் சேர்ந்த 26 சந்தேக நபர்களின் வழக்கை துருக்கி, செளதி அரேபியாவுக்கு மாற்றியதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டன. துருக்கியின் இந்த முடிவை மனித உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன.

இந்த முடிவுக்கு பிறகு எர்தோகனின் செளதி அரேபியா பயணம் உறுதியாகி தற்போது முகமது பின் சல்மான் துருக்கி செல்ல உள்ளார்.

செளதி அரேபியாவிற்கு எர்தோகன் மேற்கொண்ட பயணம்

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்தோகன் ஏப்ரல் மாத இறுதியில் செளதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டார். ஜெட்டாவில் உள்ள அல் சலாம் அரண்மனையில் நடந்த சிறப்பு விழாவில் அவர் செளதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸை சந்தித்தார்.

விழாவில் செளதி இளவரசர் முகமது பின் சல்மானும் கலந்து கொண்டார். பின்னர், எர்தோகன், பட்டத்து இளவரசரை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார்.

"எங்கள் சொந்த ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு நாங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவுக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எங்கள் நண்பர்களின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக எல்லா சந்தர்ப்பங்களிலும் நாங்கள் கூறிவந்திருக்கிறோம்," என்று இந்த சந்திப்பு குறித்து எர்தோகன் ட்வீட் செய்துள்ளார்.

ஏப்ரல் 28 ஆம் தேதி, செளதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன் எர்தோகன், அட்டதுர்க் விமான நிலையத்தில் ஊடகங்களிடம் பேசினார். தனது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு 'புதிய கட்டத்தின்' தொடக்கத்தைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.

"இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் மனித உறவுகளின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அரசியல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்," என்று அவர் கூறினார்.

செளதி அரேபியா மீதான ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை விமர்சித்த அவர், "தான் வளைகுடாவில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக" கூறினார். இந்த தாக்குதல்களுக்கு ஈரான்தான் பொறுப்பு என்று செளதி அரேபியா குற்றம் சாட்டியது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்; இறுதி ஊர்வலத்திலும் துப்பாக்கிச்சூடு!