Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - சீனா எல்லை மோதல்: "எல்லைக்கு அப்பால் சீனா கட்டுமானம் செய்ய முயன்றது, தடுத்ததால் தாக்கியது" - இந்திய அரசு பதில்

Advertiesment
இந்தியா - சீனா எல்லை மோதல்:
, ஞாயிறு, 21 ஜூன் 2020 (15:11 IST)
மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலேயே தங்கள் பகுதியில் சீனா கட்டுமானம் மேற்கொள்ள முயன்றது என்றும், ஒப்பந்தத்தை மீறும் இந்த முயற்சியை முறியடித்ததால் சீனத் தரப்பு வன்முறைத் தாக்குதலைக் கையில் எடுத்தது என்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி இரவு இந்திய - சீன எல்லைப்புறத்தில் இருநாட்டுப் படையினர் இடையே நடந்த கைகலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பு சேதாரம் பற்றி அதிகாரபூர்வத் தகவல் இல்லை.

இந்த மோதல் சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை சீனா சனிக்கிழமை அளித்தது. சீனாவின் விளக்கம் பற்றி இந்தியாவின் பதிலைக் கோரும் ஊடகங்களின் கேள்விகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா பதில்களை அளித்துள்ளார். அந்த பதில்:

"கல்வான் பள்ளத்தாக்கு தொடர்பான நிலைப்பாடு வரலாற்றுப்பூர்வமாக தெளிவாக உள்ளது. மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக சீனா முன்வைக்க முயலும் மிகைப்படுத்தப்பட்ட, வாய்பில்லாத கூற்றுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் கூற்றுகள் கடந்த காலத்தில் சீனா மேற்கொண்ட நிலைப்பாடுகளுக்கு ஏற்ப இல்லை.

கல்வான் பள்ளத்தாக்கு உட்பட, இந்திய சீன எல்லைப்புறத்தின் எல்லா பகுதிகளிலும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டின் அமைப்பு குறித்து இந்தியப் படையினருக்கு தெளிவாகத் தெரியும். மற்ற இடங்களில் செய்வதைப் போலவே இந்தியப் படையினர் இந்த கோட்டின் அமைவை கராறாக ஏற்று நடக்கின்றனர். மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இந்தியப் படையினர் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. உண்மையில் சொன்னால், இந்தப் பகுதியில் அவர்கள் நீண்டகாலம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரோந்து சென்று வருகிறார்கள்.

இந்தியா செய்துள்ள எல்லா கட்டுமானங்களும், இயல்பாகவே மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டினை ஒட்டிய இந்தியப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டவையே.
webdunia

2020 மே மாதத் தொடக்கத்தில் இருந்தே இப்பகுதியில் இந்தியாவின் சாதாரண, பாரம்பரிய ரோந்து முறைகளை சீனத் தரப்பு தடுத்துவந்தது. இதனால் மோதல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனையை களத்தில் உள்ள ராணுவ அதிகாரிகள் இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் வகுத்துக்கொண்ட விதிமுறைகளுக்கு ஏற்ப பேசித்தீர்க்க முயற்சி எடுத்தனர். நடைமுறையில் உள்ள ஏற்பாட்டை இந்தியா தானாகவே ஒரு தரப்பாக மாற்றுகிறது என்ற வாதத்தை நாங்கள் ஏற்கவில்லை. மாறாக, நாங்கள்தான் அந்த நடைமுறையில் இருக்கும் ஏற்பாட்டை பராமரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார் அனுராக் ஸ்ரீவாஸ்தவா.

மேலும் அவர் கூறுகையில்,

"மே மாத மத்தியப் பகுதியில், இந்திய சீன எல்லைப்புறத்தின் மேற்குப் பிரிவின் பிற பகுதிகளில் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டினைக் கடந்துவர சீனத் தரப்பு முயன்றது. இந்த முயற்சிகள் நம்மிடம் இருந்து (இந்தியத் தரப்பில் இருந்து) வந்த உரிய பதிலடியால் எதிர்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் சீன நடவடிக்கையால் எழுந்த சூழ்நிலையை சரி செய்வதற்கான பேச்சுவார்த்தையை இரு தரப்பும் ராணுவ, ராஜீயத் துறை தொடர்புகள் மூலம் மேற்கொண்டன.

சீனாவின் கட்டுமான முயற்சியைத் முறியடித்தபோது...

ஜூன் 6ம் தேதி மூத்த கட்டளைத் தளபதிகள் சந்தித்துப்பேசி, மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் பதற்றம் தணிக்கவும், மோதலைத் தவிர்க்க விலகிச்செல்லவும் தேவையான நடைமுறைகளை முடிவு செய்தனர். இது பரஸ்பரம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருந்தது. மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை மதிக்கவும், ஏற்று நடக்கவும், நடப்பில் இருக்கும் ஏற்பாட்டை மாற்றியமைக்கும் செயல்களில் ஈடுபடாதிருக்கவும் ஒப்புக்கொண்டனர்" என்று கூறியுள்ளார்.
webdunia

"ஆனால், கல்வான் பள்ளத்தாக்கைப் பொறுத்த அளவில் இந்தப் புரிந்துணர்வில் இருந்து சீனா விலகியது. அங்கு மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு மிக அருகிலேயே அவர்கள் பக்கத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்த முயன்றது சீனத் தரப்பு. இது முறியடிக்கப்பட்டபோது, சீனப் படையினர் ஜூன் 15ம் தேதி வன்செயல்களில் ஈடுபட்டனர். இதனால், உயிரிழப்புகள் ஏற்பட்டன" என்று அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகிய இருவரும் ஜூன் 17ம் தேதி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினர், அப்போது ஜூன் 15ம் தேதி நடந்த வன்முறை கைகலப்பு தொடர்பாகவும், அதற்கு காரணமாக அமைந்த நிகழ்வு தொடர்பாகவும் தம் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் என்று கூறும் அனுராக் ஸ்ரீவாஸ்தவா "சீனத் தரப்பின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், மூத்த கட்டளைத் தளபதிகள் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வினை திரித்துக் கூறுவதையும் உறுதியாக நிராகரித்தார்" ஜெய்சங்கர் என்றும் கூறியுள்ளார். தம்முடைய செயல்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை சீனாதான் மேற்கொள்ளவேண்டும் என்று ஜெய்சங்கர் கூறியதாகவும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

'இருதரப்பு உறவு மேம்பட எல்லையில் அமைதி தேவை'

"ஒட்டுமொத்த சூழ்நிலையை பொறுப்புடன் கையாள்வது என்றும், ஜூன் 6ம் தேதி ஒப்புக்கொள்ளப்பட்ட விலகிச் செல்லுதல் தொடர்பான புரிந்துணர்வை இரு தரப்பும் உண்மையாக செயல்படுத்தும் என்றும் இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். இரு தரப்பும் தொடர்ச்சியாக தொடர்பில் உள்ளன. ராணுவ, ராஜீய மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது.
webdunia

இருதரப்பு உறவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவசியமான எல்லைப்புற அமைதியையும், சமாதானத்தையும் உறுதி செய்வதற்கு இரு அமைச்சர்களிடையே எட்டப்பட்ட புரிந்துணர்வை சீனத் தரப்பு உண்மையாக பின்பற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவின் ஸ்பான்சரை நிராகரிக்க முடியாது! – பிசிசிஐ உறுதி!