Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களிடையே அதிகரித்து வரும் கோபம், மன அழுத்தம், கவலை – என்ன காரணம்?

Advertiesment
பெண்களிடையே அதிகரித்து வரும் கோபம், மன அழுத்தம், கவலை – என்ன காரணம்?
, புதன், 7 டிசம்பர் 2022 (23:07 IST)
கேல்லப்பின் வருடாந்திர கருத்துக்கணிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் பெண்களிடையே கோபம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கிறது. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தஹ்ஷா ரெனி தனது சமையலறையில் நின்று கொண்டிருந்தபோது, அவருடைய நுரையீரலின் ஆழத்திலிருந்து ஓர் ஆழமான, இருண்ட, வெற்று அலறல் வெளிப்பட்டது. அது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
 
“கோபம், நான் எளிதில் அடையக்கூடிய உணர்ச்சியாக இருந்து வருகிறது,” என்று அவர் கூறுகிறார்.  ஆனால், இப்படி அவர் முன்பு உணராததைப் போல் இருந்தது.
 
அப்போது பேரிடர்க்காலம். பொறுத்தது போதும் என்பதைப் போல் உணர்ந்தார். அதற்கு முந்தைய 20 நிமிடங்களில் அவருக்குக் கோபத்தை ஏற்படுத்திய அனைத்து விஷயங்களையும் உரக்கப் பட்டியலிட்டப்படி வீட்டைச் சுற்றி நடந்தார்.
 
ஆனால், வாய்விட்டு அலறிய பிறகு அவர் ஒருவித விடுதலையை உணர்ந்தார்.
 
ஹிப்னோதெரபிஸ்ட்டும் வாழ்வியல் பயிற்சியாளருமான தஹ்ஷா, உலகெங்கிலும் உள்ள பெண்களை ஜூம் செயலி மூலம் கூட்டினார். அவர்களுக்கு ஆத்திரத்தைத் தரும் அனைத்தையும் பேசவும், அதைப் பற்றிக் கத்தவும் செய்கிறார்.
 
கேல்லப் வேர்ல்ட் கருத்துக் கணிப்பின் 10 ஆண்டுக்கால தரவுகளில் பிபிசி பகுப்பாய்வின்படி, பெண்கள் அதிகம் கோபமடைந்து வருகின்றனர்.
 
ஒவ்வோர் ஆண்டும் கருத்துக்கணிப்பு 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 120,000க்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்படுகிறது. அதில் அவர்களிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளில் ஒன்று, “கருத்துகணிப்பு நடத்தப்படும் நாளுக்கு முந்தைய நாளில் எந்த உணர்ச்சியை குறிப்பாக, கோபம், சோகம், மன அழுத்தம், கவலை போன்ற எதிர்மறை உணர்வுகளில், அதிகமாக உணர்ந்தீர்கள்?”
 
இதில் ஆண்களைவிட பெண்கள் இதை அடிக்கடி உணர்கிறார்கள்.
 
 
பிபிசியின் பகுப்பாய்வு மூலம், 2012 முதல் இரு பாலர்களும் சீராக சோகம், கவலை போன்ற உணர்ச்சிகளை உணர்வது சீராக அதிகரித்திருந்தாலும், ஆண்களைவிட அதிகமான பெண்கள் சோகத்தையும் கவலையையும் உணர்கிறார்கள்.
 
கோபம், மன அழுத்தம் என்று வரும்போது, ஆண்களுடனான இடைவெளி அதிகரித்து வருகிறது. 2012ஆம் ஆண்டில் இருபாலர்களும் ஒரே அளவில் கோபத்தையும் மன அழுத்தத்தையும் வெளிப்படுத்தினர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பெண்கள் ஆறு சதவீத வித்தியாசத்தில், ஆண்களை விடக் கோபமாக இருக்கிறார்கள், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதிலும் தொற்றுநோய்ப் பேரிடர் காலத்தில் இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தது.
 
இது அமெரிக்காவில் தெரபிஸ்டாக இருக்கும் சாரா ஹார்மனை ஆச்சர்யப்படுத்தவில்லை. 2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவர் தன்னிடம் ஆலோசனைக்கு வரும் பெண்கள் அடங்கிய ஒரு குழுவை வெளியே ஓரிடத்தில் நின்று, வாய்விட்டு சத்தம் போட வைத்தார்.
 
“நான் வீட்டிலிருந்தபடி வேலை செய்து கொண்டிருந்தேன். இரண்டு இளம் குழந்தைகளுக்குத் தாய். இந்தத் தீவிரமான விரக்தி தான் முழுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது,” என்று அவர் கூறுகிறார்.
 
ஓராண்டு கழித்து மீண்டும் முன்பைப் போலவே மீண்டும் களமிறங்கினார்.
 
“அதுதான் வைரலானது,” என்று அவர் கூறுகிறார். இது அவருடைய ஆன்லைன் அம்மாக்கள் குழுவிலுள்ள ஒரு செய்தியாளரால் எடுக்கப்பட்டது. திடீரென உலகம் முழுவதுமிருந்து செய்தியாளர்கள் அழைத்தனர்.
 
தொற்றுநோய்ப் பேரிடரின் சுமை அவர்கள் மீது விழுவதாக ஏற்பட்ட தீவிர விரக்தியைப் போன்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்கள் உணரக்கூடிய ஒரு விஷயத்திலேயே தான் கை வைத்துள்ளதாக சாரா நம்புகிறார்.
 
2020ஆம் ஆண்டு, நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள எதிர்பாலின உறவுகளிலுள்ள கிட்டத்தட்ட 5,000 பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில், தாய்மார்கள் ஊரடங்கு காலத்தில் தந்தையைவிட அதிகமான வீட்டுப் பொறுப்புகளை மேற்கொள்வதைக் கண்டறிந்தனர்.
 
இதனால், அவர்கள் தங்கள் பணி நேரத்தைக் குறைத்துக் கொண்டனர். குடும்பத்தில் அதிக வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தபோதும் இப்படித்தான் இருந்தது.
 
சில நாடுகளில், கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நாளுக்கு முந்தைய நாளில் கோபத்தை உணர்ந்ததாகக் கூறும் பெண்கள் மற்றும் ஆண்களின் எண்ணிக்கையில் உள்ள வேறுபாடு உலக சாராசரியைவிட அதிகமாக உள்ளது.
 
பெண்கள் முன்னேற்றம் காண்கின்றனரா?
 
பிபிசி 100 பெண்களின் 10வது ஆண்டை ஒட்டி, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையோடு இப்போதைய நிலையை ஒப்பிட்டுச் சொல்லுமாறு 15 நாடுகளைச் சேர்ந்த பெண்களிடம் கேட்கச் சொல்லி சவந்தா காம்ரெஸ்ஸிடம் பிபிசி கூறியது.
 
ஒவ்வொரு நாட்டிலும் கணக்கெடுப்பட்ட பெண்களில் குறைந்தது பாதி பேர், தங்கள் சொந்த நிதிசார்ந்த முடிவுகளை 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது எடுக்க முடிவதாகக் கூறுகிறார்கள்.
 
அமெரிக்கா, பாகிஸ்தான் தவிர ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது பாதிப் பேர் தனது துணையுடன் தனது சம்மதம் குறித்து விவாதிப்பது பெண்களுக்கு எளிதாக இருப்பதாகக் கருதுகிறார்கள்.
 
பெரும்பாலான நாடுகளில், கணக்கெடுப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், சமூக ஊடகங்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினர். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இந்த அளவு 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.
 
12 நாடுகளில் 40% அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் குறித்த விஷயத்தில் தான் கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் வாழ்க்கை மிகவும் முன்னேறியுள்ளது எனக் கூறுகிறார்கள்.
 
அமெரிக்காவில் கணக்கெடுப்பட்டவர்களில் 46% பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மருத்துவரீதியாகப் பாதுகாப்பான கருக்கலைப்பை அணுகுவது பெண்களுக்குக் கடினமாக இருப்பதாகக் கருதுகின்றனர்.
 
மனநல மருத்துவர் லக்ஷ்மி விஜயகுமார், இந்த நாடுகளில் அதிகமான பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும் வேலையிலும் பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமாகிவிட்டதால் ஏற்பட்ட பதற்றங்களின் விளைவு இது என்று நம்புகிறார்.
 
“அதேநேரத்தில் அவை பழைமையான, ஆணாதிக்க அமைப்புகள், கலாசாரத்தால் இணைக்கப்பட்டன. வீட்டில்  ஓர் ஆணாதிக்க அமைப்புக்கும் வீட்டிற்கு வெளியே ஒரு விடுதலை பெற்ற பெண்ணுக்கும் இடையிலுள்ள முரண்பாடு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறுகிறார்.
 
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் சென்னையில் அவர் இதைக் காண்கிறார்.
 
பெண் கோபம்
“ஆண்கள் சாவகாசமாகச் சென்று ஓய்வெடுப்பதையும் தேநீர் கடைகளுக்குச் செல்வதையும் புகை பிடிப்பதையும் பார்ப்பீர்கள். ஆனால், மறுபுறம் பெண்கள் பேருந்து அல்லது ரயில் நிலையத்திற்கு விரைந்து செல்வதைக் காண்பீர்கள். வீடு திரும்பியவுடன் என்ன சமைக்கலாம் என்று அவர்கள் சிந்திக்கிறார்கள்.”
 
கடந்த காலத்தில், பெண்கள் கோபமாக இருப்பதாகச் சொல்வது பொருத்தமானதாகக் கருதப்படவில்லை. ஆனால் அது மாறி வருவதாகக் அவர் கூறுகிறார். மேலும், “இப்போது அவர்களுடைய உணர்ச்சிகளைக் கொஞ்சம் அதிகமாக வெளிப்படுத்த முடிகீறது. அதனால் கோபமும் அதிகமாக உள்ளது,” என்கிறார் அவர்.
 
பெண்களின் வேலையில் பெருந்தொற்று பேரிடரின் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஐநா பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் தரவு ஆய்வாளர் ஜினெட் அஸ்கோனாவின் கூற்றுப்படி, 2020க்கு முன்பு பெண்கள் பொதுவெளி வேலைத்திறனில் பங்கெடுக்கும் முன்னேற்றம் மெதுவாக நடந்தது. ஆனால், 2020ஆம் ஆண்டில் அது நின்று போனது. இந்த ஆண்டு 169 நாடுகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு இருந்த எண்ணிக்கைக்குக் கீழே இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.
 
“நம்மிடம் பாலினத்தை பிளவுபடுத்தும் வகையிலான தொழிலாளர் சந்தை உள்ளது,” என்று அமெரிக்காவை சேர்ந்த பெண்ணிய எழுத்தாளர் சோரயா செமலி கூறுகிறார். அவர் கோபத்தைப் பற்றி 2019ஆம் ஆண்டில் ரேஜ் பிகம்ஸ் ஹெர் என்ற நூலை எழுதியுள்ளார்.
 
பராமரிப்பு போன்ற பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் தொற்றுநோய்ப் பேரிடரால் வீழ்ச்சி ஏற்படுவதாகக் கருதுகிறார்.
 
“இது மிகக் குறைந்த ஊதியம் தரப்படும் வேலை. இந்த மக்களிடையே அடக்கி வைக்கப்பட்ட, திசைதிருப்பப்பட்ட அதிகளவு கோபத்தைக் கொண்டுள்ளனர். மேலும் எந்தவிதமான சட்டபூர்வ எல்லைகளுமின்றி அயராது உழைக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுவதோடு இது அதிகத் தொடர்பு கொண்டுள்ளது.
 
இதேபோன்ற இயக்கவியல் பெரும்பாலும் எதிர்பாலின திருமண உறவுகளில் காணப்படுவதாக அவர் கூறுகிறார்.
 
அமெரிக்காவில், பெண்கள் மீதான தொற்றுநோய்ப் பேரிடரின் சுமை குறித்து அதிகம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், கேல்லப் வேர்ல்டின் கருத்துக் கணிப்பு முடிவுகள் அங்குள்ள பெண்கள் ஆண்களைவிடக் கோபமாக இருப்பது குறிப்பிடப்படுவதில்லை.
 
“அமெரிக்காவிலுள்ள பெண்கள் கோபத்தை மிகவும் அவமானமாக உணர்கிறார்கள்,” என்று சோரயா செமலி கூறுகிறார். மேலும், அவர்களுடைய கோபத்தை மன அழுத்தம் அல்லது கவலை எனப் பதிவு செய்ய அதிக வாய்ப்புள்ளது.
 
குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க பெண்கள் ஆண்களைவிட அதிகளவு மன அழுத்தம், கவலை எனப் பதிவு செய்துள்ளனர்.
 
மற்ற இடங்களிலும் அதுதான் உண்மை. ஆண்களைவிட அதிகமான பெண்கள் பிரேசில், உருகுவே, பெரு, சிப்ரஸ், கிரேக்கம் ஆகிய நாடுகளில் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கூறினர். பிரேசிலில் 10 ஆண்களில் நான்கு பேர் நாளின் பெரும்பகுதியில் மன அழுத்தத்தை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். அவர்களோடு ஒப்பிடுகையில் 10 பேரில் 6 பேர் அதைத் தெரிவித்தனர்.
 
பொலிவியா, பெரு, எக்வடோர் ஆகிய நாடுகளும் பாலினங்களுக்கு இடையே பெரிய வேறுபாட்டைக் கொண்டுள்ளன.
 
பொலிவியா, எக்வடோரில் ஏறக்குறைய பாதி பெண்கள் முந்தைய நாளின் பெரும்பகுதியில் வருத்தத்தோடு இருந்ததாகக் கூறியுள்ளன. இது ஆண்களைவிட 15 சதவீதம் அதிகம்.
 
ஆண்களைவிட பெண்கள் எதிர்மறை உணர்ச்சிகளை அதிகமாக உணரும் போக்கு இந்த நாடுகளில் 2012 வரை செல்கிறது. மேலும் பல நாடுகளில் இது மோசமாகி வருகிறது.
 
ஆனால், அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ள பல பெண்கள் “இனி பொறுக்க முடியாது” என்ற நிலைக்கு இப்போது வந்துள்ளனர் என்று தஹ்ஷா ரெனி கருதுகிறார்.
 
“ஒருவிதத்தில் அது மாற்றத்தை எளிதாக்குகிறது. அவர்கள் அதற்குத் தங்கள் கோபத்தைப் பயன்படுத்துகிறார்,” எனக் கூறுகிறார்.
 
“உங்களுக்கு ஆத்திரமும் கோபமும் தேவை. சில நேரங்களில் நிலையைச் சமாளிக்க, மக்கள் நீங்கள் சொல்வதைக் கவனிக்க வைக்க, இவை உங்களுக்குத் தேவை” என்று ஐ.நா பெண்கள் பாதுகாப்பு அமைப்பில் ஜினெட் அஸ்கோனா ஒப்புக் கொள்கிறார்.
 
தரவு செய்திப்பிரிவு: லியானா பிராவோ, கிறிஸ்டின் ஜீவன்ஸ், ஹெலினா ரோசிக்கா
 
வலேரியா பெராசோ, ஜார்ஜினா பியர்ஸ் ஆகியோர் இதில் கூடுதல் செய்தியளித்துள்ளனர்.
 
கேல்லப் ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 120,000 பேரிடையே ஆய்வு செய்கிறது. இது உலகின் வயது வந்தோரில் 98 சதவீதத்திற்கும் அதிகமான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய பிரதிநிதித்துவ மாதிரிகளைப் பயன்படுத்துகிறது. நேர்காணல்கள் நேருக்கு நேர் அல்லது தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்படுகின்றனர். இதில் கிடைக்கும் கண்டுபிடிப்புகளிலுள்ள பிசிறுகள், நாடு மற்றும் கேள்விக்கு ஏற்ப மாறுபடும். மாதிரி அளவுகள் சிறியதாக இருக்கும்போது, சான்றாக, பதில்களின் தொகுப்பைப் பாலினரீதியாகப் பிரிக்கும்போது, பிசிறு அதிகமாக இருக்கும். 2021 கேல்லப் கருத்துக்கணிப்பிற்கான முழு தரவு அட்டவணைகளை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.
 
சவந்தா காம்ரெஸ், எகிப்து (1,067), கென்யா (1,022), நைஜீரியா(1,018), மெக்சிகோ (1,109), அமெரிக்கா (1,042), பிரேசில் (1,008), சீனா (1,025), இந்தியா (1,107) இந்தோனீசியா (1,061), பாகிஸ்தான் (1,006), சவுதி அரேபியா (1,012), ரஷ்யா (1,010), துருக்கி (1,160), பிரிட்டன் (1,067), யுக்ரேன் (1,009) ஆகிய நாடுகளில் 17 அக்டோபர் முதல் 16 நவம்பர் வரை 18 வயதுக்கு மேற்பட்ட 15,723 பெண்களை இணையவழியில் ஆய்வு செய்தது.
 
வயது மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்களை முன்னிறுத்தும் வகையில் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு நாட்டின் முடிவுகளுக்குமான பிழை விளிம்பு, +/- 3. முழு தரவு அட்டவணைகளையும் இங்கே காணலாம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின் இணைப்புகள் இல்லாமல் கொடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்?