இலங்கையில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
17 மாவட்டங்களில் கடும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. இதன்படி, 60,264ற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2,12,060ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுக்கு மத்தியில், நான்கு சிறார்களும், மூன்று பெண்களும் அடங்குகின்றனர். நீரில் மூழ்கி 15 பேரும், மண்சரிவில் 8 பேரும், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 2 பேரும் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.
7 பேர் காயமடைந்து, ஆண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 76 இடைதங்கல் முகாம்களில் 12,476 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், 10,023 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 11 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
கண்டி, கேகாலை, குருநாகல், ஆகிய மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த மாவட்டங்கள் உள்ளடங்களாக ஏனைய 11 மாவட்டங்களுக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு திசையில் சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள தாழமுக்க நிலைமை, வலுவடைந்து பருத்தித்துறையை நோக்கி வடக்காக நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கடல் தொழிலாளர்களை மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.