Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எச்.ஐ.வி தொற்று: கருவில் உள்ள சிசுவுக்கு தாய் மூலம் எச்ஐவி பரவுமா? - தமிழக எய்ட்ஸ் அமைப்பு தரும் விளக்கம் என்ன?

Advertiesment
எச்.ஐ.வி தொற்று: கருவில் உள்ள சிசுவுக்கு தாய் மூலம் எச்ஐவி பரவுமா? - தமிழக எய்ட்ஸ் அமைப்பு தரும் விளக்கம் என்ன?
, திங்கள், 2 நவம்பர் 2020 (15:48 IST)
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துவரும் இந்த நேரத்தில், உயிர்க்கொல்லி நோயான எச்ஐவி தொற்று பரவலும் குறைந்து வருவதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (நேக்கோ) தெரிவித்துள்ளது.

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய் மூலம் எச்ஐவி தொற்று பரவுவதை முழுமையாகத் தடுத்து விட்ட மாவட்டங்களாக தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள் மாறியுள்ளன என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒரு மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தொற்று இல்லை என உறுதியானால், அந்த மாவட்டம், தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படுவதை முழுமையாகத் தடுத்து விட்ட மாவட்டமாக கருதப்படும்.

அந்த வகையில் தமிழ்நாட்டின் நீலகிரி, தூத்துக்குடி, தேனி, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், பெரம்பலூர், நாகை, கன்னியாகுமாரி, திண்டுக்கல், சென்னை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிறக்கும் குழந்தைகள் மத்தியில் தொற்று பதிவாகவில்லை என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக, சுமார் 28,000க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. நோய்த் தொற்று உள்ள மாவட்டங்களில், கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்ததில், அவர்களின் கணவர்கள் மூலமாக அவர்களுக்கு தொற்று பரவியதாக தெளிவானது. அவர்களில் கணிசமானவர்கள் ஓட்டுநர்கள் மற்றும் ஹோட்டல் தொழிலாளிகளாக இருக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தேசிய அளவில் சராசரி எச்.ஐ.வி. தொற்று என்பது, 100 நபர்களில் 0.22 நபர்களுக்கு என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் அந்த தொற்றின் சராசரி என்பது 100 பேருக்கு 0.18 பேர் என்ற அளவில் உள்ளது. வேலூர் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில்தான் ஒரு சதவீதத்திற்கும் மேலாக எச்.ஐ.வி தொற்று தொடர்கிறது.

கிருஷ்ணகிரி, சிவகங்கை,கோவை, தர்மபுரி, திருப்பூர், புதுக்கோட்டை, மதுரை, கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொற்றின் அளவு, தேசிய சராசரியை விட குறைந்துள்ளதால், தொற்று பூஜ்ஜியம் அளவை எட்டும் நிலையில் அந்த மாவட்டங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, விருதுநகர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, திருவள்ளூர், சேலம், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று விகிதம் தேசிய சராசரியை விட குறைந்து, மிதமான பரவல் உள்ள மாவட்டங்களாக மாறியுள்ளன.

1986ல் இந்தியாவில் முதன்முதலாக எச்ஐவி தொற்று இருப்பது உறுதியானது. பாதிக்கப்பட்ட முதல் நபர் தமிழகத்தில் கண்டறியப்பட்டார். 1986ல் தொடங்கி தற்போதுவரை ஒவ்வொரு ஆண்டும் எச்.ஐ.வி பரவலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கொரோனா போலவே, இதுவரை தடுப்பு மருந்து இல்லாத வைரஸ் தொற்றாக எச்.ஐ.வி. தொற்று நீடித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 1.20 லட்சம் பேர் எச்ஐவிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்.

பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் இயக்குநர் தீபக் ஜேக்கப், கர்ப்பிணிகளிடம் இருந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பரவுவதை முழுமையாக தடுக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

''தமிழ்நாட்டில் 2002ல் கர்ப்பிணி பெண்கள் மத்தியில், 1.1சதவீதமாக இருந்த நோய்தொற்று 2019ல் 0.18சதவீதமாக குறைந்துள்ளது. தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுவதை முழு மூச்சில் குறைப்பதற்காக தனிக் குழுக்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களிடம் பேசியிருக்கிறோம். இந்த குழு உறுப்பினர்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து, தொற்று பரவல் குறைப்புக்கான வழிமுறைகள், சாதித்தவை என்ன என விரிவாக பேசுவார்கள். கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்தோம். கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த நிகழ்ச்சிகள் ராத்தாகியிருந்தன. விரைவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்,''என்றார் தீபக் ஜேக்கப்.

மேலும், "பஞ்ச் பாட்டி" என்ற பெயரில் எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தின் இணையத்தில் சாட்பாட் (chat bot) ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதில் பொது மக்கள் எச்ஐவி/எயிட்ஸ் குறித்த சந்தேகங்களை கேட்டறியலாம். எளிய மொழியில் கருத்துக்களை ஒரு பாட்டி சொல்வது போல இதை வடிவமைத்துள்ளோம் என்றார் ஜேக்கப்.

தொற்றைக் குறைத்த மாவட்டங்களில் ஒன்றான நீலகிரியைச் சேர்ந்த அதிகாரிகளிடம் பேசினோம். எச்ஐவி பரிசோதனை செய்து கொள்வதற்கு கர்ப்பிணிகளை ஊக்குவிக்க ஆலோசனை வழங்கும் கட்டம்தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் நீலகிரி மாவட்ட இயக்குநர் கோபாலகிருஷ்ணன்.

''முந்தைய காலங்களில் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்துகொள்ள வரும்போது, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தாய் அல்லது மாமியார் வருவர். தற்போது கணவருடன்தான் சோதனைக்கு பெண்கள் வருகிறார்கள். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆலோசனை வழங்கி, நோய் தொற்று இருந்தால், உடனடியாக குழந்தைக்கு தொற்று பரவுவதை தடுக்க மருந்துகளை கொடுக்கிறோம் என்பதால் தொற்று குறைந்துள்ளது,''என்றார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னரும், நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தாய்மார்களுக்கு மட்டுமே தொற்று இருந்ததாக தெரிவிக்கிறார் கோபாலகிருஷ்ணன்.

''பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு சென்றது ஒரு காரணி. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு சோதனை தவறாமல் செய்யப்படுகிறது. சோதனையின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், பாதிப்பை அறிந்து, முழுமையாக கட்டுப்படுத்த முடிந்தது,''என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’டென்மார்க் தொடருடன் ஓய்வு ’’!- பேட்மிண்டன் வீராங்கனை பி.வி..வி சிந்து அறிவிப்பு