Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை முல்லைத்தீவு: கட்டடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்

இலங்கை முல்லைத்தீவு: கட்டடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்
, புதன், 12 பிப்ரவரி 2020 (22:07 IST)
முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எச்சங்கள் (எலும்புகள்) சில இன்று, புதன்கிழமை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முல்லைத்தீவு பகுதியிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த பகுதியில் நாளைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். அது நிறைவடைந்த பின்னரே அங்குள்ள மனித எச்சங்களின் முழுமையான எண்ணிக்கை தெரியவரும்.
 
மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டடமொன்று கட்டுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
கட்டடம் கட்டும் பணிகள் இடம்பெற்றுவரும் பகுதியில் கண்ணிவெடிகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் மாங்குளம் போலீஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாங்குளம் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதிக்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார், குறித்த பகுதியை பார்வையிட்டார்.
 
இப்பகுதியை மேலும் அகழ்ந்து, விடயங்களை ஆராயுமாறு அவர் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அத்துடன், குறித்த பகுதி தொடர்பிலான வரலாற்று ஆய்வுகளையும் மேற்கொள்ளுமாறு லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியில் பெண்களின் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, விடயங்களை ஆராய்ந்ததன் பின்னரே மனித எச்சங்கள் எந்த காலப் பகுதிக்கு சொந்தமானவை என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
இதற்கமைய, நாளைய தினம் முதல் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
 
மன்னார் மனித எச்சங்கள் வைத்த அறை உடைப்பு
 
இந்நிலையில் மன்னார் மனித எச்சங்கள் தொடர்பிலான தற்போதைய நிலைமை குறித்து பிபிசி தமிழ் விடயங்களை ஆராய்ந்தது.
 
மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 342 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
இந்த மனித எச்சங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள மன்னார் நீதிமன்ற வளாகத்திலுள்ள அறையின் பூட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
இந்த சம்பவம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விடயங்கள் குறித்து விசாரணைகளை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்கள் மற்றும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளமை குறித்து போலீசார் விசாரணைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தினால் நடத்தப்பட்ட கார்பன் டேட்டிங் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
 
இந்த அறிக்கை கடந்த வருடம் மார்ச் மாதம் 9ஆம் தேதி வெளியாகியிருந்தது.
 
அதன்படி, இந்த மனித எச்சங்கள் கி.பி 1477 - 1642 காலப் பகுதிக்கு உரியது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீனமாக செயல்பட்டால்... 5 ஆண்டுகள் தேர்வு எழுத தடை !