தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்த உள்ள நிலையில், மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக ஏர் கலப்பை போராட்டம் நடத்தப்போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகின்றது. தமிழகத்தில் விவசாய மசோதாவை அதிமுக அரசு ஏற்க கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் விவசாய மசோதாவை எதிர்த்து ஏர் கலப்பை போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ”கடந்த காலங்களில் காந்தி கையில் இருந்த ராமர் அத்வானி கைக்கு மாறியதும் இந்தியா ரத்தக்களறியை சந்தித்தது. அதுபோல தற்போது கிருபானந்த வாரியார் கையில் இருந்த முருகனை பாஜகவினர் எடுத்து தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க முயல்கிறார்கள்.
சமீபத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளான் மசோதாவால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை போராட்டம் நடத்தப்படும். இதில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.