Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் பாம்பை விட்டு மனைவியை கொன்றவர் சிக்கியது எப்படி?

webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (15:20 IST)
கடந்த வாரம் கேளராவை சேர்ந்த ஒருவருக்கு மனைவியை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்த குற்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. பிபிசி செய்தியாளர்கள் செளதிக் பிஸ்வாஸ் மற்றும் அஷ்ரஃப் படானா இந்த கொடூர கொலை எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதை விளக்குகின்றனர்.
 
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 28 வயது சூரஜ் குமார் உலகின் ஆபத்தான விஷப் பாம்பான நல்ல பாம்பை 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். இந்தியாவில் பாம்பை விற்பது சட்டவிரோதம். எனவே யாருக்கும் தெரியாமல் பாம்பை விலைக் கொடுத்து வாங்கினார் சூரஜ் குமார்.
 
ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் காற்று போவதற்காக ஓட்டை போட்டு அதில் பாம்பை வைத்து வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார் சூரஜ்.
webdunia
13 நாட்கள் கழித்து அந்த டப்பவை ஒரு பையில் போட்டுக் கொண்டு 44 கிமீட்டர் தொலைவில் உள்ள தனது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரின் மனைவி உத்ரா ஏற்கனவே மர்மமான பாம்பு கடி ஒன்றிலிருந்து குணமடைந்து வந்தார்.
 
சூரஜ் மற்றும் உத்ரா இரு வருடங்களுக்கு முன் கல்யாண தரகர் மூலம் சந்தித்துள்ளனர். சூரஜின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவரின் தாய் இல்லத்தரசி. சூரஜை காட்டிலும் உத்ரா மூன்று வயது இளையவர். உத்ரா கற்றல் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர். அவரின் குடும்பம் பணக்கார குடும்பம். அவரின் தந்தை ரப்பர் வியாபாரி. தாய் ஓய்வுப் பெற்ற பள்ளி முதல்வர்.
 
சூரஜ் உத்ராவை திருமணம் செய்து கொண்டபோது உத்ரா வீட்டாரிடமிருந்து 768 கிராம் தங்கத்தை (கிட்டதட்ட 96 சவரன்) வரதட்சணையாக பெற்றார். மேலும் சுசுகி செடான் கார் மற்றும் 4 லட்சம் பணத்தையும் பெற்றார். அது மட்டுமல்லாமல் தங்களது மகளை பார்த்து கொள்ள உத்ராவின் பெற்றோர் சூரஜுக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் வழங்கி வந்த்தாக கூறப்படுகிறது.
webdunia
பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று தனது தாயாரின் வீட்டிற்கு திரும்பியிருந்தார் உத்ரா. மருத்துவமனையில் 52 நாட்களை கழித்தார் உத்ரா. அதுமட்டுமல்லாமால் அவரின் அடிப்பட்ட காலை குணமாக்க மூன்று வலிமிகுந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியாவின் மிக ஆபத்தான பாம்புகளில் ஒன்றான கண்ணாடி விரியன் பாம்பு உத்ராவை கடித்தது. இந்தியாவில் ஆண்டுதோறும் பலர் இந்த பாம்பு கடித்து உயிரிழக்கின்றனர்.
 
அதன்பின் மே 6ஆம் தேதி இரவு, உத்ராவிற்கு மயக்க மருந்து கலந்த பழச்சாற்றை கொடுத்துள்ளார் சூரஜ். உத்ரா மயக்கமடைந்த பிறகு பாம்பை வைத்திருந்த அந்த பிளாஸ்டிக் டப்பாவை திறந்து ஐந்தடி நீளம் கொண்ட பாம்பை தூங்கும் தனது மனைவியின் மீது ஏவி விட்டுள்ளார் சூரஜ்.
 
ஆனால் உத்ராவை கடிப்பதற்கு பதிலாக நெளிந்து சென்றுவிட்டது அந்த நாக பாம்பு. மீண்டும் அதைப் பிடித்து உத்ராவின் மீது விட்டுள்ளார் சூரஜ் ஆனால் பாம்பு மீண்டும் நெளிந்து சென்றுவிட்டது.
webdunia
சூரஜ் மூன்றாம் முறை முயற்சி செய்தார். பாம்பை தலை பகுதியில் பிடித்து உத்ராவின் இடது கையின் பக்கம் எடுத்து சென்றார். அப்போது கோபமடைந்த அந்த நாகம் உத்ராவை இரு முறை கடித்துவிட்டது. அதன் பின் அந்த அறையில் உள்ள அலமாரிக்குள் மறைந்து இரவு முழுக்க அங்கேயே இருந்தது.
 
"நாகபாம்புகள் பொதுவாக நீங்கள் அவற்றை தொந்தரவு செய்யாதவரை உங்களை கடிக்காது. சூரஜ் அதை தலைப்பகுதியில் பிடித்து தனது மனைவியை கடிக்குமாறு தூண்டியுள்ளார்." என ஊர்வனவற்றின் நிபுணர் மாவிஷ் குமார் தெரிவிக்கிறார்.
 
சூரஜ் அந்த ஜூஸ் கிளாஸை கழுவி வைத்தார். பாம்பை பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கம்பை அழித்துவிட்டார். அதேபோன்று தனது மொபைலில் இதுதொடர்பாக பேசிய அழைப்புகளை அழித்துவிட்டார் என இந்த வழக்கை விசாரித்த விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்
 
உத்ராவின் தாய் அடுத்த நாள் காலை உத்ராவை வந்து பார்த்தபோது உத்ரா வாயை திறந்து ஒரு கையை தொங்கவிட்டு படுக்கையில் இருப்பதை பார்த்தாக காவல்துறையினரிடம் தெரிவித்தார். அங்கு சூரஜும் இருந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
"அவள் விழித்திருக்கிறாளா என்று நீங்கள் பார்க்க வேண்டியதுதானே " என சூரஜிடம் மணிமேகலா விஜயன் தெரிவித்துள்ளார்.
 
"நான் அவளை தூக்கத்திலிருந்து எழுப்ப விரும்பவில்லை" என சூரஜ் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் உத்ராவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு விஷத்தால் பாதிக்கப்பட்டு உத்ரா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து பின் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
உத்ராவின் முன்னங்கையில் ஒரு இன்சுக்கு குறைவாக இரு ஜோடி காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ரத்தம் உள் உறுப்புகளை சோதித்ததில் அதில் நாகப் பாம்பின் நஞ்ச மற்றும் மயக்க மருந்து இருப்பது தெரியவந்தது. நாக பாம்பின் நஞ்சு மூச்சு விடுவதற்கான தசைகளை செயலிழக்க வைத்து ஒரு மணி நேரத்தில் ஆளை கொன்றுவிடும்.
 
உத்ராவின் பெற்றோர் அளித்த புகாரின்படி தனது மனைவின் வழக்கத்திற்கு மாறான மரணத்தில் தொடர்புடையதாக சூரஜ் 24ஆம் தேதி மே மாதம் கைது செய்யப்பட்டார். 78 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 1000 பக்கத்திற்கு குற்றப் பத்திரிகை உருவானது. விசாரணை தொடங்கியது.
 
மருத்துவர்கள் மற்றும் ஊர்வன நிபுணர்கள் உட்பட 90க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். சூரஜின் அலைப்பேசி அழைப்புகள், இணைய தேடல் வரலாறு, பின்புற தோட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட உயிரற்ற நாகபாம்பு, குடும்ப காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மயக்க மருந்துகள், சூரஜ் ஒன்றல்ல இரு பாம்புகளை வாங்கியதற்கான ஆதாரங்கள் ஆகியவை மூலம் வழக்கு விரிவடைந்தது. இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு உத்ராவை கடித்த கண்ணாடி விரியன் பாம்பையும் சூரஜ் வாங்கியுள்ளார் என இந்த வழக்கு விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
சுரேஷ் என்ற பாம்பு பிடிப்பவர், சூரஜிற்கு இரு பாம்புகளை விற்றதாக ஒப்புக் கொண்டார். ஊர்வன நிபுணர், அந்த தம்பதியினரின் அறைக்குள் திறந்திருந்த ஜன்னலின் வழியாக அந்த நாக பாம்பு சென்றிருக்க சாத்தியமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஒரு உயிருள்ள நாகபாம்பை கொண்டு சம்பவம் நடைபெற்ற தருணம் மீண்டும் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பொம்பையை படுக்கையில் படுக்க வைத்திருந்தனர். "பொதுவாக நாக பாம்புகள் இரவில் சுறுசுறுப்பாக இயங்காது. அந்த பாம்பை அந்த பொம்மையில் மீது விட்டபோது அங்கிருந்து அகன்று சென்று அறையின் இருட்டான ஓரத்தில் ஒளிந்து கொண்டது. நாங்கள் அந்த நாக பாம்பை தூண்டினோம். ஆனால் அது கடிக்க முயற்சிக்கவில்லை," என்கிறார் மாவிஷ் குமார்.
 
அதன்பின் அவர் அந்த நாக பாம்பின் கழுத்தை பிடித்து, பிளாஸ்டிக் பொம்மையின் கையில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிக்கன் துண்டில் கடிப்பதற்கு தூண்டினார். அந்த சமயம் அது உத்ராவின் கையில் இருந்த இடைவெளியை போல கடித்திருந்தது
 
உத்ரா மோசமாக, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி மனோஜ் தெரிவித்தார். நீதிபதி மனோஜ் சூரஜிற்கு இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கி, உத்தாராவை சூரஜ் கொல்ல திட்டமிட்டு அதை எதிர்ச்சையாக பாம்பு கடியாக ஏற்பட்ட மரணம் என்பது போல நாடகமாட திட்டமிட்டிருந்தார் என்று தெரிவிக்கிறார்.
 
அதேபோன்று அந்த நாக பாம்பை ஏவிவிட்டது, நான்கு மாதத்தில் உத்ராவை கொல்ல எடுக்கப்பட்ட மூன்றாவது முயற்சி என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
 
உள்ளூர் வங்கி ஒன்றில் பணத்தை வசூலிக்கும் முகவராக சூரஜ் பணிபுரிகிறார். அவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பாம்பு பிடிக்கும் சுரேஷை சந்தித்தார். அவரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு கண்ணாடி விரியன் பாம்பை வாங்கினார். அதை பிளாஸ்டிக் டப்பாவில் வீட்டுக்கு எடுத்து சென்று கட்டைகளுக்கு மத்தியில் மறைத்து வைத்தார்.
 
அதன்பிறகு பிப்ரவரி 27ஆம் தேதி, சூரஜ் அந்த பாம்பை தனது வீட்டின் முதல் தளத்தில் விட்டுள்ளார் என விசாரணையாளர்கள் தெரிவித்தனர். மேலும் தனது மனைவியை அலைப்பேசியை எடுத்து கொண்டு மாடிக்கு செல்ல சொன்னார். அதன்பின் தரையில் கண்ணாடி விரியன் இருப்பதை பார்த்த சத்தம் போட்டுள்ளார்.என்று உத்ராவின் தாயார் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அங்கு வந்த சூரஜ் குச்சியால் பாம்பை எடுத்து மீண்டும் டப்பாவிற்குள் போட்டார் சூரஜ். பின் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.
 
மே 2ஆம் தேதி மீண்டும் உத்ராவை கொலை செய்ய முயற்சித்தார் சூரஜ். உத்ராவின் உணவில் மயக்க மருந்தை கலந்துவிட்டு அவர் உறங்கும் படுக்கை அறையில் கண்ணாடி விரியனை விட்டுவிட்டார்.
 
இந்த முறை பாம்பு உத்ராவை கடித்துவிட்டது என்கின்றனர் காவல்துறையினர். உத்ரா வலியில் துடித்தவாரு தூக்கத்திலிருந்து எழுந்தார். அவர் காலில் பாம்பு கடித்திருந்தது. சூரஜ் பாம்பை ஜன்னல் வழியாக தூக்கி வீசிவிட்டார்.
 
அந்த இரவு அவசர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை கண்டறிய இரண்டு மணி நேரம் ஆனது. உத்ராவிற்கு வீக்கமும் ரத்தப்போக்கும் ஏற்பட்டது.
 
அதன் பின் மூன்று தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. கொல்லத்தில் உள்ள தனது பெற்றோரின் இரண்டு மாடி வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தார் உத்ரா. சூரஜ் தனது மகன் மற்றும் பெற்றோருடன் பத்தனாம்திட்டையில் உள்ள வீட்டில் தங்கினார் சூராஜ். ஆனால் உத்ராவை கொல்வதற்கான திட்டத்தை தொடர்ந்து தீட்டி வந்தார். "உத்ரா மருத்துவமனையில் இருந்தபோது, சூரஜ் பாம்பை கையாள்வது எப்படி மற்றும் பாம்பு விஷம் குறித்து இணையத்தில் தேடி வந்துள்ளார்." என்கிறார் இந்த வழக்கு விசாரணையில் ஈடுப்பட்டிருந்தவர்களில் ஒருவரான அனுப் கிருஷ்ணா.
 
உத்ராவை கொலை செய்ய 2019ஆம் ஆண்டு தனது மகன் பிறந்ததிலிருந்து சூரஜ் திட்டமிட்டு வருகிறார் என விசாரணையில் தெரியவந்தது. இணையத்தில் விஷமுள்ள பாம்புகள் குறித்து பல்வேறு வீடியோக்களை யூட்யூபில் பார்த்துள்ளார் சூரஜ் அதில் உள்ளூரில் பாம்பு பிடிப்பவரின் யூட்யூட் வீடியோக்களும் அடங்கும். அதில் ஒரு விடியோதான் "ஆபத்தான ஆக்ரோஷமான கண்ணாடி விரியன்"
 
உத்ராவின் கனவில் நாகத்தால் வழங்கப்பட்ட சாபத்தால் அஞ்சி வருகிறார் என்றும அவர் பாம்புக் கடித்து இறந்துவிடுவார் என்றும் சூரஜ் தனது நண்பர்களிடம் கூறியதாக தெரிகிறது.
 
உத்ராவை கொலை செய்துவிட்டு, அவரின் பணத்தை திருடிவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் சூரஜின் திட்டம்.
 
"சூரஜ் கொலை செய்வதற்கு கவனமாக திட்டமிட்டு தனது மூன்றாவது முயற்சியில் வெற்றியடைந்துள்ளார்." என்று இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் குழுவின் தலைவர் அப்புகுட்டர் அஷோக் தெரிவித்துள்ளார்.
 
அரசு வழக்கறிஞர் மோகன்ராஜ் கோபால கிருஷ்ணன், "இந்தியாவில் `காவல்துறை விசாரணையில் இந்த வழக்கு ஒரு மைல்கல்` என தெரிவித்துள்ளார். ஒரு விலங்கு கொலைக்கான ஆயுதமாக மாறியுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது," என்றார். சூரஜிற்கு அரிதாக இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட்து ஆனால் தனது செய்கைக்கு சூரஜ் வருத்தம் தெரிவிக்கவில்லை என கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

இந்த வெப் சிரிஸை குழந்தைகளை பார்க்க விடாதீங்க! – பிரிட்டன் எச்சரிக்கை!