Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதாம் ஹுசைன் மகள் பேட்டி: "எனது கணவரை கொல்ல ஆதரவளித்தேன்"

சதாம் ஹுசைன் மகள் பேட்டி:
, ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (00:02 IST)
சதாம் ஹுசைனின் மூத்த மகள் ரகத் சதாம் ஹுசைன் தனது கணவர் ஹுசைன் கெமையில் அல் மஜீத்துடன். கெமையில் 1996 இல் கொலை செய்யப்பட்டார்
 
அப்போது ரகத் ஹுசைனுக்கு வயது வெறும் 15 தான். திருமணத்தின் போது, இராக் மற்றும் இரானுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. 1996ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 25ஆம் வயதில் ரகத் தனது குடும்ப உத்தரவின் பேரில் விவாகரத்து பெற்றார். விவாகரத்து பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது கணவர் கொல்லப்பட்டார்.
 
ரகத் ஹுசைன், சதாம் ஹுசைனின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹுசைன் கெமையில் அல் மஜித்தை மணந்தார். அப்போது ஹுசைன் கெமையில், சதாம் ஹூசைனின் பாதுகாப்புப்பணியில் இருந்தார். சதாமின் இரண்டாவது மகள் ராணா சதாமின் திருமணம், ஹுசைன் மெமையிலின் சகோதரர் சதாம் கெமையில் அல் மஜித்துடன் நடந்தது.
 
உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE
சதாமின் இரண்டு மகள்களின் திருமணம், விவாகரத்து மற்றும் கணவர்களின் கொலை பற்றிய கதை மிகவும் சோகமானது. 2018ஆம் ஆண்டில் ரகத் ஹுசைனின் பெயரை அப்போதைய இராக் அரசு, தேடப்படுபவர் பட்டியலில் சேர்த்தது.
 
ரகத் சதாம் ஹுசைன் தனது சொந்த வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்கள் பற்றி அல்-அரேபியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த திருமணத்திற்காக அவரது தந்தை சதாம் ஹுசைன் நெருக்குதல் அளித்தாரா அல்லது அவரே விரும்பி திருமணம் செய்து கொண்டாரா என்று ரகத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.
 
 
சுய விருப்பத்துடன் திருமணம்
அதற்கு பதிலளித்த ரகத், "எனது தந்தை தனது ஐந்து குழந்தைகளில் எவரையும் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தவில்லை. தனது மகள்களுக்கு திருமண வரண்களை யாராவது கொண்டு வந்தால் அதற்கு எங்கள் விருப்பதையும் அவர் கேட்பார். அவர் எங்களுக்கு முழுமையான சுதந்திரம் அளித்திருந்தார். நான் அப்போது சிறுமியாக இருந்தேன். அது கோடை காலத்தில் ஒரு பகல் வேளை. என் தந்தை கதவைத் தட்டி அறைக்குள் வந்தார்.
 
நான் உறங்கிக்கொண்டிருந்தேன். மிகுந்த அன்புடன் அவர் என்னை எழுப்பினார். என் அருகே படுக்கையில் அமர்ந்தார். என் நலம் விசாரித்தார். உன்னை விரும்பும் ஒருவர் இருக்கிறார் என்று கூறி அவருடைய பெயரையும் சொன்னார். திருமணம் என்பது குடும்பத்திற்குள்தான் இருக்குமென்று எனக்குத் தெரியும். எனவே இது மன உளைச்சல் தருவதாக இருக்கவில்லை," என்று தெரிவித்தார்.
 
"உறவை ஏற்கவோ, நிராகரிக்கவோ உனக்கு சுதந்திரம் இருப்பதாக என் தந்தை கூறினார். இதையெல்லாம் அவர் சொல்லும்போது எனக்கு வெட்கமாக இருந்தது. பின்னர் அவர், மகளே, உன் முடிவை உன் தாயிடம் சொல்லிவிடு என்றார். ஹுசைன் கெமையில் அல்-மஜித் எனது தந்தையின் பாதுகாப்புப்படையில் இருந்தார். எனவே அவர் சதாம் ஹுசைனை தினமும் சந்தித்தார். என் தந்தை தனது பாதுகாவலர்களை மதிய உணவிற்கு அழைப்பார். அதில் இவரும் ஒருவர்," என்று அவர் மேலும் கூறினார்.
 
`அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்'
இராக் கிராமமாக மாறும் சதாம் ஹுசைன் கிராமம்
"நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசிக்க ஆரம்பித்தோம். இது என் அம்மாவுக்குத் தெரியும். நான் அப்போது சிறுமியாக இருந்தேன். ஆனால் எங்கள் காதல் விரைவில் திருமணமாக மாறியது. நான் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். திருமணத்திற்குப் பிறகும், நான் படிப்பைத் தொடர்ந்தேன், பட்டப்படிப்பை முடித்தேன். என் கணவர் படிப்புக்கு ஆதரவாக இல்லை. ஆனால் நான் படிப்பை முடித்தேன். ஒருவேளை என் கணவர் பொறாமை காரணமாக இதைச் செய்திருக்கலாம். அப்போது இராக்கில் பாதுகாப்பு தொடர்பாக எந்தப் பிரச்சனையும் இல்லை. எனவே பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்துவதற்கு இது ஒரு காரணமாக இருக்க முடியாது. இருப்பினும் என் கணவர் எனக்கு அன்பையும் மரியாதையையும் கொடுத்தார். அவர் எனது பெற்றோர்களையும் மதித்தார்," என்று ரகத் குறிப்பிட்டார்.
 
சதாம் ஹுசைன்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
சதாம் ஹுசைன் தனது மனைவி, மகள்கள், மகன்கள் மற்றும் இரு மருமகன்களுடன்
 
தந்தையின் அன்புக்கு இணையில்லை
"என் தந்தை என்னை அளவுக்கு அதிகமாக நேசித்தார். அதை யாருடனும் ஒப்பிட முடியாது. அவர் கொடுத்த அன்பை, என் கணவர் அல்லது என் குழந்தைகளின் அன்புடன் ஒப்பிடவே முடியாது, ''என்று அவர் குறிப்பிட்டார்.
 
இராக்-இரான் போரின்போது தான் சிறுமியாக இருந்ததாகவும், பள்ளியில் படித்துக்கொண்டிருந்ததாகவும் ரகத் கூறினார்.
 
அந்த போர் தொடர்பான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட ரகத், "அப்போது எங்களுக்கு வேறொரு வீடு இருந்தது. நாங்கள் அங்கும் போய் வந்து கொண்டிருப்போம். ஒரு நாள் பலத்த குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் நான் பள்ளிக்கு செல்லவில்லை. என் தந்தை ராணுவ சீருடையில் வந்து, ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று கேட்டார்.
 
போரின் ஆபத்துகளைப் பற்றி நான் சொன்னேன். அதற்கு அவர், இராக்கின் மீதமுள்ள குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கிறார்கள், நீயும் செல்ல வேண்டும். நீ பள்ளிக்குச் சென்றால், பள்ளியில் படிக்கும் மற்ற குழந்தைகளின் தைரியம் அதிகரிக்கும் , நீ அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். சதாம் ஹுசைனின் பிள்ளைகள் என்பதால் எங்களுக்கு எந்த கூடுதல் சலுகைகளும் கிடைக்கக்கூடாது என்று என் தந்தை நினைத்தார். என் சகோதரர்களும் இராக்கைப் பாதுகாப்பதில் தங்கள் உயிரை இழந்தனர்," என்று தெரிவித்தார்.
 
தான் அரசியல் முடிவுகளில் பங்கேற்கவில்லை என்றும் ஆனால் பல மனிதாபிமான முடிவுகளின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் ரகத் தெரிவித்தார். பல சந்தர்ப்பங்களில் தனது கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
 
 
கணவர் மற்றும் தந்தைக்கு இடையே மோதல்
தனது கணவர் ஹுசைன் கெமையில் மற்றும் தந்தை சதாம் ஹுசைனுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட கசப்பு குறித்தும் ரகத் பேசினார்.
 
"நான் மட்டுமே கணவரை இழக்கவில்லை. அப்போது இராக்கில் ஏராளமான பெண்கள் தங்கள் குடும்ப ஆண்களை இழந்தனர். இவர்களில் கணவர், தந்தை மற்றும் குழந்தைகள் அடங்குவர். என் கணவர் 1995ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜோர்டான் சென்றார்.
 
போவதற்குமுன் அவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் இங்கே தங்கினால், ரத்தக்களறி ஏற்படும் என்று நான் நினைத்தேன். அதனால்தான் இராக்கை விட்டு வெளியேறுவதற்கான அவரது முடிவை நான் ஆதரித்தேன். சதாம் ஹுசைனின் மகள் என்பதால் மற்ற நாடுகளுக்குச் செல்வது எனக்கு அவ்வளவு சுலபமல்ல. இருப்பினும் நாங்கள் ஜோர்டானில் அன்புடன் வரவேற்கப்பட்டோம். நான் ஒரு வெளிநாட்டவர் என்ற உணர்வே ஒருபோதும் ஏற்படவில்லை" என்று ரகத் தெரிவித்தார்.
 
"ஜோர்டானுக்குச் சென்ற பிறகு, செய்தியாயாளர் சந்திப்பில் என்ன சொல்லப்பட உள்ளது என்று எனக்குத் தெரியாது," என்று இந்த நேர்காணலில் ரகத் கூறினார்.
 
இந்த செய்தியாளர் கூட்டத்தில், ஹுசைன் கெமையில், சதாம் ஹுசைனுக்கு எதிராக பேசினார். ஜோர்டானுக்கு தான் வந்ததால் சதாமின் ஆட்சி அதிர்ந்தது என்று ஹுசைன் கெமையில் கூறினார்.
 
அதிகார மாற்றத்திற்கு தயாராக இருக்குமாறு இராக் படையினரை அவர் கேட்டுக் கொண்டார்.
 
 
 
ஜோர்டானில் புகலிடம்
ஹுசைன் கெமையில் அல்-மஜித் மற்றும் அவரது சகோதரர் சதாம் கெமையில் அல்-மஜித்தும் இராக்கை விட்டு வெளியேறி, 1995ஆம் ஆண்டு, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஜோர்டானுக்கு வந்தனர். இரு சகோதரர்களுடன், அவர்களது மனைவிகள் ரகத் மற்றும் ராணாவும் இருந்தனர்.
 
சகோதரர்கள் இருவரும் சதாம் ஹுசைனின் பெரும் நம்பிக்கையை பெற்றவர்கள் . ராணுவத்தின் முழு பணிகளையும் அவர்கள் கவனித்து வந்தனர். இராக்கின் ஆயுதத் திட்டத்தின் பின்னணியில் அவர்களது மூளை இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் ஜோர்டானுக்கு வந்தபோது, அவர்களுடன் இராக் ராணுவத்தின் 15 அதிகாரிகளும் இருந்தனர். ஜோர்டானில் மன்னர் ஹூசைன் அவர்களுக்கு புகலிடம் அளித்தார். இது சதாம் ஹுசைனின் கோபத்தை தூண்டியது.
 
அப்போது அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், மன்னரின் இந்த முடிவை வரவேற்றார்.
 
ரகத்தின் தந்தை சதாம் ஹுசைனுக்கும் கணவர் ஹுசைன் கெமையிலுக்கும் இடையே ஏற்பட்ட பிளவுக்கு என்ன காரணம்?
 
"என் கணவரின் மதிப்பு வளர ஆரம்பித்தது. என் தந்தைக்குப் பிறகு, அவர் இராக்கில் இரண்டாவது இடத்திற்கு உயரத் தொடங்கினார். குடும்பத்துடன் நெருங்கிய உறவு காரணமாக அவரது பங்களிப்பு அதிகமாக இருந்தது. முடிவுகளை எடுக்கும் திறனும், ஒவ்வொரு பொறுப்பையும் சிறப்பாக நிறைவேற்றும் தைரியமும் அவருக்கு இருந்தது.
 
அவர் என்னை திருமணம் செய்வதற்கு முன்பே நன்கு முன்னேறிக்கொண்டிருந்தார். நாங்கள் திருமணம் செய்துகொண்டபோது, கெமையில் சிறப்பு பாதுகாப்பு பிரிவின் தலைவராக இருந்தார். இரான் போரின்போது அதற்கு எதிரான இராக்கிய படைக்கும் அவர் தலைமைப்பொறுப்பு வகித்தார். சதாம் ஹுசைனின் பாதுகாப்பு மற்றும் முழு நாட்டின் பாதுகாப்பிற்கும் அவர் பொறுப்பேற்றார்," என்று இதற்கு பதிலளித்த ரகத் குறிப்பிட்டார்.
 
 
கணவரை கொலை செய்ய என் குடும்பத்தினர் எடுத்த முடிவு
"இராக்கை விட்டு வெளியேறிய பிறகு ஹுசைனால் விஷயங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை இது ஒரு மாதத்திற்குள் அவருக்கு புரிந்துவிட்டது. 1996ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராக்கிற்குத் திரும்பிய மறுநாளே விவாகரத்துக்கான முடிவு எடுக்கப்பட்டது. நான் என் தந்தையிடம் பேசி முடிவு செய்தேன். என் தந்தை மிகவும் சோகமாக இருந்தார். அவருடன் நீண்ட உரையாடல் நடந்தது. பேசக்கூடிய முடியாத அளவிற்கு அவர் சோகமாக இருந்தார். இந்த நேரத்தில் எனது சகோதரரும் அங்கு இருந்தார், நாங்கள் விவாகரத்து செய்ய வேண்டும் என்று அப்போது முடிவு செய்யப்பட்டது," என்று தனது விவாகரத்து குறித்து ரகத் தெரிவித்தார்.
 
ஜோர்டானிலிருந்து திரும்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு, ஹுசைன் கெமையில் அல்-மஜித்தும், அவரது சகோதரர் சதாம் கெமையில் அல்-மஜித்தும் கொலை செய்யப்பட்டனர். தனது கணவரை கொலை செய்வதற்கான முடிவு தனது குடும்பத்தைச் சேர்ந்தது என்று ரகத் உசேன் அந்த நேர்காணலில் கூறியுள்ளார். கணவரின் கொலையில் தனது சகோதரர் உதய் சதாம் ஹுசைனுக்கும் பங்கு இருந்தது என்பதையும் ரகத் ஒப்புக்கொண்டார்.
 
"என் கணவர் கொல்லப்பட்டபோது எனக்கு 25 வயது. எனக்கு ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. என் தந்தையும் இதை உணர்ந்தார். அவரும் எனக்கு ஆதரவு தர முயன்றார்," என்று ரகத் கூறினார்.
 
2003இல் இராக் மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு ரகத், ஜோர்டானுக்கு குடிபெயர்ந்தார். இப்போதும் அங்குதான் வசிக்கிறார்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா ஆட்சி காலத்தில் பெண்கள் நிலை உயர்ந்துள்ளது. - எம்.ஆர்.விஜயபாஸ்கர்