Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏலியன்கள் இருப்பதற்கான ஆதாரமா? K2-18b புறக்கோளில் என்ன கிடைத்தது?

ஏலியன்கள் இருப்பதற்கான ஆதாரமா? K2-18b புறக்கோளில் என்ன கிடைத்தது?
, புதன், 13 செப்டம்பர் 2023 (20:23 IST)
K2-18b என்பது ஒரு குளிர்நிறைந்த குள்ள நட்சத்திரத்தைச் சுற்றும் ஒரு புறக்கோள். அதன் வெப்பநிலை, அங்கே உயிர் வாழ்வதற்கு ஏற்ற முறையில் இருக்கும் என நம்பப்படுகிறது.
 
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, பூமிக்கு வெளியில் எங்கோ ஒரு கோளில் உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கான உத்தேச ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
 
இது டைமெதில் சல்பைடு (டிஎம்எஸ்) என்ற மூலக்கூறைக் கண்டறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. பூமியில் இந்த வேதிப்பொருள் உருவாகக் காரணமே இதில் வாழும் உயிரினங்கள்தான் என்பதால், அந்தப் புறக்கோளிலும் உயிர்கள் இருக்க வாய்ப்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
அதேவேளையில், 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு புறக்கோளில் இதுபோல் டைமெதில் சல்பைடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒரு "வலுவான ஆதாரம் அல்ல" என்றும் அதன் இருப்பை உறுதிப்படுத்த கூடுதல் தரவுகள் தேவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
அந்த புறக்கோளின் வளிமண்டலத்தில் மீத்தேன்ம், கரிம வாயு ஆகியவற்றையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
இந்த வாயுக்கள் K2-18b என்று பெயரிடப்பட்ட கோளில் இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் அதில் தண்ணீர், பெருங்கடல் ஆகியவை உள்ளன என்பது புலனாகிறது.
 
 
கிட்டத்தட்ட பூமியைப் போலவே தோற்றமளிக்கும் K2-18b எனப் பெயரிடப்பட்ட இந்தப் புறக்கோள் பூமியைவிட சுமார் 9 மடங்கு பெரியது.
 
இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் நிக்கு மதுசூதன், பிபிசி செய்தியிடம் பேசுகையில், புதிதாகக் கிடைத்திருக்கும் ஆதாரங்களைப் பார்த்தபோது, அவரது குழுவினர் அனைவரும் மிகவும் வியப்படைந்ததாகத் தெரிவித்தார்.
 
"பூமியில், டி.எம்.எஸ். எனப்படும் அந்த வேதிப்பொருள், இதில் வாழும் உயிர்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. பூமியின் வளிமண்டலத்தில் பரவியுள்ள அதன் பெரும்பகுதி கடல் சூழலில் உள்ள பைட்டோபிளாங்டனில் இருந்து வெளியேற்றப்படுகிறது," என்று அவர் கூறினார்.
 
ஆனால் பேராசிரியர் மதுசூதன் தொடர்ந்து பேசியபோது, அந்த புறக்கோளில் டி.எம்.எஸ். கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், உண்மையில் அது அந்த புறக்கோளில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய கூடுதல் ஆதாரங்கள் தேவை என்றார். அந்த ஆதாரங்கள் ஓராண்டுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
"அதில் டி.எம்.எஸ். இருப்பது உறுதி செய்யப்பட்டால், அது மனிதகுல வரலாற்றில் ஒரு மிகப் பெரிய விஷயமாக இருக்கும். அது போன்ற ஒரு உண்மையை முன்வைக்க கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்."
 
வெகுதொலைவில் உள்ள நட்சத்திரத்தை சுற்றி வரும் ஒரு கோளில் டி.எம்.எஸ். இருப்பதன் சாத்தியத்தை வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்தது இதுவே முதல்முறை. ஆனால் அந்தக் கண்டுபிடிப்பை அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள்கிறார்கள்.
 
வீனஸ் கோளின் மேகங்களில் ஃபாஸ்பைன் என்ற ஒரு வேதிப்பொருள் 2020இல் கண்டறியப்பட்டு ஓராண்டுக்குப் பின்னர் அந்த கண்டுபிடிப்பு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தற்போதைய கண்டுபிடிப்பை உறுதி செய்ய ஆய்வுக்குழுவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.
 
அப்படியிருந்தும், லண்டனில் உள்ள ராயல் வானியல் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனரும், தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி நடத்தி வருபவருமான டாக்டர் ராபர்ட் மஸ்ஸி, தற்போதைய கண்டுபிடிப்பு அவருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
 
"பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா இல்லையா என்ற பெரிய கேள்விக்குப் பதிலளிக்கக்கூடிய புள்ளியை நோக்கி நாங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறோம்," என்றார் அவர்.
 
''இந்த பிரபஞ்சத்தில் பூமிக்கு வெளியில் உயிர்கள் வாழ்கின்றன என்பதை நிச்சயமாக ஒரு நாள் கண்டுபிடிப்போம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஒருவேளை தற்போதைய கண்டுபிடிப்பு கூட அப்படிப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும்.
 
இன்னும் 10 அல்லது 50 ஆண்டுகளில் இது சிறந்த விளக்கமாக இருக்கும் என்பதற்கு மிகவும் அழுத்தமான ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன்," என்று ராபர் மஸ்ஸி கூறுகிறார்.
 
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வானில் தொலைதூரத்தில் உள்ள கோள்களின் வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் ஒளியை பகுப்பாய்வு செய்ய முடியும். அந்த ஒளி அதன் வளிமண்டலத்தில் இருக்கும் மூலக்கூறுகளின் ரசாயன அடையாளத்தைக் கொண்டுள்ளது.
 
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தொலைதூர கோள்களின் வளிமண்டலத்தில் இருந்து கிடைக்கும் சிறிய ஒளி புள்ளிகளை பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டது.
 
வானவில் நிறமாலையை உருவாக்கும் ப்ரிஸம் போல - ஒளியை அதன் அதிர்வெண்களாகப் பிரிப்பதன் மூலம் இந்த விவரங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
 
ஸ்பெக்ட்ரம் எனப்படும் நிறமாலையின் ஒரு பகுதி காணாமல் போனால், அது அந்த கோளின் வளிமண்டலத்தில் உள்ள இரசாயனங்களால் உறிஞ்சப்பட்டிருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நிலையில், அந்த ஒளிக் கலவையைக் கொண்டு எங்கே எந்த வேதிப்பொருட்கள் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய முடியும்.
 
தற்போது கிடைத்திருக்கும் இந்தப் புதிய தகவல் வியப்பூட்டும் ஒன்று. இந்த சாதனை மிகவும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இந்த புறக்கோள் 11 ஆயிரம் லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது, எனவே, அங்கிருந்து இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை அடையும் ஒளியின் அளவு மிகவும் சிறியதாக இருக்கும்.
 
டிஎம்எஸ் வேதிப்பொருளைப் போலவே, நிறமாலை பகுப்பாய்வில் மீத்தேன் மற்றும் கரிம வாயுக்கள் ஏராளமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
 
கரிம வாயு, மீத்தேன் ஆகியவற்றின் விகிதாச்சாரம், ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தின் அடியில் பெருங்கடல் இருப்பதுடன் ஒத்துப் போகிறது. நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, முன்பு அங்கு நீராவி இருப்பதைக் கண்டறிந்தது.
 
அதனால்தான் K2-18b என்று பெயரிடப்பட்ட புறக்கோள், மிகவும் சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், அங்கே கடல் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
 
ஒரு கோளில் உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை, அதன் வெப்பநிலை, கரிமம் மற்றும் அநேகமாக திரவத்தின் இருப்பு நிலை ஆகியவற்றைப் பொறுத்தது.
 
ஒரு கோளில் உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை, அதன் வெப்பநிலை, கரிமம் மற்றும் அநேகமாக திரவத்தின் இருப்பு நிலை ஆகியவற்றைப் பொறுத்தது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் K2-18bஇல் அவை அனைத்தும் இருப்பதாகக் கூறுகின்றன.
 
ஆனால் ஒரு புறக்கோள் உயிர் வாழும் தன்மையைக் கொண்டிருப்பதால் மட்டுமே அங்கே உயிர்கள் இருக்கும் எனக் கருதமுடியாது. இங்கே, டி.எம்.எஸ். என்ற வேதிப்பொருளும் அங்கு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இது மிகவும் முக்கியமானது.
 
அந்தக் கோளை மேலும் புதிராக்குவது என்னவென்றால், அது பூமியைப் போன்ற ஒரு பாறைக் கோளாக இருக்கிறது. K2-18b என்ற இந்தக் கோள் தொலைதூர நட்சத்திரங்களைச் சுற்றி வரும் நிலையில், அது பூமியைவிட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு பெரியது.
 
புறக்கோள்கள் (அதாவது, மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்கள்) அவை, பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடையில் உள்ள அளவுகளில் ஏதாவது ஒன்றைக் கொண்டவை.
 
மேலும், நமது சூரிய குடும்பத்தில் உள்ள எதையும் போல் இல்லாமல், வேறுபட்ட தன்மையைக் கொண்டவையாக இருக்கின்றன. ஆராய்ச்சிக் குழுவின் மற்றோர் உறுப்பினரான கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சுபாஜித் சர்க்கார் கருத்துப்படி, அவற்றின் வளிமண்டலத்தின் தன்மையைப் போலவே, இந்த 'சப்-நெப்டியூன்கள்' பற்றி இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.
 
"இந்த வகையான கோள் நமது சூரிய குடும்பத்தில் இல்லை என்றாலும், இந்த சப்-நெப்டியூன்கள் விண்மீன் மண்டலத்தில் இதுவரை அறியப்பட்ட மிகவும் பொதுவான வகைப்போட்டைச் சேர்ந்த கோள்களாகத்தான் இருக்கின்றன," என்று அவர் கூறினார்.
 
"நாங்கள் இன்றுவரை வாழக்கூடிய-மண்டல சப்-நெப்டியூனின் மிக விரிவான நிறமாலையைப் பெற்றுள்ளோம். மேலும் அதன் வளிமண்டலத்தில் என்னென்ன மூலக்கூறுகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க இது எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது," என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணல் ஒப்பந்ததாரரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை