காலைசிற்றுண்டியை மாணவர்களுக்கு வழங்க தாமதம் செய்த திருஇந்தளூர் நகராட்சித் துவக்கப்பள்ளி தலைமையாசிரியை குருபிரபாவை மாவட்ட ஆட்சித்தலைவர் லலிதா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நேற்று அரசு தொடக்கப் பள்ளிகளில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்.
இத்திட்டம் முதற்கட்டமாக, சென்னையில் 36, திருச்சியில் 40, காஞ்சிபுரத்தில் 20, கடலூரில் 15, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 21, வேலூரில் 48, தூத்துக்குடியில் 8, மதுரையில் 26, சேலத்தில் 54, திண்டுக்கலில் 14, திருநெல்வேலியில் 22, ஈரோட்டில் 26, கன்னியாகுமரியில் 19, கோயம்புத்தூரில் 62 பள்ளிகளிளும் காலை சிற்றுண்டி திட்டம் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருஇந்தளூரில் உள்ள நகராட்சிப் பள்ளிகளில் தொடக்க விழாவில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தைத் தாண்டி மாணவர்களுக்கு தாமதமாக உணவு வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அரசுக்கு அவப்பெயர் ஏற்படக் காரணமாக இருந்த திருஇந்தளூர் நகராட்சித் துவக்கப்பள்ளிதலைமையாசிரியை குருபிரபாவை மாவட்ட ஆட்சித்தலைவர் லலிதா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.