வெடிச்சம்பவம் ஏற்பட்ட கடை அமைந்துள்ள செளத்ஆல் கிங் ஸ்ட்ரீட் கடைவீதி
பிரிட்டனின் லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதியில் உள்ள கடையில் எரிவாயு வெடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் இருவர் உயிரிழந்திருப்பது, நகர காவல்துறையால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிகறது.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து நான்கு ஆடவர்கள், ஒரு சிறார் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
மேற்கு லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதி, தெற்காசியர்கள் அதிகம் வாழும் இடம். அங்கு பஞ்சாபியர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். இதனால் இந்த பகுதியை உள்ளூர்வாசிகள், "லிட்டில் இந்தியா" (சிறிய இந்தியா) என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள சந்தை பகுதிகளில் தொடர்ச்சியாக கடைகள் உள்ளன. இதில் ஒரு செல்பேசி கடை மற்றும் சிகை திருத்தகத்தில் பிரிட்டன் நேரப்படி காலை 6.30 மணியளவில் வெடிச்சம்பவம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.
எனினும், வெடிச்சம்பவத்தை தீவிரவாத செயலாக கருதவில்லை என்றும் இது எரிவாயு வெடிப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பெருநகர காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
பெருநகர காவல்துறை நிலைய கமாண்டர் பால் மோர்கன் கூறும்போது, "தற்போதைய நிலையில் இருவர் இறந்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறோம். நிபுணர்களைக் கொண்டு இடிபாடுகளில் சிக்கியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வெடிச்சம்பவம் நடந்த பகுதியில் மக்கள் பலரும் சிக்கியிருப்பதால் அவர்களை உயிருடன் மீட்கும் நடவடிக்கை, தீயணைப்பு வீரர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கிறது," என்று தெரிவித்தார்.
லண்டன்
பட மூலாதாரம்,PA MEDIA
வெடிச்சம்பவம் ஏற்பட்ட உடனேயே அங்கிருந்த 14 ஆடவர்கள், இரண்டு சிறார்கள் தாங்களாகவே இடிபாடுகளில் இருந்து வெளியே வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மீட்புப் பணி முடிவடையும்வரை கிங் ஸ்ட்ரீட் பகுதியில் வெளி நபர்கள் வர வேண்டாம் என நகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. சம்பவத்தில் சிக்கியவர்களில் ஒருவர் மட்டும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக லண்டன் அவசரஊர்தி சேவை செய்தித்தொடர்பாளர் கூறினார்.
நடந்த சம்பவத்தில் கீழ் தளத்தில் இருந்த கடை முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. அதன் உரிமையாளர் கூறுகையில், "சம்பவ பகுதியை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தூரத்தில் இருந்து பார்க்கும்போது எதுவுமே எனதுகடையில் மிஞ்சவில்லை என தெரிகிறது," என்று கூறினார்.
சம்பவ இடத்துக்கு அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வரும் நூர்மிலா ஹமீது, வெடிச்சம்பவம் நடந்தபோது எனது பிள்ளைகளை பள்ளிக்கு தயார்படுத்தி வந்தேன். திடீரென பயங்கர சத்தம் கேட்டதும் வெளியே எனது கணவர் வந்து பார்த்து செல்பேசி கடையில் ஏதோ நடந்து விட்டது என்று கூறிய பிறகே பிரச்னையின் தீவிரம் புரிந்தது" என்றார்.