சிட்னி சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு வழக்கம்போல சென்று கொண்டிருந்தார் ரியா சிங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூட்ட நெரிசலான பல்கலைக்கழக பேருந்தில் அவர் ஏறியவுடன் யாரோ ஒரு ஆண் ஊழியர் அவரை உரச ஆரம்பித்தார்.
"நான் பேருந்தில் பயணம் செய்த 20 நிமிடங்களும் அவர் உரசிக் கொண்டே வந்தார். நான் பயந்துவிட்டேன். ஆனால், என்ன சொல்வது, பல்கலைக்கழகத்தில் யாரிடம் சென்று சொல்வது என்றும் தெரியவில்லை. என் பெற்றோருக்கு இந்த விஷயத்தை தெரிவிப்பதிலும் எனக்கு விருப்பமில்லை. என் தம்பியிடமும் இதனை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. எனது நெருங்கிய தோழியிடம் சொன்னேன். ஆனால், அவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை" என்கிறார் ரியா.
ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட Change The Course: National Report on Sexual Assault and Sexual Harassment at Australian Universities அறிக்கை வெளியான 2017ஆம் ஆண்டிற்கு கொஞ்ச காலத்துக்கு முன்புதான் இச்சம்பவம் நடைபெற்றது.
"நான் அமைதியாக, இதுகுறித்து எதுவும் செய்யாமல் இருந்ததற்கு நானே என் மீது கோபம் கொண்டேன். தெற்காசிய நாடுகளை சேர்ந்த பல மாணவர்கள், பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசினால், அது அவர்கள் குடும்ப மானத்திற்கு இழுக்காகிவிடும் என்று நினைக்கிறார்கள். இந்த அறிக்கை வெளியானதில் இருந்து, இதுகுறித்து அதிகளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டது" என்கிறார் தன் பெற்றோருடன் சிறு வயதிலேயே இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற ரியா.
2015 அல்லது 2016ஆம் ஆண்டுகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் பெரும்பாலும் (22 சதவீதம்) பல்கலைக்கழகத்திற்கு செல்லும் அல்லது திரும்பி வரும் வழியில் இதனை அனுபவிக்கிறார்கள். 51 சதவீத மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி, அதற்கு காரணமானவர்களையும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள் என்று ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
மலேசியாவில் இருந்து வந்து ஆஸ்திரேலியாவில் படிக்கும் எமிலி லி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், "என் நண்பர் ஒருவர் என்னை வற்புறுத்தியதால், நான் அவர் வீட்டிற்கு செல்ல ஒப்புக்கொண்டேன். மது அருந்திய பிறகு, அவர் பாலியல் உறவு வைத்துக் கொள்ள முயற்சிக்க, எனக்கு அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எனக்கு அது பண்பாட்டு அதிர்வாக இருந்தது. எங்கள் நாட்டில் பாலியல் கல்வி கிடையாது, மது அருந்தும் பழக்கமும் பெரிதாக இருந்ததில்லை. எனக்கு அவமானமாக இருந்தது. இதனை யாரிடமும் பல ஆண்டுகள் சொல்லாமல் இருந்தேன்" என்று தெரிவித்தார்.
"ஆஸ்திரேலியா போன்ற பாலியல் பற்றி பேச பெரும் தயக்கம் இல்லாத நாட்டில், பாலியல் உறவுக்கு சம்மதம் பெறுவது குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. பாலியல் கல்வி அல்லது பாலியல் குறித்து விழிப்புணர்வு குறைவாக இருக்கும் ஆசிய நாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்" என 'ஆஸ்திரேலிய சர்வதேச மாணவர் சங்க'த்தின் தேசிய பெண்கள் அதிகாரியான பெல்லே லிம் கூறுகிறார்.
பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் ஆசிய நாடுகளில் இருந்து முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள். புதிய கலாசாரம் குறித்து தெரியாமல் இருப்பது அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.
இலங்கையை சேர்ந்த முன்னாள் சர்வதேச மாணவர் தேவன செனனயகே கூறுகையில், "மெல்போர்னில் உள்ள பல்கலைக்கழகத்தில் நான் சேரும் போது எனக்கு 18 வயது. இங்கு வந்துதான் மது, போதைப் பொருட்கள், சம்மதம் இல்லாமல் ஒருவரை தொடுவது போன்ற கலாச்சார நிகழ்வுகளை பார்தேன். இந்த சூழல் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. ஆனால், எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். புது நாட்டில் சர்வதேச மாணவராக இருப்பதால் நீங்கள் தனிமையாக இருப்பதாக உணரலாம்" என்று தெரிவித்தார்.
2015 மற்றும் 2016 ஆண்டுகளில் 5.1 சதவீத சர்வதேச மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக, ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வருகிறது. 39 பல்கலைக்கழகங்களில் உள்ள 30,000 மாணவர்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பல்கலைக்கழக சூழலில் 1.4 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர். ஆண்களை விட, பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மனித உரிமை ஆணையத்தின் பாலியல் பாகுபாடு ஆணையர் கேட் ஜென்கின்ஸ் இதுகுறித்து கூறுகையில், "பாலியல் துன்புறுத்தலால் சர்வதேச மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை பார்க்கிறோம். உள்நாட்டு மாணவர்களை போல, அவர்களுக்கு எங்கு சென்று அணுகுவது என்று தெரியவில்லை. தனிமையாக உணர்கிறார்கள்" என்கிறார் அவர்.
"பாதிக்கப்பட்ட தெற்காசிய சமூகத்தை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் இதுகுறித்து புகார் தெரிவிப்பதில்லை. சில மாணவர்களுக்கு தாங்கள் புகார் அளிக்கலாம் என்று கூட தெரியவில்லை. புகார் அளித்தால் அதனை வீட்டில் சொல்ல வேண்டி வரும் என்று நினைத்து பெரும்பாலனவர்கள் புகார் அளிப்பதில்லை" என End Rape on Campus Australia (EROC) அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநரான ஷர்னா ப்ரெம்னர் கூறுகிறார்.
பாலியல் தாக்குதலுக்கு உள்ளான 87 சதவீத மாணவர்கள், பாலியல் ரீதியான தொல்லையை அனுபவித்த 94 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழகத்திடம் முறையாக புகார் அளிக்கவில்லை என கணக்கெடுப்பு கூறுகிறது. சர்வதேச மாணவர்கள் புகார் அளிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இதனால் அவர்களின் விசாவிற்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சமே.
"புகார் அளிக்கும் மாணவர்களும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றே கருதுகிறார்கள்" என்கிறார் ப்ரெம்னர்.
பல்கலைக்கழகத்தில் பாலியல் தாக்குதல் நடப்பதை குறைக்க, பாலியல் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான உறவுமுறைகள் குறித்து கட்டாயம் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படவேண்டும். சர்வதேச மாணவர்களுக்கு, கலாசார மாறுபாடுகள், பாலின விதிமுறைகள் ஆகியவற்றை கற்றுக் கொடுப்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என மெல்போர்னை அடிப்படையாக கொண்ட கலாசாரம், இனம் மற்றும் சுகாதார மையத்திற்கான இணை மேலாளர் அலிசன் செல்ஹோ தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைப்படி, பாலியல் தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான கொள்கைகள், நடைமுறைகளை மதிப்பாய்வு செய்வதில் பல்கலைக்கழகங்கள் முறையாக நடந்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தில், பொருளியல் மேற்படிப்பு படித்துவரும் தீக்ஷா தஹியா டெல்லியை சேர்ந்தவர்.
"மொனாஷ் பல்கலைக்கழகத்தின் கையேட்டில், சமூக நடத்தை, பாலியல் நடத்தை, ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற உறவுமுறைகள், மது, உதவி எண் அனைத்தும் அடங்கியிருந்ததை பார்த்து வியந்து போனேன். இந்தியாவில் இதையெல்லாம் குறித்து பேச தயக்கம் இருக்கும். அந்த கையேட்டை படித்தவுடன், புது நாட்டில் எப்படி இருக்கப்போகிறோம் என்ற கவலை சற்று குறைந்தது" என்று அவர் கூறுகிறார்.
அந்நாட்டு பொருளாதாரத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், சர்வதேச மாணவர்களின் பாதுகாப்பு அவசியமாகிறது. 2017ஆம் ஆண்டில், 799,371 மாணவர்கள் படிப்பிற்கு பதிவு செய்ததில் முழுக்கட்டணம் கட்டும் சர்வதேச மாணவர்கள் 624,001 பேர். இதில் அதிகபட்சமாக 30 சதவீதம் பேர் சீன மாணவர்கள், 11 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் ஆவார்கள்.