Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜி20 மாநாடு: கூட்டுத் தீர்மானம் நிறைவேற்றுவதில் இந்தியாவுக்கு இருந்த சவால்கள்

g20
, சனி, 9 செப்டம்பர் 2023 (19:19 IST)
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் உள்ளிட்ட பல விஷயங்கள் உலக நாடுகளுக்கு இடையே பல்வேறு முரண்களை உருவாக்கியுள்ளன.
 
இந்நிலையில், இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாட்டில் ஒருங்கிணைந்த கூட்டுத் தீர்மானத்தைக் கொண்டு வருவது சவாலானது எனப் பேசப்பட்டது. ஆனால், அந்த சவால்களைக் கடந்து அதை இந்தியா வெற்றிகரமாகச் செய்துள்ளது.
 
பல்வேறு விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட ஜி20 நாடுகள் முடிவெடுத்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை, ஜி20 மாநாட்டை நடத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார்.
 
பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றனர் என்ற போதிலும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவில்லை.
 
நாடுகளுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளைக் கடந்து, ஒரு கூட்டுத் தீர்மானத்தை இந்த மாநாடு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
 
டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோதியும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
 
ஐரோப்பிய ஒன்றியமும், உலகின் பொருளாதார ஆற்றல் மிக்க 19 நாடுகளும் இணைந்து உருவாக்கியுள்ள அமைப்புதான் ஜி20.
 
கடந்த ஆண்டு இந்தோனீசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது யுக்ரேன் மீதான போர், உலக நாடுகளுக்கு இடையே பல விதங்களில் முரண்பாடுகளை உருவாக்கியது.
 
ஆனால் அதற்குப் பிறகு உலக நாடுகளின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது. யுக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை கண்டித்து தெளிவான பிரகடனத்தை ஜி20 உச்சி மாநாடு வெளியிட வேண்டும் என மேற்கத்திய நாடுகள் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தன. ஆனால், அதற்கு சீனாவும், ரஷ்யாவும் உடன்படவில்லை.
 
ஷி ஜின்பிங், புதின் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்காத நிலையில், அதற்குப் பதிலாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கீ லாவ்ரோஃப் மற்றும் சீன பிரீமியர் லீ கியாங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஆனால் அவர்களின் தலைவர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவுக்கும் உடன்படும் அரசியல் பலம் அவர்களுக்கு இல்லை.
 
பிரிட்டன் பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டிலும் யுக்ரேன் போர் காரணமாக கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
 
இதற்கிடையே, தெற்குலக வளரும் நாடுகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தி வரும் இந்தியா, இந்த கவனத்தை யுக்ரேன் போர் பாதிக்காது என்றே இன்னும் நம்புகிறது. எனவே அதைப் பற்றி அதிகம் பேச இந்தியா விரும்புகிறது.
 
ஜி20 நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் 85 சதவீத இடத்தையும், வர்த்தகத்தில் 75 சதவீத இடத்தையும் பெற்றுள்ளன. இதேபோல் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்நாடுகளில்தான் வாழ்கின்றனர்.
 
மேலும், ஜி20 கூட்டமைப்பில் இடம் பெறாத நாடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என நிர்பந்திப்பதன் மூலம் தெற்குலக நாடுகளின் வளர்ச்சி குறித்து உறுதியான குரல் எழுப்பும் நாடாக இந்தியா தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.
 
ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியமும் இடம் பெற்றுள்ளது. வளரும் நாடுகள் குறித்து இந்தியா அக்கறை காட்டுவதற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
 
"உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளின் விலைவாசி உயர்வு, கடன் போன்ற பல்வேறு பிரச்னைகள் யுக்ரேன் போர் மற்றும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மேலும் தீவிரமடைந்துள்ளன.
 
இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய தொழிலில் வளர்ந்துள்ள நாடுகள் பங்களிக்க வேண்டும் என்று ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகள் விரும்கின்றன," என்கிறார் புரூக்கிங்ஸ் இன்ஸ்ட்டிட்யூசனை சேர்ந்த தன்வி மதன்.
,
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் செர்கீ லாவ்ரஃப் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்
 
ஆனால் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து எந்தவித உடன்பாடும் எட்டப்படும் அறிகுறிகள் எதுவும் தொடக்கத்திலிருந்தே காணப்படவில்லை. எடுத்துக்காட்டாக இந்தியா மற்றும் வளரும் நாடுகள் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பி அடைக்க முடியாத நிலையில் தத்தளிக்கும் நிலையில் இந்தப் பிரச்னையிலிருந்து மீள வளர்ந்த நாடுகளும், சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களும் மீண்டும் நிதியுதவி அளித்து உதவ வேண்டும் என இந்நாடுகள் விரும்புகின்றன.
 
ஆனால் சீனாவை விட்டுவிட்டு இதுபோன்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு சாத்தியமில்லை. உலகில் மிக வறுமையில் உள்ள நாடுகள், கடன்களைக் கட்டுவதற்காகவே 62 பில்லியன் டாலர் தொகையை ஒவ்வோர் ஆண்டும் செலவிடுவதாகவும், இதில் பெரும்பாலான நாடுகள் சீனாவிடம் கடன்பட்டிருப்பதாகவும் அண்மைக்காலம் வரை உலக வங்கியின் தலைவராகப் பதவி வகித்த டேவிட் மால்பாஸ் கடந்த டிசம்பர் மாதம் கூறியிருந்தார்.
 
இந்த கடன்களால் ஏராளமான நாடுகள் மிகவும் சிரமப்படும் நிலையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு காரணமாக இந்நாடுகள் மேலும் சிரமத்தில் சிக்கயுள்ளன.
 
வறுமையில் தத்தளிக்கும் நாடுகளுக்கு கடன்களை அளிக்கும் சீனா, பிற்போக்குத்தனமாகச் செயல்படுவதாக ஏற்கெனவே மேற்கத்திய நாடுகள் புகார் தெரிவித்துள்ள நிலையில், அதை சீனா மறுத்துள்ளது.
 
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நாடுகள் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் அதிகரிக்கப்படவேண்டும் என்பதுடன் சில இடங்களில் கூடுதல் கடனுதவிகளை அளிக்கவேண்டிய நிலையும் உள்ளது என புரூக்கிங்ஸ் இன்ஸ்ட்டிட்யூசனை சேர்ந்த தன்வி மதன் கூறுகிறார்.
 
"இந்த உச்சி மாநாட்டில் என்ன மாதிரியான முடிவுகள் எட்டப்படும் என்பது தொடக்கத்தில் யாருக்கும் தெரியாத நிலையே காணப்பட்டது. ஆனால், ஏதாவது ஒரு சமரசத்தைச் செய்துகொள்ள வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது," என்கிறார் அவர்.
 
ஏழை நாடுகளுக்கான கடன் உதவித் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து ஜி20 நாடுகள் ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு உடன்பாட்டை எட்டியிருந்தன. ஆனால், சீனா எப்போதும் ஒரு தடையாக இருப்பதாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.
 
இருப்பினும், சீனாவுடன் எல்லைப் பிரச்னைகைளைக் கொண்டுள்ள இந்தியா, கடன் திட்டங்களை மாற்றியமைக்க வலியுறுத்தி வரும் நிலையில், வளர்ந்த நாடுகளிடம் இருந்து மேலும் பல வாக்குறுதிகளைப் பெற முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி தெற்குலக நாடுகளுக்கான கடன்களைத் திருப்பிச் செலுத்த காலக்கெடுவை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கெனவே ஆதரித்துள்ளது.
 
அதேநேரம், வளரும் நாடுகளின் கடன் சுமைகைளுக்கு சீனாவே காரணம் என மேற்கத்திய நாடுகள் குற்றம் சுமத்தினால், இந்த உச்சி மாநாட்டின் முழு வெற்றிக்கு அது ஒரு தடையை ஏற்படுத்தும்.
 
கிரிப்டோகரன்சிகள் மீதான உலகளாவிய கட்டுப்பாடு, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் மறுசீரமைப்பை இந்தியா விரும்புகிறது. இவை குறித்த விவாதங்களும் மிகக் குறைந்த அளவிலேயே இந்த மாநாட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்தியா மீண்டும் மீண்டும் பேசி வருகிறது. மோசமான வானிலை பாதிப்புகளால் சில ஏழ்மையான நாடுகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன என்றும் இந்தியா கூறுகிறது.
 
 
"காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏழ்மையான நாடுகள் பல சவால்களை எதிர்கொள்ளும் போது, அவற்றைச் சமாளிக்க வளர்ந்த நாடுகள் உதவவேண்டும்," என்று வியாழக்கிழமையன்று வெளியான ஒரு கட்டுரையில் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார்.
 
காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஜி20 நாடுகளுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளை அவரது கட்டுரை பிரதிபலிக்கிறது.
 
வளரும் நாடுகள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான இலக்குகளை நோக்கிப் பயணிக்க விரும்பவில்லை. அது அந்நாடுகளின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடைக்கல்லாக இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
 
மேலும், தொழில் மயமான நாடுகள்தான் காலநிலை மாற்றத்துக்கான காரணம் என இந்த நாடுகள் புகார் தெரிவிக்கின்றன. இதனால், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கான செலவினங்களில் பெரும் பங்கை தொழில்மயமான நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
அது மட்டுமல்லாமல், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைத் தடுக்கும் வகையிலான தொழில்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை வளர்ந்த நாடுகள் அளிக்கவேண்டும் என்று கோருகின்றனர்.
 
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் ஹேப்பிமான் ஜேக்கப், காலநிலை மாற்றம் தொடர்பாக இந்த உச்சி மாநாட்டில் பெரிய முடிவுகள் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறுகிறார்.
 
"அதேநேரம் ஜி20 மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் காலநிலை மாற்றம் என்பது மிக முக்கியமானதாக இருக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவ இந்தியா வலியுறுத்தும் என்பது உறுதி," என்றும் அவர் கூறுகிறார்.
 
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன. மேலும் இது குறித்து சில ஒருமித்த கருத்துகள் எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இருப்பினும் இது யுக்ரேனிலிருந்து தானியங்களை சர்வதேச சந்தைகளுக்கு அனுப்ப ரஷ்யா ஏற்கெனவே மேற்கொண்ட உடன்படிக்கை போன்ற மற்றோர் உடன்படிக்கையை மீண்டும் ஏற்குமா என்பதைப் பொறுத்தே அமையும்.
 
விவசாயம், தொற்றுநோய் எதிர்ப்புக்கான தயார்நிலை, சுகாதாரம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
 
இதற்கிடையில், நரேந்திர மோதியின் அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் மனித உரிமைகள் சீரழிந்து வருவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அடிக்கடி முன்வைக்கும் கருத்து குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் வாய்ப்புகள் இல்லை.
 
சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் உரிமைக்காகப் போராடும் குழுக்களின் அழுத்தம் இருந்தபோதிலும், மேற்கத்திய தலைவர்கள் இந்தியாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இந்த பிரச்னையை எழுப்ப மாட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
சீனாவின் எழுச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில், மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியா ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளியாக இருக்கும் நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எந்தத் தலைவரும் எழுப்பப் போவதில்லை.
 
ஜி20 மாநாட்டில் யுக்ரேன் போர் குறித்து தீர்மானமான கூட்டறிக்கை வெளியாகவில்லை என்றால், அது அந்த மாநாட்டுக்கும், இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோதிக்கும் ஒரு பின்னடைவாக அமையும் என வில்சன் சென்டர் சிந்தனைக் குழுவின் மைக்கேல் குகல்மேன் போன்ற சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
 
ஆனால், ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாத நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு இந்தியா சாதனை படைத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
 
"ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனான தனது உறவுகளை வெற்றிகரமாக இந்தியா நிர்வகித்து வருகிறது," என்கிறார் அவர்.
 
"எனவே வேறுபாடுகளில் சிக்கித் தவிக்கும் நாடுகளுடன் இந்தியா பயணம் செய்கிறது என்ற நற்பெயரைப் பெற்றுள்ள நாடாக இருக்கலாம். ஆனால், இப்பெயரை நிலைநாட்டுவது மிகவும் கடினமான செயலாக இருக்கும்," என்று தன்வி மதன் கூறியிருந்தார்.
 
ஒரே நாடு ஒரே தேர்தல்: இந்தியாவில் அரசமைப்பு நெருக்கடியை ஏற்படுத்துமா?
 
ஆனால் பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட ஜி20 கூட்டமைப்பு, வேகமாக மாறி வரும் உலகில் அதன் பொருத்தத்தைப் பற்றி பல கேள்விகள் எழலாம்.
 
பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) போன்ற பிற கூட்டமைப்புகளை சீனா ஊக்குவித்து வருகிறது. அண்மையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்த அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அனைத்து நாடுகளும் சீனாவுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளனன.
 
பிரிக்ஸ், எஸ்சிஓ மற்றும் குவாட், ஜி7 (அழைக்கப்பட்ட உறுப்பினராக) மற்றும் ஜி20 போன்ற மேற்கத்திய ஆதிக்கக் கூட்டமைப்புகளின் ஓர் அங்கமாக இருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
 
இந்தச் சூழலில், இந்தியா ஒரு முக்கியமான உலகளாவிய சக்தி என்ற அந்தஸ்தையும், அதன் விளைவாக உலகின் முக்கியத் தலைவராக நரேந்திர மோதியின் இமேஜையும் உயர்த்தும் வகையில் இந்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன. இதனால் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது.
 
பல்வேறு கூட்டமைப்புகளின் போட்டியிடும் தன்மையைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அதைச் சமநிலைப்படுத்தும் இந்தியாவின் திறனை இது காண்பிக்கும். மேலும், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமரின் பெருமையை மேலும் அதிகரிக்கவும் இது உதவும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை.. இண்டியா கூட்டணிக்குத்தான் ஆபத்து : ஆர்.பி.உதயகுமார்