Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெருப்பு வளையச் சூரியகிரகணம்: எப்போது, எங்கு, எப்படி பார்க்கலாம்?

நெருப்பு வளையச் சூரியகிரகணம்: எப்போது, எங்கு, எப்படி பார்க்கலாம்?
, வியாழன், 10 ஜூன் 2021 (11:22 IST)
முக்கிய வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான சூரிய கிரகணம் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.42 மணி முதல் மாலை 6.41 வரை சூரிய கிரகணம் நடக்கும்.
 
இந்தச் சூரியகிரகணம் இந்தியாவிலும் ஆசியாவின் பெரும்பான்மையான பகுதிகளிலும் தெரியாது. மக்கள் அதிகம் வசிக்காத ஆர்க்டிக் பகுதிகளில்தான் சூரியகிரகணம் முழுமையாகத் தெரியும். பல பகுதிகளில் பகுதியளவில் சூரியகிரகணத்தைப் பார்க்க முடியும்.
 
இந்தச் சூரிய கிரகணம் எப்படிப்பட்டது, எங்கெல்லாம் பார்க்க முடியும், எப்படிப் பார்க்க வேண்டும், சூரியனைச் சுற்றியுள்ள புதிர்கள் என்னென்ன என்பன போன்ற கேள்விகளுக்கு நமக்கு பதில் தருகிறார் இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன்.
 
சூரிய கிரகணம் என்பது என்ன?
 
மிக எளிமையாகச் சொல்வதென்றால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். தமிழில் இதைச் சூரியன் மறைப்பு என்று கூறலாம்.
 
தற்போது நடக்கும் சூரிய கிரகணம் எப்படிப்பட்டது?
 
இப்போது நடக்க இருப்பது வளையவடிவச் சூரிய கிரகணம். இதைக் கங்கண சூரிய கிரகணம் என்றும் கூறலாம். கையில் நாம் போடும் வளைய வடிவக் கங்கணத்தை இது குறிக்கிறது.
 
சந்திரன் வட்டவடிவம். சூரியனும் வட்ட வடிவமாகத் தெரிகிறது. சந்திரன் சூரியனை மறைக்கும்போது அது முழுமையாக மறைப்பதில்லை. அதனால் சந்திரனைச் சுற்றியுள்ள, சூரியனை மறைக்காத பகுதிகள் ஒளி வட்டமாகக் கண்ணுக்குத் தெரியும். அப்போது சூரியன் நடுவில் கறுப்பாகவும், சுற்றிலும் நெருப்பு வளையமாகவும் தென்படும். அதுபோன்ற சூரிய கிரகணம்தான் இப்போது நடக்க இருக்கிறது.
 
ஜூன் 10-ஆம் தேதி நடக்கும் சூரிய கிரகணத்தை எங்கிருந்தெல்லாம் பார்க்கலாம்?
 
எப்போதுமே சூரிய கிரகணம் என்பது உலகத்தின் ஒரு சிறு பகுதியில் மட்டும்தான் தென்படும். தற்போது நடக்கும் சூரிய கிரணம் இந்தியாவில் தெரியாது. அமெரிக்காவின் அலாஸ்கா, கிரீன் லாந்து, ஐரோப்பா, ரஷ்யாவின் சில பகுதிகள், கனடா போன்ற இடங்களில் இருந்துதான் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் உள்ள வேறு சில பகுதிகளில் பகுதியளவு தென்படும்
 
நேரில் பார்க்க இயலாதவர்கள் வேறு எந்த வழியில் பார்க்க முடியும்?
 
இந்தியாவில் நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்க இயலாதவர்கள் இணையதளங்களில் பார்க்கலாம். நாசா உள்ளிட்ட பல அமைப்புகள் இணையதளங்களிலும், தொலைக்காட்சிகளும் சூரியகிரகணத்தைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.
 
சூரிய கிரகணத்தின்போது சூரியனில் இருந்து ஆபத்தான கதிர்கள் வெளிப்படுமா?
 
சூரிய கிரகணம் குறித்து முக்கியமான மூடநம்பிக்கை, கிரகணம் என்பது சூரியனில் நடக்கிறது என்பதுதான். இது முற்றிலுமாகத் தவறு. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனில் எந்தவிதமான மாற்றமும் நடைபெறுவதில்லை. இந்தியாவில்தான் இதுகுறித்த அதிக தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன.
 
வெளிநாடுகளில் சூரியகிரகணம் கொண்டாடப்படுகிறது. மக்கள் பொது இடங்களிலும் திறந்த வெளிகளிலும் கூடி பாதுகாப்பான முறையில் இதைக் காண்கிறார்கள். இந்தியாவில் சூரியகிரகணம் பற்றிய அச்சம் நிலவுகிறது. இது தேவையில்லாதது.
 
சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வெளியே வரலாமா?
 
தாராளமாக வெளியே வரலாம். வழக்கமான நாள்களில் சூரியன் எப்படியிருக்குமோ அப்படித்தான் சூரியகிரகணம் நடக்கும் நாளிலும் இருக்கும். வெயிலில் குடையைப் பிடித்தால் எப்படி சூரியஒளி நம்மீது படாதோ அதைப் போன்றதுதான் சூரியனைச் சந்திரன் மறைக்கும் நிகழ்வும். அது வெறும் நிழலைப் போலத்தான். வேறெதுவும் இல்லை.
 
அதே நேரத்தில் வெறும் கண்ணால் சூரியனைப் பார்க்கக்கூடாது. அதற்காக உருவாக்கப்பட்டுள்ள கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும்.
 
சூரியனைப் பற்றி நமக்குத் தெரியாத புதிர்கள் என்னென்ன?
 
அறிவியலைப் பொறுத்தவரை தெரியாதவை என்னெவெல்லாம் இருக்கிறது என்பதைப் பற்றிப் படிப்பதே தனிப்பிரிவு. சூரியனை பற்றி அப்படித் தெரியாத, புரிந்து கொள்ள இயலாத பல அம்சங்கள் இருக்கின்றன.
 
நமது வீட்டில் நெருப்பு இருக்கிறதென்றால், அதன் அருகே செல்லச் செல்ல வெப்பமும் அதிகமாகும். விலகிச் சென்றால் வெப்பம் குறையும். சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5 ஆயிரம் டிகிரி செல்சியஸ். ஆனால் சூரியனை விட்டு சற்று வெளியே வந்தால் அதன் வெப்பநிலை ஒரு லட்சம் டிகிரி செல்சியஸுக்கும் அதிகம்.. அதாவது சூரியனின் மேற்பரப்பைவிட சூரியனுக்கு சற்று தள்ளியிருக்கும் சுற்றுப்புறம் அதிக வெப்பநிலையில் இருக்கிறது. இதை Solar Coronal Heating Mystery. நெருங்கிச் சென்றால் வெப்பநிலை அதிகமாக இருக்கும், விலகிச் சென்றால் வெப்பம் குறைவாக இருக்கும் என்று அறிவியல் கூறும் நிலையில், சூரியனில் இருக்கும் இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டறியப்படவில்லை.
 
இன்னும் ஆய்வுகள் இந்தச் சிக்கலைப் பற்றிப் பல கோட்பாடுகள் இருந்தாலும், அவற்றால் முழுமையாக விளக்க முடியவில்லை. இன்றுவரை அது புதிர்தான்.
 
சூரியனைப் பற்றி முக்கியமாக நடக்கும் ஆய்வுகள் என்னென்ன?
 
சூரியனைப் பற்றி நமக்குத் தெரிந்த முக்கியமான அம்சம், அதன் ஆற்றலுக்குக் காரணம் அங்குள்ள அணுக்கள் ஒன்றுடன் மோதி பிணைகின்றன என்பதுதான். இந்தப் பிணைப்பின் மூலம் வெளிப்படும் ஆற்றலே சூரியனின் ஒட்டுமொத்த ஆற்றலுக்கும் காரணமாகிறது. இது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதே முயற்சியை பூமியில் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
 
பிரான்ஸ் நாட்டில் ITER (International Thermonuclear Experimental Reactor) என்ற பெயரில் வெப்ப அணுக்கரு ஆய்வு உலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் கூட்டு முயற்சியில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. சூரியனில் நடக்கும் அதே செயலை பூமியில் செயற்கையாக நடத்த முடியுமா என்று இங்கு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
 
கூட்டாக ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு நாடுகள் தனித்தனியாகவும் இதே ஆய்வைச் செய்து வருகின்றன. சீனா தனியாகச் செய்துவரும் ஆய்வு முக்கியக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதைச் செயற்கைச் சூரியன் என்கிறார்கள். உண்மையில் இது செயற்கைச் சூரியன் அல்ல. சூரியனில் நடப்பதைப் போன்ற நிகழ்வை பூமியில் நடத்துவதற்கான முயற்சிதான் இது.
 
இதுபோன்ற திட்டங்களின் மூலம் மிகக் குறைந்த செலவில் அதிக அளவிலான ஆற்றலைப் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
 
சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இந்தியாவில் என்னென்ன திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன?
 
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா மிக முக்கியமான திட்டத்தை இந்தியா செயல்படுத்த இருக்கிறது. இந்தத் திட்டத்தின் பெயர் ஆதித்யா. சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான சம ஈர்ப்புப் புள்ளியான எல்1-இல் விண்கலத்தை நிறுத்தி, அங்கிருந்தபடி சூரியனை ஆய்வு செய்வதுதான் இதன் நோக்கம். இந்த ஆண்டு செயல்படுத்தப்படுவதாக இருந்த இந்தத் திட்டம் கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரி கட்டாமல் மங்களம் பாடிய எலான் மஸ்க், ஜெப் பெசோஸ்? – அமெரிக்க பத்திரிக்கை அதிர்ச்சி தகவல்!