Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலி நிவாரணம் தரும் மின்சார மீன் சிகிச்சை - இது எப்படி சாத்தியமாகிறது?

electric fish
, புதன், 10 மே 2023 (22:44 IST)
ரோமானிய மொசைக் கற்களில் மின்சார மீன்கள் குறித்து சித்திரிக்கப்பட்டுள்ளன.
 
மின்சாரத்தை கொண்டு அளிக்கப்படும் மருத்துவ மற்றும் பிசியோதெரபி சிகிச்சை முறைகள் எலக்ட்ரோதெரபி எனப்படுகிறது.
 
நாள்பட்ட நோய்களுக்கான வலி நிவாரண சிகிச்சை, மனஅழுத்தம், மூளை பாதிப்பு தொடர்பான சில சிகிச்சைகள், மனித தசைகளின் புனரமைப்பு சிகிச்சை போன்றவற்றில் எலக்ட்ரோதெரபி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
 
மனிதர்கள் சமீபகாலத்தில்தான் மின்சாரத்தின் தன்மையை புரிந்து கொண்டு, அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அறிந்துள்ளனர்.
 
எனவே, எலக்ட்ரோதெரபி என்பது நவீன மருத்துவத்தில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
 
விளம்பரம்
 
ஆனால் பண்டைய காலத்தில் கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் மின்சாரம் குறித்த அனுபவத்தை பெற்றிருந்தனர் என்பதுடன், அதனை சில வியாதிகள், நோய்களுக்கு தீர்வாகவும் அவர்கள் பரிந்துரைத்தனர் என்பதை அறியும்போது நமக்கு வியப்பாகவே உள்ளது.
 
ஏனெனில், அவர்கள் மின் உற்பத்தி மற்றும் அதனை பயன்படுத்துவதற்கான கருவிகள் குறித்து அப்போது அறிந்திருக்கவில்லை.
 
ஆனால் அவர்கள் இயற்கையான மின்சார ஆதாரங்கள் மற்றும் அவற்றை கையாளக்கூடிய வழிமுறைகளை அறிந்திருந்தனர்.
 
 
மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ள மீன்கள் பயோஎல்க்ட்ரோஜெனிசிஸ் என்று அழைக்கப்படுகின்றன
 
சில வகை மீன்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளன. இந்த வகை மீன்கள் பயோஎல்க்ட்ரோஜெனிசிஸ் (Bioelectrogenesis) என்றழைக்கப்படுகின்றன. தகவல்தொடர்பு, வேட்டையாடுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த மீன்கள் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.
 
மத்திய தரைக்கடல், ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன்படைத்த மீன் வகைகள் காணப்படுகின்றன.
 
இந்த மீன்கள் குறித்து கிரேக்கர்கள், எகிப்தியர்கள் மற்றும் ரோமானியர்கள் நன்கு அறிந்திருந்தனர். எகிப்திய நினைவுச் சின்னங்கள், கிரேக்க மண்பாண்டங்கள், ரோமானிய மொசைக் கற்கள் ஆகியவற்றில் மின்சார மீன்கள் குறித்து சித்திரிக்கப்பட்டுள்ளன.
 
அறிஞர்களின் உரையில் மின்சார மீன்கள்
"On diet in acute diseases" என்று நூலில்தான் முதன்முதலாக மின்சாரம் உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட எலக்ட்ரோஜெனிக் மீன்கள் குறித்து குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதில் இந்த வகை மீன்கள் ‘நார்கே’ என்று வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
இருப்பினும் இந்த நூலில் நார்கே வகை மீன்களின் அசாத்திய குணாதிசயங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளதே தவிர, இவற்றின் மின்சாரத்தை கொண்டு எந்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டதற்கான குறிப்புகள் இடம்பெறவில்லை.
 
ஆனால், பிளாட்டோவும் (கிமு 427 -347) தமது பிரபல உரையாடலான மெனாவில் (Meno), இந்த வகை மீன்களை தொடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசியுள்ளார். அந்த உணர்வை அவர், சாக்ரடீசுடன் பேசும்போது ஏற்படும் மனமயக்கதுடன் ஒப்பிட்டுள்ளார்.
 
 
மின்சார மீன்களை தொடுவதால் ஏற்படும் உணர்வை சாக்ரடீசுடன் பேசும்போது ஏற்படும் மனமயக்கதுடன் ஒப்பிட்டுள்ளார், பிளாட்டோ
 
‘டார்பிடோ கதிர் வகை மீன்களின் தந்திரத்தை, உணவை பின்தொடர்ந்து வேட்டையாடும் அவற்றின் குணாதிசயத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டினார் அரிஸ்டாட்டில் (கிமு 384 - 322). இந்த வகை மீன்கள், கடற்பரப்பின் அடியில் ஒளிந்துக் கொண்டு, திடீரென இரையை நெருங்குகின்றன என்று விலங்குகள் பற்றிய தமது ஆராய்ச்சியில அவர் விவரித்துள்ளார்.
 
அரிஸ்டாட்டிலின் சீடரான தியோஃப்ராஸ்டஸ் (கிமு 371 -287) கூட இந்த மீன்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். டார்பிடோ கதிர் வகை மீன்களின் மின்சக்தி, நீர் மற்றும் உலோக வகை மீன்பிடி தடுப்புகள் மூலம் வெகுதொலைவுக்கு பரவக்கூடு்ம் என்று அவர் எச்சரித்தார். இவரது இந்த குறிப்பே, மின்சாரத்தை கடத்தும் பொருட்கள் குறித்த ஆரம்பகால விளக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
 
இந்த வகை மீன்களின் அசாதாரண சக்திகள் குறித்து வரலாற்றில் பல எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். டார்பிடோ வகை மீன்களின் உடலுறுப்புகளில் எங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்து 2 ஆம் நூற்றாண்டில் கவிஞர் ஓபியனோ டி அனாசர்பா ( கிமு 106 -43) விவரித்துள்ளார்.
 
காமத்தை கட்டுப்படுத்தும் வல்லமை
எலக்ட்ரோஜெனிக் வகை மீனின் குறிப்பிட்ட சில பகுதிகளை உட்கொள்வது அல்லது அவற்றை உடம்பில் மேற்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் மனிதனின் உழைப்பை தூண்டி, காம உந்துதலை தடுக்கும் சில சி்கிச்சை முறைகளை, பிளினி தி எல்டர் ( 23 -79) எனும் எழுத்தாளர் தமது 'Natural History' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
இருப்பினும், இந்த வகை மீன்களின் மின்சார பயன்பாட்டை அடிப்படையாக கொண்ட மருத்துவ சிகிச்சை முறைகளை கிமு 46 ஆம் ஆண்டு வரை யாரும் முன்மொழியவில்லை.
 
 
டார்பிடோ வகை மீன்களின் உடம்பில் உள்ள மின் உற்பத்தி பகுதிகளை (Cramps) பயன்படுத்தி, மனிதனின் நாள்பட்ட வலிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று 46 ஆம் ஆண்டில் தான் முன்மொழிப்பட்டது.
 
இதனை முன்மொழிந்தவர், பேரரசர் கிளாடியஸ் அரசில், நீதிமன்ற சேவையில் பணிபுரிந்த மருத்துவர் ஸ்க்ரிபோனியஸ் லார்கோ. எலக்ட்ரோஜெனிக் சிகிச்சை குறித்த அவரது முன்மொழிவுகளில் ஒன்றே ஒன்றுதான் கிடைக்கப் பெற்றுள்ளது. 'De compositione medicarium liber' எனும் அவரது நூல் தான் எலக்ட்ரோதெரபி குறித்த முதல் உரையாக கருதப்படுகிறது.
 
டைபீரியஸ் பேரரசரான ஆன்டெரோஸ் கடுமையான கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அந்த நிலையிலும் அவர் ஒருநாள் கடற்கரையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் டார்பிடோ வகை மீனை மிதித்துள்ளார். உடனே அவர் கால் உணர்வின்று மரத்துபோய் வலியும் பறந்தோடியது.
 
இந்த தகவல், டார்பிடோ வகை மீன்களை கீழ்வாதம் போன்ற நோய்களுக்கான சிகிச்சை பயன்படுத்தலாம் என்ற தூண்டிதலை ஸ்க்ரிபோனியஸுக்கு அளித்தது. மேலும் தலைவலியை போக்குவதற்கும் டார்பிடோ வகை மீனை கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்றும் ஸ்க்ரிபோனியஸ் பரிந்துரைத்தார்.
 
மருத்துவர் டியோஸ்கோரைடைஸ், எலக்ட்ரோதெரபி சிசிக்சைக்கு ஒப்புதல் அளித்ததுடன், மலக்குடல் வீழ்ச்சிக்கான சிகிச்சைக்கும் இதனை பரிந்துரைத்தார்.
 
இதில் டார்பிடோ கதிர் வகை மீன்களை கொண்டு அதன் பலன்களை சரிபார்க்க சில சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதில் முதலில் நேர்மறையான முடிவுகள் கிடைக்கவில்லை. உயிருள்ள டார்பிடோவுக்கு பதிலாக இறந்தவற்றை பயன்படுத்தியதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
 
எலக்ட்ரோதெரபி சிகிச்சை மூலம், உலகம் முழுவதும் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மனிதனின் நாள்பட்ட உடல் வலிகளுக்கும், சில நோய்களுக்கும் இந்த சிகிச்சை முறை பயன்பட்டு வருகிறது. கட்டுப்படுத்தப்பட்ட மின்சாரத்தை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த வழிவகுத்த அறிஞர் பெருமக்களுக்கு மனிதகுலம் என்றும் நன்றிகடன்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை