Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா இரு வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் ஆபத்தா, கூடுதல் பலனா?

கொரோனா இரு வேறு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் ஆபத்தா, கூடுதல் பலனா?
, திங்கள், 7 ஜூன் 2021 (11:32 IST)
சில நாடுகள் இரண்டு தடுப்பூசிகளின் பயன்பாட்டை ஆதரித்திருக்கிற நிலையில், அதன் சாதக பாதகங்கள் பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன.
 
அமெரிக்கா, பின்லாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இரு வேறு தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
 
இப்போது கனடாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள கனடாவின் பொது சுகாதார அமைப்பு, முதல் தடுப்பூசியாகக் கோவிஷீல்ட் பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாம் தடுப்பூசியாக ஃபைசர் பையோஎன்டெக் அல்லது மார்டர்னா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தது.
 
இந்தியாவும் கோவிட்-19க்காக இருவேறு தடுப்பூசிகள் போடப்படலாம் என்று விவாதித்துவருகிறது. அதைப் பற்றிய ஆராய்ச்சி விரைவில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் அமைப்புரீதியான பிரச்சனைகள் காரணமாக சில குடிமக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்ட் போன்ற வெவ்வேறு தடுப்பூசிகள் போடப்பட்டது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
 
ஏன் தடுப்பூசி காக்டெயில்?
 
இதற்கு முதற்காரணம், இன்னும் பல நாடுகளில் தடுப்பூசி போடும் திட்டம் இன்னும் முடியவில்லை. ஆகவே தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. பல நாடுகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் சூழல் இன்னும் மோசமாக இருக்கிறது. பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி போடும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
 
அடுத்த காரணமாக, ஆக்ஸ்ஃபோர்ட்- ஆஸ்ட்ரா செனக்கா தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு ரத்தம் உறைதலில் பிரச்சனைகள் ஏற்பட்டன. டென்மார்க், பின்லாந்து, ஃப்ரான்ஸ், நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் கோவிஷீல்டுக்கு இடைக்காலத் தடை விதித்தன.
 
இரத்தம் உறைதல் பிரச்சனையைத் தொடர்ந்து ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், ஒரு பயனருக்கு இருவேறு தடுப்பூசிகள் வழங்க முடியுமா என்ற ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. இருவேறு நிறுவனங்களிலிருந்து தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது புதிதல்ல. இன்ஃப்ளூயென்ஸா, ஹெப்படைட்டிஸ் ஏ, வேறு சில தொற்று நோய்களின் கட்டுப்பாட்டுக்காக இந்த முறை ஏற்கனவே பின்பற்றப்பட்டிருக்கிறது.
webdunia
மருத்துவ பரிசோதனைகளின்படி, இங்கிலாந்தின் காம்-கோவி திட்டத்தின்கீழ் தடுப்பூசிகளை இவ்வாறு கொடுப்பது பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. இதில், முதல் தவணை தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட 50வயதுக்கும் மேற்பட்ட பயனர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
 
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை உருவாக்கிய கெமலயா நிறுவனமும் அஸ்ட்ரா செனக்காவும் இதையே ஆராய்ந்துவருகின்றன. ஒரே மாதிரியான ஆண்டிஜென் அணுக்களைக் கொண்ட இருவேறு தடுப்பூசிகளின்மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பரிசோதனை இது. முதற்கட்ட முடிவுகள் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பானவையாக இருக்கின்றன. ஆனால், இறுதி முடிவுகளுக்காக நாம் காத்திருக்கவேண்டும்.
 
ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
 
ஸ்பெயினில் உள்ள கார்லோஸ் 3 மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தில் 431 பேரிடம் பரிசோதனை நடத்தடப்பட்டது. முதல் தவணையாக அனைவருக்கும் கோவிஷீல்ட் கொடுக்கப்பட்டது. முதல் தவணை முடிந்தபின்பு எட்டு வாரங்களுக்குப் பிறகு, பயோஎன்டெக் தடுப்பூசிகள் இரண்டாம் தவணையாகக் கொடுக்கப்பட்டன.
 
இரண்டாம் தவணை முடிந்தபிறகு, பயனாளிகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க்ககூடிய எதிரணுக்கள் அதிக அளவில் இருந்ததாக ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது. பரிசோதனைகளில், இந்த எதிரணுக்கள் கொரோனாவைரஸைத் தேடிப்பிடித்து செயலிழக்கச் செய்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
கனடாவைச் சேர்ந்த மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சௌ சிங் பேசும்போது, "பைசரின் தடுப்பூசிக்குப் பிறகு அதிக எதிரணுக்கள் உருவாயின. இரண்டு தவணை கோவிஷீல்டுக்குப் பிறகு இத்தனை எதிரணுக்கள் உருவாகவில்லை" என்றார்.
 
ஆஸ்ட்ராசெனக்கா தடுப்பூசிக்குப் பிறகு ஃபைசர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் எந்த உடல்பாதிப்புகளும் வரவில்லை என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் காம்கோவி ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது. சிறிய அசௌகரியங்கள் ஏற்பட்டாலும், அவை காலபோக்கில் குணமடைந்துவிடுகின்றன.
 
விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?
உலகின் பல விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் இரண்டு தடுப்பூசிகளை ஆதரித்துள்ளனர்.
 
லண்டனின் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டானி ஆல்ட்மேன் பேசும்போது, "ஒரு நோய் எதிர்ப்பு வல்லுநராக, இருவேறு தடுப்பூசிகளைத் தருவதில் எந்த ஆபத்தும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது ஏன் தவறு என்று எனக்குப் புரியவில்லை. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்?" என்றார்.
 
இருவேறு தடுப்பூசிகள் யாரையும் பாதிக்கும் என்று எந்த அறிவியல் கோட்பாடும் இல்லை.
 
கார்டிப் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆண்ட்ரூ ஃப்ரீட்மன், "இருவேறு தடுப்பூசிகளைத் தர முடியுமா என்று ஆராய்ச்சி நடந்துவருகிறது. இது ஆபத்தானது என்று அறிவியல் சொல்லவில்லை. ஆராய்ச்சி முடிவுகளுக்காக நாம் காத்திருக்கலாம். கோவிஷீல்ட் போட்டுக்கொண்டபின்பு ஒரு ஆர்என்ஏ தடுப்பூசியை எடுத்துக்கொண்டாலும், உங்கள் இரண்டு தவணைகள் முடிந்துவிட்டன என்றே பொருள்" என்கிறார்.
 
தடுப்பூசியை, சரக்குகளை விநியோகம் செய்யும் ஒரு வாகனத்தோடு ஒப்பிடுகிறார் ராயல் மெல்பர்ன் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த தடுப்பூசி ஆராய்ச்சியாளர் முனைவர். கைலி க்வின்.
 
"இது சரக்கு விநியோகம் போன்றது. வாகனமும் விநியோக முறையும் வேறு, ஆனால் உள்ளே இருக்கும் முள் புரதம் என்ற சரக்கு ஒன்றுதான். சரக்கு அதேதான் என்றபோது, கோட்பாட்டின்டி சரியாகத் தடுப்பூசி வேலை செய்யும். இருவேறு தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு பலம் சேர்க்கும்" என்கிறார்.
 
கனடாவைச் சேர்ந்த தடுப்பூசிக்கான தேசிய ஆலோசகர் குழுவின் தலைவர் முனைவர். கரோலின் க்வெஞ்ச், "ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகள் வழங்கப்படலாம் என்று ஆராய்ச்சி சொல்கிறது, கோவிஷீல்டை எடுத்துக்கொண்டவர்கள் ஆர்என்ஏ தடுப்பூசியை இரண்டாம் தவணையாக எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார்.
 
இருவேறு தடுப்பூசிகள் உடல்நலத்தை எப்படி பாதிக்கின்றன?
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள உடாய் கலான் கிராமத்தில், 20 பேருக்கு இரண்டுவகை தடுப்பூசிகள் போடப்பட்டன. ஏப்ரலில் முதல் தவணையாக கோவிஷீல்ட் பெற்றுக்கொண்டவர்களுக்கு, மே 14 அன்று கோவாக்ஸின் தரப்பட்டது.
 
யாருக்கும் இதனால் பக்க விளைவுகளோ உடல்நலக்குறைவுகளோ ஏற்படவில்லை. உத்தரப்பிரதேச அரசு இந்த சூழலை ஆராய்ந்து வருகிறது.
 
உடாய் கலானில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றபோதும், ஐரோப்பிய நாடுகளில் இருவேறு தடுப்பூசிகள் பெற்றுக்கொண்ட பலர் உடல்நலக்குறைவுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
 
பிபிசி உடல்நலம் பகுதியில் எழுதிவரும் பத்திரிகையாளர் ஜிம் ரீட், ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் காம்கோவி ஆராய்ச்சியில், ஆஸ்ட்ராசெனக்கா மற்றும் ஃபைசர் ஆகிய இருவேறு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு ஜுரம், தலைவலி, உடல்வலி, சோர்வு ஆகியவை ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.
 
இதைத் தவிர வேறு பக்க விளைவுகள் இருக்குமானால், அவை குறுகிய காலத்துக்கே நீடிக்கும். பெரியவர்களுக்கே இதில் பாதிப்பு அதிகம் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
 
ஆஸ்ட்ரா செனக்காவை முதல் தவணையாகவும், ஃபைசர் தடுப்பூசியை இரண்டாம் தவணையாகவும் எடுத்துக்கொண்ட 34% பேருக்கு ஜுரம் ஏற்பட்டது. 70%க்கு உடல் சோர்வும், 60%க்கு தலைவலியும் ஏற்பட்டது.
 
எந்தெந்த நாடுகளில் இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன?
தடுப்பூசிகளின் விநியோகத்தில் உள்ள நேரக்குளறுபடிகளாலும் தடுப்பூசிகளுக்குப் பின்னான பின்விளைவுகளாலும் பல நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
 
ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு ஃபைசர் அல்லது மார்டனா தடுப்பூசி தரப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.
 
ஆஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில், 65 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வேறு ஒரு தடுப்பூசி தரப்படும் என்று பின்லாந்தும் ஸ்வீடனும் அறிவித்துள்ளன.
 
அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில், 55 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஆர்என்ஏ தடுப்பூசி தரப்படும் என்று நார்வே அறிவித்துள்ளது. இதையே பிரான்ஸின் நல்வாழ்வு ஆலோசனைக் குழுவும் அறிவுறுத்துகிறது.
 
முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 60 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போடப்படுமா என்பதைப் பற்றி முடிவு எடுக்கப்படும் என்று ஸ்பெயினின் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது ஆராயப்பட்டு வருகிறது.
 
இருவேறு தடுப்பூசிகளின் பாதிப்புகளைப் பற்றி சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. சீனாவில் கான்ஸினோ பயாலஜிக்ஸ், சோன்க்விங் சீபி பயலாஜிக்கல் ப்ராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
 
ஸ்புட்னிக் மற்றும் அஸ்ட்ரா நடந்துவருகின்றன. முதற்கட்ட முடிவுகள் நேர்மறையாக இருக்கின்றன. அஸ்ட்ரா செனக்காவோடு பிற தடுப்பூசிகளைக் தருவது பற்றி தென்கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்தில் ஆய்வுகள் நடக்கின்றன.
 
இந்தியாவில் இதன் நிலை என்ன?
இந்தியாவும் இருவேறு தடுப்பூசிகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறது. இந்தியாவில் இப்போது இருக்கும் தடுப்பூசிகள், பரிசோதிக்கப்படும் தடுப்பூசிகள் இரண்டுமே ஆராயப்படும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. தடுப்பூசிக்கான தேசிய ஆலோசகர் குழுவின் தலைவர் மருத்துவர்.என்.கே.அரோரா பேசும்போது, "இதைப் பற்றிய ஆராய்ச்சி விரைவில் தொடங்கும். கோவிஷீல்ட் உள்ளிட்ட எட்டு தடுப்பூசிகளில் ஆராய்ச்சி நடக்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகமும் தடுப்பூசி நிறுவனங்களும் இருவேறு தடுப்பூசிகளைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடவிருக்கின்றன. முதல் மற்றும் இரண்டாம் தவணைகளாக எந்தத் தடுப்பூசிகளை வழங்கலாம் என்பது முடிவு செய்யப்படும். கொரோனாவைரஸுக்கு எந்த இரண்டு தடுப்பூசிகள் நல்ல பாதுகாப்பை வழங்கும் என்பதைத் தேடிக்கொண்டிருக்கிறோம். தற்போது உள்ள தடுப்பூசிகள் தீவிர நோயிலிருந்து காக்கின்றன என்றாலும், நோய்ப்பரவலில் அவ்வளவாக உதவுவதில்லை. இது அப்போதைக்கப்போதே நடத்தப்படவேண்டிய ஆராய்ச்சி. பக்க விளைவுகளின்றி மக்களுக்கு எதிர்ப்பு சக்தி வழங்குவதே எங்கள் நோக்கம்" என்றார்.
 
குஜராத் கோவிட் செயல் படையின் உறுப்பினரான மருத்துவ அதுல் பட்டேல், அகமதாபாத்தின் ஸ்டெர்லிங் மருத்துவமனையைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர். அவர் பேசும்போது, "இந்தியாவில் தடுப்பூசி காக்டெயில்களுக்கு சாத்தியம் உண்டு. இங்கு மக்கள்தொகை அதிகம், நம்மிடம் தடுப்பூசிகளும் இருக்கின்றன. எந்தெந்த தடுப்பூசிகள் சேர்க்கப்படுகின்றன என்பதைப் பார்க்கவேண்டியது அவசியம். மற்ற நாடுகளில், கோவிஷீல்டுடன் ஃபைசர் போன்ற தடுப்பூசிகள் தரப்படுகின்றன. கோவிஷீல்ட் ஒரு அடினோவைரஸ் தடுப்பூசி. ஃபைசர் ஒரு ஆர்என்ஏ தடுப்பூசி. ஆகவே இவற்றை அடுத்தடுத்து வழங்கினாலும், எதிர்பார்த்த முடிவுகள் வரும். கோவாக்ஸின் பற்றி தெளிவான தரவுகள் கிடைக்கவில்லை. ஆகவே கோவிஷீல்ட், கோவாக்ஸினை சேர்ப்பது சிக்கலாக இருக்கிறது. கோவிஷீல்ட் தரவுகள் இன்னும் ஆய்வேடுகளில் பிரசுரிக்கப்படவில்லை, ஆகவே முடிவுகள் பற்றி சொல்ல முடியாது" என்றார்.
 
இந்திய பொது நல ஆய்வுக்கழகத்தின் தலைவரான மருத்துவர் திலீப் மாவ்லங்கர் பேசும்போது, "கோவிஷீல்டையும் கோவாக்ஸினையும் சேர்த்தால் பயனளிக்குமா, எதிர்ப்பு சக்தி வருமா என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலுவைக் குறைக்கலாம். இந்த சேர்க்கை எந்த பலனை அளிக்கும் என்பதை சொல்வது கடினம்" என்றார்.
 
இந்தியாவின் ஒரே உள்நாட்டு தடுப்பூசி கோவாக்ஸின்
கோவாக்ஸின் என்பது, இறந்த கொரோனாவைரஸ்களால் ஆன தடுப்பூசி. அது உடலுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என்று சொல்லப்படுகிறது. ஒரு தடுப்பூசி போடப்படும்போது, கோவிட்-19 வைரஸை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அடையாளம் கண்டு, எதிரணுக்களை உருவாக்குகிறது.
 
கோவிஷீல்ட் தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?
 
இந்தியாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட்டால் உருவாக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட்- ஆஸ்ட்ரா செனக்கா தடுப்பூசி இது. அடினோவைரஸின் மென் வடிவத்தை, கொரோனா வைரஸின் தோற்றத்தைப் பிரதிபலிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது கோவிஷீல்ட். இந்த மாற்றப்பட்ட வடிவம் உடலுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என்று சொல்லப்படுகிறது. இது செயல்திறன் மிக்க தடுப்பூசி என்றும் பிரேசில் மற்றும் இங்கிலாந்தில் இதுபற்றி நடந்த மூன்றாம்கட்ட ஆராய்ச்சிகள் நம்பிக்கை தருகின்றன என்று சீரம் இன்ஸ்டிட்யூட் தெரிவிக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி போட்டுக்கிட்டா விமான பயணத்தில் சலுகை! – மத்திய அரசு ஆலோசனை!