Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவநிலை மாற்றத்தால் பேரழிவு தொடங்கி விட்டதா?- ஐரோப்பிய பேய்மழைக்கு என்ன காரணம்?

Webdunia
கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பெருமழை அதைத் தொடர்ந்த வெள்ளத்துக்கு பருவநிலை மாற்றமே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டு நகரங்கள் மற்றும் கிராமங்கள் மூழ்கியதால் குறைந்தது 220 பேர் கொல்லப்பட்டனர்.
 
உலக வெப்பமயமாதல் மேற்கு ஐரோப்பாவில் ஒன்பது மடங்கு அதிக மழைப்பொழிவுக்கு காரணமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
மனிதர்களால் தூண்டப்பட்ட வெப்பமயமாதலால் இப்பகுதியில் மழைப்பொழிவு வழக்கத்தைவிட 3 முதல் 19 சதவிகிதம் வரை அதிகமாக உள்ளது.
 
ஜூலை மத்தியில் ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட எதிர்பாராத கடுமையான வெள்ளம் வானிலை வானிலை ஆய்வாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
 
இந்த வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். வீடுகள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் போன்றவற்றை வெள்ள நீர் உருக்குலைத்து விட்டது.
 
பெரு வெள்ளத்துக்கு ஒன்றிரண்டு நாள்கள் தொடர்ச்சியாகப் பெய்த கனமழையே காரணம். அத்துடன் பெரிய கட்டுமானங்கள், நிலப்பகுதி மூடப்பட்டிருந்தது போன்றவற்றால் பாதிப்பு தீவிரமடைந்தது.
 
இது போன்ற நிகழ்வுகளின்போது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு, உலக வானிலை பண்புக் குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெள்ளத்துக்கு முந்தைய கனமழை குறித்து கவனம் செலுத்தினர்.
 
ஜெர்மனியில் அஹர் மற்றும் எர்ஃப்ட் ஆறுகள் மற்றும் பெல்ஜியத்தின் மியூஸ் பகுதியில் ஒரே நாளில் 90 மிமீ வரை மழை பெய்திருக்கிறது.
 
இந்த சிறிய பிராந்தியங்களில் மழை பெய்யும் போக்கு பற்றிய தகவல்கள் தெரியவந்திருந்தாலும், அதில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க இயலாது. ஏனெனில் உள்ளூரில் மழை பெய்யும் போக்கில் ஆண்டுதோறும் அதிக அளவு மாறுபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
 
பெருமழை மற்றும் வெள்ளம் ஏற்படுவதில் உயரும் வெப்பநிலையின் தாக்கம் என்ன என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வை கிழக்கு பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, கிழக்கு பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் வடக்கு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட மேற்கு ஐரோப்பாவின் ஒரு பரந்துபட்ட பகுதிக்கு விரிவுபடுத்த வேண்டியிருந்தது.
 
இந்த பரந்த பிராந்தியத்தில், மனிதர்களால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்தின் காரணமாக கோடையில் ஒரு நாள் மழையின் தீவிரம் 3% முதல் 19% வரை அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
 
சமீபத்திய அமெரிக்கா மற்றும் கனடா காட்டுத்தீ போன்ற தீவிர வெப்ப நிகழ்வுகளில் மிக விரைவான பண்புக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தீவிரமான மழை நிகழ்வுகளில் ஆய்வுப் பணி மிகவும் சவாலானது.
 
"கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மீதான பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை புரிந்து கொள்வதற்காகவும், இந்த நிகழ்வில் எங்களால் என்ன பகுப்பாய்வு செய்ய முடியும் அல்லது செய்ய முடியாது என்பதை தெளிவுபடுத்தவும் பல ஆய்வுத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் சேர்ந்து பணியை மேற்கொண்டோம்" என்று பருவநிலை ஆராய்ச்சியாளரான ஸ்ஜோக்ஜே பிலிப் கூறினார்.
 
"கனமழை பெய்வதில் காலநிலை மாற்ற தாக்கத்தை பகுப்பாய்வு செய்வது கடினம், ஆனால் மேற்கு ஐரோப்பாவில், பசுமை இல்ல வாயு உமிழ்வு இதுபோன்ற தீவிரமான மழை நிகழ்வுகளை அதிகமாக்கியுள்ளது என்பதை எங்களால் கண்டறிய முடிந்தது."
 
தற்போதைய பருவநிலையின் அடிப்படையில் பார்த்தால், மேற்கு ஐரோப்பாவில் எந்த ஒரு இடத்திற்கும், ஜூலை மாதத்தில் பெய்ததைப் போன்ற பயங்கரமழை 400 வருடங்களுக்கு ஒரு முறை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
தொடர்ச்சியான பசுமை இல்ல வாயு உமிழ்வு மற்றும் வெப்பநிலை உயர்வால், ஐரோப்பாவின் சில பகுதிகளில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கனமழை மிக வழக்கமான நிகழ்வாக மாறிவிடும்.
 
"தற்போதைய நவீன பருவநிலை மாதிரிகளைப் பார்க்கும்போது, எதிர்கால வெப்பமான உலகத்தில் தீவிரமான மழை நிகழ்வுகளின் அதிகரிப்பைக் கணிக்க முடிகிறது" என்று நியூகேஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹேலி ஃபோலர் கூறுகிறார்.
 
"தற்போதைய தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்றபடி மனித சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. பசுமை இல்ல வாயு உமிழ்வை விரைவாகக் குறைக்க வேண்டும். அவசர எச்சரிக்கை மற்றும் மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். மேலும் பருவநிலைக்குத் தக்கபடி நமது உள்கட்டமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலமே தீவிரமான இயற்கைப் பேரிடர்களைத் தாங்கி, உயிரிழப்புகள் மற்றும் சேதங்களைக் குறைக்க முடியும்."

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments