Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை: லடாக்கில் படைகள் பின்வாங்காததால் நீடிக்கும் பதற்றம்

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை: லடாக்கில் படைகள் பின்வாங்காததால் நீடிக்கும் பதற்றம்
, வியாழன், 10 ஜூன் 2021 (09:22 IST)
சீனாவுடனான அசல் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) படை விலக்கல் செயல்முறை இன்னும் நிறைவடையவில்லை.

அதாவது, எல்.ஏ.சி-யில் மோதல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீன இராணுவம் இன்னும் பின்வாங்கவில்லை.
 
வியாழக்கிழமை, வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, எல்.ஏ.சி -யில் சீனத் துருப்புக்களை நிறுத்துவது மற்றும் புதிய கட்டமைப்புகளை நிர்மாணிப்பது குறித்துக் கேட்டபோது இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
 
"படைவிலக்கல் செயல்முறை இன்னும் நிறைவடையவில்லை" என்று செய்தித் தொடர்பாளர் பாக்சி கூறினார்.
 
ஏறக்குறைய ஒரு வருடமாக எதிரும் புதிருமாக நின்று கொண்டிருந்த இரு நாடுகளின் படைகளும் இனிமேல்தான் பின் வாங்கும் என்பதே இதன் பொருள்.
 
இரு நாடுகளின் படைகளும் கடந்த ஆண்டு முதல் எல்.ஏ.சி யில் லடாக்கில் எதிரெதிர் நின்று வருகின்றன. அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான  பதற்றத்தைக் குறைக்கப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
 
இதன் பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரியில், இரு நாடுகளின் படைகளும் பிப்ரவரி 10 முதல் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என்று இரு நாடுகளும்  அறிவித்தன.
 
ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகும் இந்தச் செயல்முறை நிறைவடையவில்லை என்பது கடந்த வியாழக்கிழமை வெளியான இந்தியாவின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.
 
இருப்பினும், இந்தச் செயல்முறை முடிவடையும் வரை, களத்தில் ஸ்திரத்தன்மை பராமரிக்கப்படும் என்றும் எந்தவொரு புதிய சம்பவமும் தவிர்க்கப்படும் என்றும்  இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்று அரிந்தம் பாக்சி கூறினார்.
 
"எனவே, இந்த உடன்படிக்கைக்கு இணங்காத எதையும் இரு தரப்பினரும் செய்ய மாட்டார்கள் என்பது எங்கள் எதிர்பார்ப்பு" என்றும் அவர் கூறினார்.
 
மீதமுள்ள பகுதிகளிலிருந்து படைவிலக்கல் செயல்முறை முடிந்ததும், கிழக்கு லடாக்கில் நிலைமை சீரடையும் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 
"இதனால், எல்லைப் பகுதிகளில் அமைதி நிலைநாட்டப்படும். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒட்டுமொத்த முன்னேற்றம் இருக்கும்" என்றும்  அவர் கூறினார்.
 
டிஸ்எங்கேஜ்மென்ட், டீ-எஸ்கலேஷன் இவற்றிற்கு என்ன வித்தியாசம்?
 
டிஸ்எங்கேஜ்மென்ட்(disengagement), டீ-எஸ்கலேஷன் (de-escalation)ஆகிய இரண்டுமே படைகளைத் திரும்பப் பெறுவதையும் இயல்புநிலையை  நோக்கி நகர்வதையும் குறிக்கிறது. ஆனால் இந்த இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
 
டிஸ்எங்கேஜ்மென்ட் என்பது ஒரு உள்ளூர் செயல்முறை, அதாவது, ஒரு இடத்தில், நேருக்கு நேர் நின்று கொண்டிருந்த வீரர்கள் பின்வாங்குவர்.
 
ஆனால் டீஎஸ்கலேஷன் என்பது ஒரு விரிவான செயல்முறையாகும், இது மிகவும் கடுமையானது மற்றும் பெரியது. உண்மையிலேயே நிலைமை மேம்பட்டு வருகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
 
கடந்த வியாழக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறிய கருத்துக்களிலிருந்து, டிஸ்எங்கேஜ்மென்ட் செயல்முறையே இன்னும் நிறைவடையாத நிலையில், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்று தெரிகிறது.
 
பிப்ரவரியில் ஒப்புதல்
கிழக்கு லடாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றத்தைத் தீர்க்கக் கடந்த ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகளுக்கும் இடையே ஐந்து அம்ச  ஒப்பந்தம் எட்டப்பட்டது.
 
செப்டம்பர் 10, 2020 அன்று, மாஸ்கோவில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் கலந்துரையாடிய பின்னர் இது குறித்து ஒப்புக் கொண்டனர்.
 
பின்னர் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டத்தில் தனியாகச் சந்தித்தனர்.
 
இதில் ஒப்புக் கொள்ளப்பட்டவற்றின் கீழ், இரு நாடுகளின் படைகளுக்கிடையில் உடன்பட்ட விஷயங்களில் முன்கூட்டியே படைவிலக்கலை நிறைவு செய்தல்,  பதற்றம் அதிகரிக்கும் நடவடிக்கையைத் தவிர்ப்பது, எல்லை மேலாண்மை மற்றும் அசல் கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பான அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றுதல், அமைதியை மீட்பது ஆகியவை அடங்கும்.
 
கடந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில் இருந்து கிழக்கு லடாக்கில் பல இடங்களில் இந்தியா மற்றும் சீனாவின் படைகள் நேருக்கு நேர் நின்று  கொண்டிருக்கின்றன, இதுவரை அவை முழுமையாக பின்வாங்கவில்லை.
 
இருப்பினும், இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகளுக்கும் இராஜதந்திரிகளுக்கும் இடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இரு நாடுகளின் துருப்புக்களும் பிப்ரவரியில் பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளில் இருந்து முற்றிலும் விலகிவிட்டன.
 
படைவிலக்கல் குறித்த தொடர் பேச்சு வார்த்தை
கிழக்கு லடாக்கின் மீதமுள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதற்கான செயல்முறையை முடிக்க இரு தரப்பினருக்கும் இடையே இப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளிடையே 11 வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, ஆனால் இதிலும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.
 
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கிய படைவிலக்கல் செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல ஒரு வழி பிறக்கும் என்று நம்பப்பட்டது.
 
இந்தச் சந்திப்பில் சீனத் தரப்பு தனது நிலைப்பாட்டில் எந்தவிதமான மென்மையையும் காட்டவில்லை என்று பி டி ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
 
இதன் பின்னர் சீனா பல இடங்களில் தனது நிலையை வலுப்படுத்தியதாகச் செய்திகள் வந்துள்ளதாக பி டி ஐ தெரிவிக்கிறது.
 
இந்திய- சீன எல்லைப் பதற்றம்
 
கடந்த ஆண்டு மே மாதம், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லையில் ஒரு பதற்றமான நிலைமை எழுந்தது.
 
2020 மே முதல் தேதி அன்று, கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் ஏரியின் வடக்குக் கரையில் இரு நாடுகளின் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலிருந்தும் பல வீரர்கள் காயமடைந்தனர்.
 
இதன் பின்னர், ஜூன் 15 அன்று, சர்ச்சைக்குரிய கால்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் வீரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் இருபுறமும் பல வீரர்கள் இறந்தனர்.
 
கால்வன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளின் பிரதிநிதிகளிடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
 
இறுதியாக, இந்த ஆண்டு பிப்ரவரியில் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரியில் படைவிலக்கலுக்கான செயல்முறை தொடங்கப்பட்டது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12 மணி நேரத்தில் குணமடையலாம்... கொரோனாவுக்கு புது ட்ரீட்மெண்ட் !