Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"அனுபவம் மிக்க கேப்டன், புதுமண தம்பதி, - குமுறும் மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர்

Advertiesment
, திங்கள், 11 ஜனவரி 2021 (09:26 IST)
இந்தோனீசியாவின் ஸ்ரீவிஜயா ஏர் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் பயணித்து கடலில் விழுந்து மாயமானவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள், மிகவும் கவலையுடன் தங்களின் அன்புக்குரியவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.
 
கடந்த சனிக்கிழமை ஜகார்த்தாவிலிருந்து 62 பயணிகளுடன் கிளம்பி போண்டியானக் என்ற தீவுக்கு சென்றுக்கொண்டிருந்த இந்த விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லை என்று அஞ்சப்படுகிறது.
 
இதுவரை இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், மாயமான இந்த விமானத்தில் பயணம் சிலரின் பின்னணி குறித்த தகவல்களை பிபிசி இந்தோனீசிய சேவையின் திவிக் மார்டா மற்றும் விடியானிங்ஸி ஆகியோர் அளிக்கிறார்கள்.
 
விமானத்தின் கேப்டன் அஃப்வான்
 
"நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறோம். நல்ல தகவல் வரும் என பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் ஃபெர்சா மஹர்திகா. இவரின் மாமா அஃப்வான் தான் கடலில் விழுந்த ஸ்ரீவிஜயா எஸ.ஜே. 182 விமானத்தின் கேப்டன்.
 
54 வயதாகும் அஃப்வான், கடந்த சனிக்கிழமையன்று வழக்கத்தை விட சீக்கிரமாக வீட்டிலிருந்து கிளம்பினார். மீண்டும் தன்னுடைய மூன்று குழந்தைகளை விட்டுச் செல்வதால், தன் குழந்தைகளிடம் அவர் மன்னிப்பு கேட்டார்.
 
தன்னுடைய சட்டையை இஸ்திரி போடவில்லை என அவர் புகார் கூறியதாக ஃபெர்சா பிபிசியிடம் கூறினார். அவர் எப்போதுமே மிகவும் நேர்த்தியாக இருப்பார்.
 
முதலில் விமானப் படையில் பணிபுரிந்து வந்த அஃப்வான், 1987-ம் ஆண்டு வணிக ரீதியிலான விமானங்களை ஓட்டத் தொடங்கினார்.
 
இஸ்லாமிய மதத்தை கடைபிடித்து, மேற்கு ஜாவாவில் வசித்து வந்த இவர், தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்கும், பணியிடங்களில் உடன் வேலை பார்ப்பவர்களுக்கும் உதவக் கூடியவராக அறியப்படுகிறார்.
 
இவரது கனிவான மனம் கொண்டவராக சுற்றியிருப்பவர்களால் அடையாளம் காணப்படுகிறார். "அவர் ஒரு நல்ல மனிதர். நான் உடைந்து போயிருக்கிறேன். இப்படி நடக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என் மாமாவுக்காகவும் எங்கள் குடும்பத்துக்காகவும் பிரார்த்தியுங்கள்" என்கிறார் ஃபெர்சா.
 
அங்கா ஃபெர்னான்டா அஃப்ரியான்
தன்னுடைய 29 வயது மகன் அங்கா ஃபெர்னான்டா அஃப்ரியான் இன்னும் உயிருடன் இருப்பார் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் அவரது தாயார் அஃப்ரிடா.
 
"ஜகார்த்தாவில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் என் மகன் குறித்த விவரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஜகார்த்தா செல்ல விரும்புகிறேன். ஆனால் கொரோனாவால் பயணிப்பது சிரமமாக இருக்கிறது" என சுமத்ராவில் வாழும் அங்காவின் தாய் அஃப்ரிடா தன் வருத்தத்தை பகிர்கிறார்.
 
ஒரு வாரத்துக்கு முன்புதான், கப்பலில் பணிபுரியும் அங்கா தந்தையானார். தந்தையான பின் அங்கா இன்னும் நிறைய உழைத்து, தன் குழந்தைக்கு சிறப்பான வாழ்கையை ஏற்படுத்தி கொடுக்கும் புது உத்வேகம் அவனுக்கு கிடைத்தது என்கிறார் அவரது தாயார்.
 
அங்கா பெரிய சரக்கு படகுகளில் பணியாற்றினார். தன்னுடைய கப்பல் சேதமடைந்துவிட்டதாகவும், அதை சரி செய்ய வேண்டி அவனது முதலாளி தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், எனவே அவசரகதியில் போண்டியானக்கிற்கு பறக்க வேண்டியிருப்பதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அங்கா பேசியதாக அஃப்ரிடா கூறுகிறார்.
 
அவர் பெரும்பாலும் இந்தோனீசிய தீவு முழுவதும் வேலைக்காக பயணிக்க வேண்டியிருந்தது. பொதுவாக கப்பலில் பயணிக்க விருப்பும் அவர், அரிதாகவே விமானத்தில் செல்வார்.
 
"ஒருவேளை என் மகன் இறந்திருந்தால், அவனை வீட்டிற்கு அழைத்து வந்து முறையாக அடக்கம் செய்ய நான் விரும்புகிறேன்" என தன் கையில் சீருடையில் இருக்கும் அவரது மகன் அங்காவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு கூறினார் அங்காவின் தாய் அஃப்ரிடா.
 
இசான் அத்லான் ஹகீம் & புத்ரி வாஹ்யுனி
கடலில் விழுந்த விமானத்தில் புதிதாக திருமணமான இசான் அத்லன் ஹகீம் மற்றும் புத்ரி வாஹ்யுனியும் இருந்தனர். தங்களின் விமானம் மோசமான வானிலையால் தாமதமாகிவிட்டதை குடும்பத்துக்கு தெரிவிக்க சொய்கெர்னா ஹட்டா விமான நிலையத்திலிருந்து பேசியதாக, செய்தி இணையதளமான கொம்பாஸிடம் கூறினார் இஹ்சானின் இளைய சகோதரரான அர்வின் அம்ரு ஹகீம்.
 
இவர்கள் தங்களுடைய உறவினர்களுக்கு திருமண விருந்து கொடுப்பது தொடர்பாக கேலிமாந்தனுக்கு பயணம் மேற்கொண்டார்கள்.
 
அடுத்த ஞாயிற்றுக்கிழமை இந்த விருந்துக்கு திட்டமிடப்பட்டிருந்தது என்கிறார் அர்வின். இப்போது இசானின் மொத்த குடும்பமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது.
 
இந்தா ஹலிமா புத்ரி & மொஹம்மத் ரிஸ்கி வஹ்யாதி மற்றும் அவர்களது குழந்தை
ஸ்ரீவிஜயா எஸ்.ஜே. 182 விமானம் குறித்த செய்தியைக் கேட்டதும், உஸ்ரிலானிட்டா மயங்கி விழுந்துவிட்டார். அந்த விமானத்தில்தான் அவரது மகள் இந்தா ஹலிமாவும், மருமகன் மொஹம்மத் ரிஸ்கியும், அவரது பேரக் குழந்தையும் பயணித்தார்கள்.இந்தா பிரசவத்துக்காக, ஜாவாவுக்கு வந்திருந்தார். தற்போது குழந்தையுடன் போண்டியானக்கில் இருக்கும் தங்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
 
இவர்கள் பயணித்த விமானம் புறப்படுவதற்கு முன்னர், இந்தா ஹலிமா விமானத்தின் இறக்கைப் பகுதியைப் படம் பிடித்து அனுப்பி, "இன்று மழை அதிகமாக இருக்கிறது. குடும்பத்தினரின் பிரார்த்தனைகள் தேவை" என வாட்சாப்பில் கூறியிருந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இவை எல்லாம் ஒரு பக்கமிருக்க, போண்டியானக் சுபாடியோ விமான நிலையத்தில், சிறப்பு மையங்களை நிறுவி, ஸ்ரீவிஜயா எஸ்.ஜே. 182 விமானத்தில் பயணித்தவர்களின் நெருங்கிய ரத்த பந்தங்களின் டி.என்.ஏ மாதிரிகளை சேகரித்து வருகிறார்கள் அதிகாரிகள். இந்த மாதிரிகளை வைத்து காணாமல் போனவர்களை அடையாளம் காண பயன்படுத்தவிருக்கிறார்கள்.
 
கடலில் விழுந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்ப உறுப்பினர்களில் பலரும் பயணம் செய்து வர வேண்டும் என்பதால், இந்த பணி நிறைவடைய சுமாராக இரண்டு நாட்களாவது ஆகும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டணி வேணும்னா இடஒதுக்கீடு வேணும்! பாமக – அதிமுக இன்று பேச்சுவார்த்தை!