இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில், ஒரு ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, தங்களின் மிக சாதகமான வணிக உறவுள்ள நாடு என்ற பாகிஸ்தானின் தற்போதைய நிலை குறித்து தாங்கள் பரிசீலித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இத்தீவிரவாதத் தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக தெரிவித்த தீவிரவாதக் குழுவினை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் தான் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுவதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
வரும் வியாழக்கிழமையன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடக்கவுள்ள உயர் நிலைக் கூட்டம், வணிக உறவுகளில் மிகவும் விரும்பத்தக்க நாடு என்று பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலை குறித்து மறுபரிசீலனை செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
திங்கள் கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள நதி நீர் பங்கீடு குறித்த இரு தரப்பு ஒப்பந்தத்தை இந்தியா மறு ஆய்வு செய்தது. இச்செய்கை, பாகிஸ்தானுக்கு தண்டனை விதிக்கும் நோக்கில் செய்யப்பட்டதாக பார்க்கப்படுகிறது.