Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா vs நியூசிலாந்து: அபார வெற்றி பெற்ற நீலப் படை, நல்ல தொடக்கம் கண்ட ரோஹித் தலைமை

இந்தியா vs நியூசிலாந்து: அபார வெற்றி பெற்ற நீலப் படை, நல்ல தொடக்கம் கண்ட ரோஹித் தலைமை
, திங்கள், 22 நவம்பர் 2021 (13:26 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. அதில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்றுநராக ராகுல் டிராவிடும், இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும் களமிறங்கிய முதல் தொடரே ஒயிட் வாஷ் வெற்றி என்பதும் இந்திய தரப்பில் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

முதலில் பேட் செய்த இந்தியா

டாஸை வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. முதல் இரு போட்டிகளில் கே எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து களமிறங்கிய ரோஹித் சர்மா, இந்த போட்டியில் இஷான் கிஷனுடன் களமிறங்கினார்.

இந்திய தரப்பு 69 ரன்கள் குவித்திருந்த போது இஷான் கிஷன் விக்கெட் பறி போனது. அடுத்தடுத்து சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் என டாப் ஆர்டர் பேட்டர்கள் சரிய, ரோஹித் சர்மாவோடு கைகோர்த்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து ரன் குவிப்பைத் தொடங்கினார் ஸ்ரேயாஸ் ஐயர்.

31 பந்துகளுக்கு 56 ரன்களைக் குவித்திருந்த ரோஹித் சர்மாவின் விக்கெட் பறிபோன பின், ஸ்ரேயாஸ் - வெங்கடேஷ் ஐயர் ஜோடி நிதானமாக ரன்களைக் குவித்தது.

இந்த ஜோடி அதிகம் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்த போதும் ரன்குவிப்பை நிறுத்தவில்லை.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்ஷல் படேல், தீபக் சாஹர் என அனைவரும் ரன் குவிப்பைத் தொடர்ந்தனர். 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைக் குவித்திருந்தது.

நியூசிலாந்து தரப்பில் லோகி ஃபர்குசன் 4 ஓவர்களை வீசி 45 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். நியூசிலாந்து அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் 4 ஓவர்களை வீசி 27 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சரிந்த நியூசிலாந்து விக்கெட்டுகள்

185 ரன்களை அடித்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் பெரிதாக நிலைத்து நிற்கவில்லை.

மார்டின் குப்டில் மட்டுமே ஒரு பக்கம் விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடி காட்டினார். மறுபக்கம் டெரில் மிட்செல் (5 ரன்கள்), மார்க் சாப்மென் (0), க்ளென் ஃபிலிப்ஸ் (0) எனமூன்று முக்கிய டாப் ஆர்டர் பேட்டர்களின் விக்கெட்டுகளை அக்ஸர் படேல் அனாயாசமாக சரித்தார். 4.4 ஓவரில் நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்களை மட்டுமே குவித்திருந்தது.

ஒரு வலுவான இணையை உருவாக்க காத்திருந்த மார்டின் குப்டிலுடன், டிம் சைஃபெர்ட் இணைந்து நியூசிலாந்துக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தார். இந்த ஜோடி தான் நியூசிலாந்து தரப்பிலேயே அதிகபட்சமாக 35 பந்துகளுக்கு 39 ரன்களை குவித்த இணை.

யுவேந்திர சாஹல் வீசிய 10.3ஆவது பந்தில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மார்டின் குப்டில். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, இஷ் சோதி என அனைவரும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர்.

அனுபவமிக்க பந்துவீச்சாளரான லோகி பெர்குசன் 14 ரன்களைக் குவித்து தன் விக்கெட்டை பறிகொடுத்தார். 17.2 ஓவரிலேயே தன் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை தோற்றது நியூசிலாந்து.

3 - 0 என தொடரை வென்ற இந்தியா

டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு, இந்திய அணி விளையாடிய முதல் டி20 தொடரில் 3 - 0 என நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்தியா.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்ற பிறகும், நியூசிலாந்தை வென்றால் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பு இருந்தது. நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்ததால் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை கனவு தகரத் தொடங்கியது.

ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை தோற்கடித்தால் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி இருக்கலாம். அங்கும் நியூசிலாந்து ஆப்கானிஸ்தானை வென்று, இந்தியாவை தொடரிலிருந்தே வெளியேற்றியது.

சாதகமான டாஸ்

இந்தியா, டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில், டாஸை வெல்ல முடியவில்லை. மூன்று முறையும் முதலில் பேட் செய்தது இந்திய அணி.
webdunia

போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்ததால், இரண்டாவதாக பேட் செய்பவர்களுக்கு, பனி (Dew) காரணமாக இயற்கையாகவே ஒரு கூடுதல் சாதக அம்சம் இருந்தது. அது இந்தியாவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் ரோஹித் சர்மா வழிநடத்திய இந்த தொடர் இந்தியாவில் நடந்ததோடு, மூன்று போட்டிகளில் டாஸை வென்றதும் அவருக்கு சாதகமாக அமைந்தது. முதல் இரு போட்டிகளில் முதலில் பந்து வீச தீர்மானித்த இந்தியா, மூன்றாவது போட்டியில் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது குறிப்பிடத்தக்கது.

நல்ல தொடக்கம்

தொடரை வென்றதோடு மட்டுமின்றி, 3 போட்டிகளில் 159 ரன்களைக் குவித்து தன் செயல்பாட்டையும் நிரூபித்திருக்கிறார் ரோஹித்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்றுநராக ராகுல் டிராவிடும், இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும் களமிறங்கிய முதல் தொடரே வெற்றியில் தொடங்கப்பட்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என பல்வேறு முக்கிய போட்டிகள் நடக்க உள்ள நிலையில் இந்தியா வலுவான ஓரணியை அமைத்துக் கொள்ளும் முயற்சியின் ஒரு நல்ல தொடக்கமாக இவ்வெற்றி பார்க்கப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேத்துதான் தமிழ் கத்துக்க தொடங்கினேன்! – சென்னை புதிய தலைமை நீதிபதி!