Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செளதியில் மாற்றத்தை வலியுறுத்திய பெண் செயல்பாட்டாளருக்கு சிறை தண்டனை

Advertiesment
செளதியில் மாற்றத்தை வலியுறுத்திய பெண் செயல்பாட்டாளருக்கு சிறை தண்டனை
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (23:09 IST)
செளதி அரேபியாவில் மாற்றத்தை வலியுறுத்தி குரல் கொடுத்து வந்த பெண் செயல்பாட்டாளர் லுஜேன் அல் ஹத்லூலுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனையை அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விதித்திருக்கிறது.
 
அதே சமயம், தனது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய நீதிமன்றம், அவருக்கான தண்டனையை இரண்டு ஆண்டுகள் பத்து மாதங்களுக்கு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
 
அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நடவடிக்கை, ஆழமான சங்கடத்தை தருவதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கெனவே இந்த பெண் செயல்பாட்டாளர் தடுப்புக்காவல் என்ற பெயரில் இரண்டரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார். இந்த தருணத்தில் துணிவுடன் அவர் இருக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
செளதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் உரிமைக்கான கோரிக்கையை எழுப்பிய அந்நாட்டின் பிரபல செயல்பாட்டாளர்களில் குறிப்பிடத்தக்கவர் லுஜேன் அல் ஹத்லூல்.
 
31 வயதான ஹாத்லூல், 2018 ஆம் ஆண்டில், அரசுக்கு எதிரான அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது விடுதலையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.
 
இந்த நிலையில்தான் பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட செளதி அரேபியா சிறப்பு குற்றவியல் நீதிமன்றம், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுவது உள்ளிட்ட ஹத்லூல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதாகக் கூறி அவருக்கு தண்டனை விதித்து திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.
 
இதேவேளை, ஹத்லூல் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளனர். சிறையில் ஹத்லூல் சித்ரவதை செய்யப்பட்டதாக அவர்கள் முறையிட்டனர். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
 
செளதியில் பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமையைப் பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், 2018 ஆம் ஆண்டில் ஹத்லூல் கைது செய்யப்பட்டார். ஆனால், அதற்கும் ஹத்லூல் தடுத்து வைக்கப்பட்ட வழக்குக்கும் தொடர்பில்லை என்று செளதி அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
 
தனிமை பாதுகாப்பில் ஹாத்லூல்
 
காவலில் எடுக்கப்பட்ட முதல் மூன்று மாதங்கள் வரை அவரை யாருடனும் பேச அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று ஹத்லூலின் குடும்பத்தினர் கூறுகின்றனர். அவரும் அவருடன் அடைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளும் சிறையில் மின்சாரம் செலுத்தி துன்புறுத்தப்பட்டதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவும் நடக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தால் விடுதலை கிடைக்கும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக ஹத்லூலின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.
 
இந்த விவகாரத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்களிடம் நடத்தப்படும் விசாரணை நடவடிக்கை, சர்வதேச தரத்தின்படி நடக்கவில்லை என்று மனித உரிமை நிபுணர்கள் குற்றம்சாட்டினர்.
 
செளதியின் இந்த நடவடிக்கைகளுக்கு அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கடந்த நவம்பர் மாதம் கண்டனம் தெரிவித்தது.
 
செளதி அதிகாரிகளின் மிருகத்தனத்தையும் பாசாங்குத்தனத்தையும் அவர்களின் செயல்பாடுகள் பிரதிபலிக்கிறது என்று அந்த அமைப்பு தெரிவித்தது.
 
இந்த வழக்கு செளதி பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் ஒரு சாரார் கருதுகிறார்கள். அதே காலகட்டத்தில்தான் அவர் உத்தேசித்த செளதியின் புதிய சீர்திருத்தங்களின் கீழ் 2018ஆம் ஆண்டில், பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்டனர்.
 
ஆனால், அந்த நடவடிக்கைக்காக அவருக்கு உள்நாட்டில் ஆதரவு பெருகி வந்த வேளையில், துருக்கியின் இஸ்தான்புல்லில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட சம்பவத்தில் செளதி பட்டத்து இளவரசருக்கு தொடர்பு இருப்பதாக வெளிவந்த விமர்சனங்கள், செளதி ஆட்சியாளர்களுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்தது.
 
யார் இந்த லுஜேன் அல் ஹத்லூல்?
 
செளதி அரேபிய சமூக சேவகர் லுஜேன் அல் ஹத்லூல், கட்டுப்பாடுகளை மீறி காரை ஓட்டியதற்காக செளதி அரேபிய காவல்துறையினரால் 2014ஆம் ஆண்டு, டிசம்பர் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
 
லுஜேன் கார் ஓட்டிக் கொண்டு நாட்டின் எல்லைக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி முகமை செய்தி வெளியிட்டது.
 
அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்திரிகையாளர் மைசா அல் அமூதி, ஹத்லூலுக்கு ஆதரவாக எல்லைக்கு வந்து போராடியபோது அவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
அந்த நேரத்தில், பயங்கரவாத வழக்குகளை கையாளும் ரியாத் நீதிமன்றத்தில் இந்த இரு பெண்கள் மீதும் வழக்கு தொடர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து மனித உரிமை அமைப்புகள் செளதி அரேபியாவை கடுமையாக விமர்சித்தன.
 
இறுதியில், 73 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, லுஜேன் விடுவிக்கப்பட்டார், ஆனால் அதற்குள் பெண்கள் உரிமைகள் தொடர்பான விஷயம் ஒரு பிரசாரமாக மாறியது. அந்த வகையில் செளதியில் பெண்கள் உரிமைகள் தொடர்பான சீர்திருத்த மாற்றங்கள் தொடங்குவதற்கான முன்னோடிகளில் ஒருவராக லூஜேன் கருதப்படுகிறார்.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு யூட்யூப் சேனல் மூலம் பிரபலமான ஃபஹத் அல் பூஷியாரி என்பவரை அல் ஹத்லூல் திருமணம் செய்து கொண்டார். 2018ஆம் ஆண்டில் அவர் ஜோர்டானில் கைது செய்யப்பட்டு செளதிக்கு நாடு கடத்தப்பட்டார். பிறகு அவரை விடுதலை செய்ய வேண்டுமானால், ஹத்லூலை அவர் விவாகரத்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் அவரை கட்டாயப்படுத்தியதாக ஒரு தகவல் உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டு குறித்து பூஷியாரியின் கருத்தை பெற முடியவில்லை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பம்பர் மாட்டியிருந்ததால் அபராதம்-வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அதிரடி